Friday, 7 February 2020

அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவோம்...

நமக்கு வழங்கப்பட்ட ஓர் நிஃமத் நம்மை விட்டும் போய் விடுகிறது, 

அல்லது இன்னொருவரின் கையில் சென்று விடுகிறது என்றால் அதற்கான காரணம் என்ன?

அல்லாஹ் குர்ஆனில் தெளிவு படுத்துகின்றான்…..

ذَلِكَ بِأَنَّ اللَّهَ لَمْ يَكُ مُغَيِّرًا نِعْمَةً أَنْعَمَهَا عَلَى قَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ وَأَنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ ()

“எந்தச் சமுதாயத்தாரும் தங்களின் நடைமுறையை மாற்றிக் கொள்ளாத வரை, நிச்சயமாக! அல்லாஹ்வும் அவர்களுக்குப் புரிந்த எந்த ஓர் அருட்கொடையையும் மாற்றுவதில்லை”.                                            

( அல்குர்ஆன்: 8: 53 )

وَإِنْ تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ

“நீங்கள் (அல்லாஹ்வை) புறக்கணித்து விட்டால், அல்லாஹ் உங்களுடைய இடத்தில் வேறு ஒரு சமுதாயத்தைக் கொண்டு வருவான்”.   

( அல்குர்ஆன்: 47 : 38 )

எனவே, நமக்கு ஏற்பட்டிருக்கிற இழப்பு ஒரு வகையில் நம்மால் ஏற்பட்டிருப்பது தான்.

அல்லாஹ் பனூ இஸ்ரவேலர்கள் குறித்து அல்குர்ஆனில் பல இடங்களில் சிறப்பித்துக் கூறுகின்றான்.

يَا بَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِيَ الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَنِّي فَضَّلْتُكُمْ عَلَى الْعَالَمِينَ ()

“இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! நான் உங்களுக்கு வழங்கியிருந்த என் அருட்கொடையையும், உங்களை நான் உலகத்தோர் அனைவரிலும் மேன்மையாக்கி வைத்திருந்ததையும் நினைவு கூர்ந்து பாருங்கள்”.              

( அல்குர்ஆன்: 2: 47 )

وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ ()

“மூஸா தம் சமூகத்தாரிடம் கூறியதை நினைவு கூறுங்கள்! “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை எண்ணிப்பாருங்கள்! அவன் உங்களிடையே நபிமார்களைத் தோற்றுவித்தான், உங்களை ஆட்சியாளர்களாகவும் ஆக்கினான், மேலும், உலக மக்களில் வேறு எவருக்கும் வழங்கப்படாதவற்றை எல்லாம் வழங்கினான்”.     

( அல்குர்ஆன்: 5: 20 )

وَنُرِيدُ أَنْ نَمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ ()

“மேலும், பூமியில் (ஃபிர்அவ்னால்) எவர்கள் ஒடுக்கப்பட்டிருந்தார்களோ அவர்கள் மீது நாம் அருள் புரியவும், அவர்களைத் தலைவர்களாகவும், அவர்களை வாரிசுகளாக்கி பூமியில் ஆட்சியதிகாரத்தை அவர்களுக்கு வழங்கிடவும் நாம் நாடியிருந்தோம்”.                                             

( அல்குர்ஆன்: 28: 5 )

இறுதியில், அவர்களிடம் இருந்து அல்லாஹ் தலைமைத்துவத்தைப் பறித்தான், நாடோடிகளாக ஆக்கினான், இழிவான சமுதாயமாக ஆக்கினான்.

என்ன காரணம், அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைப் புறக்கணித்தார்கள், அல்லாஹ்வை விமர்சித்தார்கள், நபிமார்களைக் கொன்றார்கள், அல்லாஹ்வின் வேதத்தில் விளையாடினார்கள், இன்னும் பலவாறாக நடந்து கொண்டார்கள்.

உலக மக்களிலேயே மிகச் சிறந்த சமுதாயம் என அல்லாஹ்வால் அழைக்கப் பட்ட ஓர் சமூகத்தின் நிலையை மாற்றிட காரணமாக அமைந்தது அவர்களின் அல்லாஹ்விற்கெதிரான நடைமுறை தான் என அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் விவரிக்கின்றான்.

No comments:

Post a Comment