ஸஹாபி பெண்மனி
உம்மு அம்மாரா (ரலி)….
உம்மு அம்மாரா (ரலி) என்றும் உம்மு உமாரா (ரலி) என்றும் வரலாறு அறிமுகப்படுத்துகிற தியாக மங்கை நுஸைபா பிந்த் கஅபுல் மாஸினிய்யி அவர்கள் நபி {ஸல்} அவர்கள் வாழ்கிற போதும் நபி {ஸல்} அவர்கள் மரணித்த பின்னரும் அனைத்து யுத்தகளங்களிலும் மருத்துவப் பணிகளிலே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.
நபித்துவத்தின் 13 –ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது அகபாவில் கணவர் ஜைத், தங்களது இரு மகன்களான அப்துல்லாஹ் இப்னு ஜைத், ஹபீப் இப்னு ஜைத் ஆகியோருடன் குடும்பம் சகிதமாக வந்து அண்ணலாரைச் சந்தித்து தூய இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டதோடு மாத்திரமல்லாமல் பிரசித்தி பெற்ற பைஅத் வாக்குப் பிரமாணத்திலும் குடும்பம் சகிதமாக கலந்து கொண்டு உறுதி பூண்ட பெருமைக்குரியவர் உம்மு அம்மாரா (ரலி) அவர்கள்.
தாம் ஏற்றுக் கொண்ட இஸ்லாத்திற்காக தாம் எப்போதும் எதையும் குடும்பம் சகிதமாக இழக்க முன் வரும் முழு சிந்தனையோடே தங்களின் வாழ்க்கையை கழித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கான தருணத்தையும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள்.
சில யுத்தகளங்களிலே வாளெடுத்து வீர தீர செயல்களிலே ஈடுபட்டு, எதிரிகளின் பல பேர்களை காயப்படுத்தியதும் உண்டு.
குறிப்பாக உஹத் மற்றும் யமாமா யுத்தகளங்களில் வீர மங்கையாக பரிணமித்து பல விழுப்புண்களை தியாகச் சுவடுகளாக தாங்கியும் இருக்கின்றார்கள்.
யமாமா யுத்தத்திலே ஒரு கையையே இழந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் எனும் வதந்தியால் உஹத் யுத்தகளத்தின் நிலைமைகள் முற்றிலுமாய் மாறிப்போயிருந்த தருணம் அது…
நபித்தோழர்களில் பலர் எதிரிகளின் தாக்குதல் தாங்க முடியாமல் யுத்த களத்தின் நாலாபுறமும் சிதறி ஓடிக்கொண்டிருந்தனர்.
இந்த வதந்தியைக் கேட்ட மாத்திரத்தில் யுத்தகளத்தின் நடுப்பகுதியிலிருந்து தங்களது குடும்பம் சகிதமாக அண்ணலாரைத் தேடும் பணியில் ஈடுபட்டார்கள்.
ஆம்! உஹத் யுத்தகளத்தில் அவர்களின் கணவர் ஸைத் இப்னு ஆஸிம் (ரலி) மற்றும் அவர்களின் இரு மகன்களான ஹபீப் இப்னு ஸைத், அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி – அன்ஹுமா) ஆகியோரோடு கலந்து கொண்டார்கள்.
இறுதியாக, அண்ணலாரின் இருப்பிடத்தைக் கண்டதும், அண்ணலார் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை அறிந்ததும் எல்லையில்லா ஆனந்தம் அடைந்தார்கள்.
ஆச்சர்ய மேலீட்டால் ”இதோ அண்ணலார் உயிரோடு இங்கே உயிரோடு இருக்கின்றார்கள்” என்று உஹத் யுத்தகளம் முழுமையும் கேட்கும் அளவுக்கு சப்தமாகக் கூறினார்கள்.
قال ابن إسحاق فلما عرف المسلمون رسول الله صلى الله عليه وسلم نهضوا به ونهض معهم نحو الشعب معه أبو بكر الصديق وعمر بن الخطاب وعلى بن أبي طالب وطلحة بن عبيد الله والزبير بن العوام وسعد بن أبي وقاص وابو دجانة وزياد بن السكن والحارث بن الصمة وأم عمارة نسيبة بنت كعب المازنية ورهط من المسلمين رضوان الله عليهم.
இதே நேரத்தில், எதிரிகள் அண்ணலாரைத் தாக்கிட ஆயத்தமானார்கள். அப்போது அண்ணலாருக்கு அருகே நாலா புறங்களிலும் அரணாக தங்களை அமைத்து அண்ணலாரை காக்கும் பணியில் சில நபித்தோழர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அதில் தங்களையும் ஒருவராக வீர மங்கை உம்மு உமாரா (ரலி) அவர்கள் இணைத்துக் கொண்டார்கள்.
عن عمر قال سمعت رسول الله صلى الله عليه و سلم يقول ما ألتفت يوم أحد يمينا ولا شمالا إلا وأراها تقاتل دوني.
மாநபி {ஸல்} அவர்கள் தங்களைக் காக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு சுழன்று சுழன்று போராடிய உம்மு உமாரா (ரலி) அவர்களைப் பார்த்து “உஹத் யுத்தகளத்தில் என்னைச் சுற்றி வலப்புறத்திலும், இடப்புறத்திலும் உம்மு உமாரா (ரலி) அவர்கள் போராடியதைப் போன்று வேறெவரும் போராட நான் பார்க்க வில்லை” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
கிட்டத்தட்ட 13 – க்கும் மேற்பட்ட காயங்களோடு அம்மையார் போராடிக் கொண்டிருக்க இப்னு கமீஆ என்பவன் வாள் கொண்டு வீசி அம்மையாரின் தோள்பட்டையை காயப்படுத்தி விட்டான்.
அந்தக் காயம் அதிக வேதனையைத் தரவே அண்ணலாரை நோக்கி மெல்ல தவழ்ந்து, தவழ்ந்து வந்தார்கள். அண்ணலாரின் அருகே வந்ததும் ”அல்லாஹ்வின் தூதரே! என் கணவர், இருமகன்கள், நான் உட்பட அனைவரும் நாளை மறுமையில் சுவனத்தில் உங்களோடு தோழமை பெற்றிட துஆ செய்யுங்கள்” என்று வேண்டினார்கள்.
أن رسول الله صلى الله عليه وسلم قال : اللَّهُمَّ اجْعَلْهُم رُفَقَائِي فِي الجَنَّةِ
உடனடியாக, உம்மு உமாராவுக்காக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “யாஅல்லாஹ் இவர்கள் அனைவரையும் சுவனத்தில் என்னுடன் இருப்பவர்களாய் ஆக்கியருள் புரிவாயாக!” என்று பிரார்த்தனை செய்தார்கள்.
இதனைக் கேட்ட உம்மு உமாரா (ரலி) அவர்கள் அளவிலா மகிழ்ச்சி அடைந்தார்கள்.
( நூல்: ஸீரத் இப்னு ஹிஷாம், ஸியரு அஃலா மின் நுபலா, தபகாத் இப்னு ஸஅத் )
No comments:
Post a Comment