Saturday, 25 January 2020

அடிநாக்கு அழற்சிக்கும் விலா வலிக்கும் கோஷ்டக் குச்சி...

அடிநாக்கு அழற்சிக்கும் விலா வலிக்கும் கோஷ்டக் குச்சி:

عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ قَالَتْ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: عَلَيْكُمْ بِهَذَا الْعُودِ الْهِنْدِيِّ, فَإِنَّ فِيهِ سَبْعَةَ أَشْفِيَةٍ. يُسْتَعَطُ بِهِ مِنْ الْعُذْرَةِ, وَيُلَدُّ بِهِ مِنْ ذَاتِ الْجَنْبِ (بخارى-5692)

உம்மு கைஸ் பின் மிஹ்ஸன் (ரளி) அறிவிக்கிறார்கள்: '

நீங்கள் இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள்.

 ஏனெனில், அதில் ஏழு நிவாரணங்கள் உள்ளன.

 அடிநாக்கு அழற்சிக்காக அதை(த் தூளாக்கி எண்ணையில் குழைத்து) மூக்கில் சொட்டு மருந்தாக இடப்படும். (மார்புச் தசை வாதத்தால் ஏற்படும்) விலா வலிக்கு அதை வாயின் ஒரு பக்கத்தில் சொட்டு மருந்தாக கொடுக்கப்படும்.

 (புகாரி-5692)

நறுமணப் பொருளாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படும் ஒரு வகை மரமே (ஊது) கோஷ்டம் அல்லது கோட்டம் (Costus Root) என்பது. இம்மரம் இமய மலையின் வடமேற்கு நாடுகளில் பயிராகிறது. 

இது இரு வகைப்படும்.

 1. இந்தியக் கோஷ்டம் (செய் கோஷ்டம்). இது கறுப்பாகவும் அதிக வெப்பமுள்ளதாகவும் இருக்கும். 

2. கடல் கோஷ்டம் (வெண்கோஷ்டம்). இது வெண்மையானதாக இருக்கும். இதன் குச்சியில் நெருப்பிட்டு வாசனைப் புகை பிடிக்கலாம். இதை ஊறவைத்து அதன் சாற்றைத் தண்ணீர், அல்லது தேனுடன் குடிக்கலாம். இதைத் தேய்த்து பத்துப் போடவும் செய்யலாம். இதைப் பொடியாக்கி அதன் தூளைப் பயன்படுத்தவதும் உண்டு. கோஷ்டத்தால் அநேக மருத்துவப் பலன்கள் உள்ளன. 

இந்த ஹதீஸில், கோஷ்டத்தில் ஏழு வகை நிவாரணங்கள் உள்ளதாக நபி (ஸல்) அவர்கள் தெரிவிக்கிறார்கள். தொண்டை வலிக்கும், மார்புச் சதை வாதத்தால் ஏற்படும் விலா வலிக்கும் (Pleurodynia) கோஷ்டம் நிவாரணியாகும்.

மாதவிடாய் போக்கையும் சிறுநீர் ஓட்டத்தையும் கோஷ்டம் சீராக்கும். குடற்புழுக்களைக் கொல்லும், விட்டுவிட்டு வரும் காய்ச்சல் (Quartan Fever), தோலைச் சிவக்க வைக்கும் கடுமையான காய்ச்சல் (Rose Fever) ஆகியவற்றுக்கும் கோஷ்டம் சிறந்த நிவாரணியாகும். 

இரப்பையைச் சூடாக்கிச் சீர்படுத்தும், முகப்பரு மற்றும் தேமலைப் போக்கும்.

 (நூல்: ஃபத்ஹுல் பாரி) 

கோஷ்ட வேரை மென்றாலோ, காய்ச்சி வாய் கொப்பளித்தாலோ, வாய் நாற்றம் அகலும். நீருடன் கலந்து அதை அருந்தினால் நுரையீரல் வலி, விலா வலி, குடற்புண் ஆகியவற்றுக்கு நல்லது. 5 கிராம் அளவு கோஷ்ட வேரைச் சாப்பிட்டால் இரைப்பை அழற்சிக்கு நிவாரணம் கிடைக்கும்.

 (நூல்: உம்ததுல் காரீ)

No comments:

Post a Comment