“பைஅத்துர் ரிள்வான்” –
அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட இறைபொருத்தத்திற்குரிய உடன்படிக்கை” (சிறு குறிப்பு)
ஷரீஅத் சட்டம் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும்
தன் உயிருக்கு நிகரான, உயிரை விட மேலான ஓர் அம்சமாகும்
முஸ்லிம் சமூகத்திற்கான பிரச்சனைகளில் ஒன்றிணைந்து செயல் பட வேண்டும்.
முஸ்லிம் ஒருவருக்கு ஏற்படுகிற எந்த ஒரு பிரச்சனையானாலும், முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படுகிற பிரச்சனையானாலும் சரி அதை அறிந்து கொண்டு எந்தெந்த வகையில் எல்லாம் உதவி செய்ய முடியுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் உதவி செய்ய முன்வர வேண்டும்.
அதிலும் குறிப்பாக, மார்க்கத்தோடு, ஈமானோடு தொடர்பில் இருக்கிற ஓர் காரியம் என்றிருந்தால் ஒன்று பட்டு, உடனடியாக குரல் கொடுக்க வேண்டும்.
وكان رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قبل الصلح قد بعث عثمان بن عفان إلى مكة رسولا، فجاء خبر إلى رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بأن أهل مكة قتلوه، فدعا رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حينئذ إلى المبايعة له على الحرب والقتال لأهل مكة، فروي أنه بايعهم على الموت. وروي أنه بايعهم على ألا يفروا. وهي بيعة الرضوان تحت الشجرة، التي أخبر الله تعالى أنه رضي عن المبايعين لرسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تحتها. وأخبر رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أنهم لا يدخلون النار. وضرب رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بيمينه على شماله لعثمان، فهو كمن شهدها. وذكر وكيع عن إسماعيل بن أبي خالد عن الشعبي قال: أول من بايع رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يوم الحديبية أبو سفيان الأسدي. وفي صحيح مسلم عن أبي الزبير عن جابر قال: كنا يوم الحديبية ألفا وأربعمائة، فبايعناه وعمر آخذ بيده تحت الشجرة وهي سمرة
ஹிஜ்ரி 6, துல்கஅதா மாதம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தாங்கள் கண்ட கனவின் அடிப்படையில் உம்ரா செய்ய 1400 தோழர்களுடன் மக்கா நோக்கி பயணமானார்கள்.
நபி {ஸல்} தங்களின் நிலையையும், நோக்கத்தையும் உறுதியாகத் தெளிபடுத்திக் கூறவும், குறைஷிகளிடம் ஒரு தூதரை அனுப்ப விரும்பியும் உமர் (ரலி) அவர்களை அழைத்தார்கள்.
ஆனால், உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அங்கு சென்ற பின் எனக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் எனக்காக களமிறங்கிப் போராடும் அதீ இப்னு கஅப் கிளையைச் சார்ந்த எவரும் அங்கில்லை. எனவே, உஸ்மான் (ரலி) அவர்களை அனுப்புங்கள். நீங்கள் விரும்பும் விஷயத்தை அவர் தான் சரியான முறையில் குறைஷிகளிடம் எடுத்து வைப்பார்!” என்று கூறினார்கள்.
நபியவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களை அழைத்து “நீர் குறைஷிகளிடம் சென்று, நாம் போருக்காக வரவில்லை; உம்ராவிற்காகத்தான் வந்திருக்கின்றோம் என்று எடுத்துச் சொல்லுங்கள்! பிறகு அவர்களை சத்திய தீனின் பக்கம் அழையுங்கள்! மேலும், மக்காவில் இருக்கும் முஸ்லிகளைச் சந்தித்து வெற்றி நமக்குத்தான் என்ற நற்செய்தியைக் கூறுங்கள்! அல்லாஹ் அவனது மார்க்கத்தை மிக விரைவில் மக்காவில் ஓங்கச் செய்வான்.
ஆகவே, யாரும் இறைநம்பிக்கையை மறைத்து வாழ வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்களிடம் சொல்லுங்கள்! என்று கூறினார்கள்.
உடனே, உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். வழியில் பல்தஹ் எனும் இடத்தை கடந்த போது சில குறைஷிகளை சந்தித்தார்கள். தங்களின் உரையாடலின் போது தாங்கள் மக்காவிற்கு செல்வதின் நோக்கத்தை குறைஷிகளிடம் தெரிவித்தார்கள் உஸ்மான் (ரலி) அவர்கள்.
அதற்கு குறைஷிகள் ”நீர் சொல்வதை நாங்கள் கேட்டு விட்டோம். நல்ல விஷயம் தான். நீர் உமது நோக்கத்தை நிறைவேற்ற மக்காவிற்குச் செல்லலாம்” என்றனர்.
கூட்டத்தில் இருந்த அபான் இப்னு ஸயீத் இப்னு அல் ஆஸ் என்பவர் எழுந்து உஸ்மான் (ரலி) அவர்களை வரவேற்று, பின்னர் தம் குதிரைக்கு கடிவாளமிட்டு அதில் தன் பின்னால் அமரவைத்து, அவர்களுக்கு அடைக்கலமும் கொடுத்து மக்காவிற்கு அழைத்து வந்தார்.
மக்கா வந்ததும் குறைஷித்தலைவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் ஆசையை உஸ்மான் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். ஆனால், நீங்கள் வேண்டுமானால் கஅபாவை வலம் வர அனுமதிக்கின்றோம். ஆனால், நபியவர்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். என்று குறைஷிகள் கூறிவிட்டனர்.
ஆனால், உஸ்மான் (ரலி) அவர்கள் நபிகளார் இல்லாமல் தாம் வலம் வர இயலாது என மறுத்து விட்டார்கள்.
குறைஷிகள் உஸ்மான் (ரலி) அவர்களை கையில் காப்பு இட்டு மக்காவில் ஓரிடத்தில் தடுத்து வைத்து விட்டனர். இந்த பிரச்சனையில் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கும் வரை உஸ்மான் அவர்களை அனுப்பாமல் தடுத்து வைத்திடுவோம் என அவர்கள் முடிவெடுத்தனர்.
ஆனால், உஸ்மான் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள் எனும் செய்தி மக்காவிலும், மக்காவிற்கு வெளியிலும் மிக விரைவாக பரவியது.
இப்படியே முஸ்லிம்களுக்கும் வந்து கிடைத்தது. இந்தச் செய்தி மாநபி {ஸல்} அவர்களிடம் சொல்லப்பட்ட போது “குறைஷியர்களிடம் போர் செய்யாமல் இவ்விடத்தை விட்டு நாம் நகரக்கூடாது.” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
மேலும், தங்களது தோழர்களைப் போருக்காக உடன்படிக்கை செய்து தர அழைத்தார்கள். ஸஹாபாக்கள் உயிர் இருக்கும் வரை போராடுவோம் என்பதாகவும், அதற்காக உயிரைக் கொடுக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் நபிகளாரிடம் ஒப்பந்தம் செய்தார்கள்.
அபூ ஸினான் அல் அஸதீ (ரலி) என்பவர்தான் முதன் முதலில் ஒப்பந்தம் செய்தார். ஸலமா இப்னு அக்வஃ (ரலி) அவர்களோ மூன்று முறை ஒப்பந்தம் செய்தார். அதாவது, மக்கள் ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்த போதும், பின்பு நடுவிலும், பின்னர் இறுதியிலும் ஒப்பந்தம் செய்தார்.
நபி {ஸல்} அவர்கள் தங்களின் ஒரு கையால் மற்றொரு கையைப் பிடித்துக் காட்டி “இந்தக் கை உஸ்மான் சார்பாக” என்று கூறினார்கள். அதாவது, உஸ்மான் (ரலி) உயிருடன் இருந்தால் இதிலும் பங்கெடுத்து இருப்பார் என்பதை உணர்த்தும் முகமாக நபிகளார் இதைச் செய்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ஒரு மரத்திற்கு கீழ் இந்த உடன்படிக்கையை வாங்கினார்கள்.
அப்போது உமர் (ரலி) அவர்கள் நபியின் கையைத் தாங்கி பிடித்து இருந்தார்கள்.
மஃகில் இப்னு யஸார் (ரலி) அவர்கள் மரத்தின் ஒரு கிளையைச் சாய்த்து நபிகளாருக்கு நிழல் தரும் வண்ணமாக பிடித்திருந்தார்கள்.
இந்த உடன்படிக்கையைத் தான் “பைஅத்துர் ரிள்வான்” – அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட இறைபொருத்தத்திற்குரிய உடன்படிக்கை” என இஸ்லாமிய வரலாறு சான்று பகர்கின்றது.
அல்லாஹ்வும், இது குறித்து திருமறையில்......
لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنْزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا (18)
“இறை நம்பிக்கையாளர்கள் உம்மிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டிருந்தபோது அல்லாஹ் அவர்களை குறித்து திருப்தி கொண்டான். அவர்களுடைய உள்ளங்களின் நிலைமைகளை அவன் அறிந்திருந்தான். இதனால், அவன் அவர்கள் மீது நிம்மதியை இறக்கியருளினான். விரைவில் கிடைக்கும் வெற்றியையும் அவர்களுக்கு வெகுமதியாக வழங்கினான்.” என்று (அல்குர்ஆன்:48:18). குறிப்பிடுகின்றான்.
நிலைமை இவ்வாறிருக்க, முஸ்லிம்கள் தங்கள் மீது பயங்கரமான முறையில் போர் தொடுக்க ஆயத்தமாகி விட்டார்கள். எனும் செய்தி குறைஷிகளுக்குத் தெரியவரவே, இனியும் உஸ்மான் (ரலி) அவர்களை தடுத்து வைத்திருப்பது தங்களுக்கு நல்லதல்ல என்று கருதி உஸ்மான் (ரலி) அவர்களை விடுதலை செய்துவிட்டனர்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும், நபித்தோழர்களும் புறப்பட்டு சில எட்டுக்கள் தான் வைத்திருப்பார்கள். அதற்குள் உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கே வந்து விடுகின்றார்கள்.
( நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ, 9/100-102, தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:199. )
உஸ்மான் (ரலி) அவர்களை மாநபி {ஸல்} அவர்கள் மார்க்க சம்பந்தமான ஓர் பணிக்கே அனுப்பினார்கள்.
அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்று அறிந்ததும், அல்லது கேள்வி பட்டதும் உடனடியாக அந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள ஆயத்தமானார்கள்.
முதலில் தாங்கள் அதற்காக எதையும் சந்திக்கத் தயார் என்றார்கள். பின்னர், வந்திருந்த அனைவரையும் ஒன்றிணைத்தார்கள்.
ஷரீஅத் சட்டம் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தன் உயிருக்கு நிகரான, உயிரை விட மேலான ஓர் அம்சமாகும் எனவே, அதற்காக ஒன்றிணைவது, போராடுவது அனைத்துமே தார்மீக அடிப்படையில் கடமையாகும்.
No comments:
Post a Comment