Wednesday, 7 June 2017

வேதனைப் படுத்துகிற எதையும் இஸ்லாம் கலாச்சாரமாக விதைக்காது….

வேதனைப் படுத்துகிற எதையும் இஸ்லாம் கலாச்சாரமாக விதைக்காது….

روى الدارقطني عن ابن عباس قال: لما انصرف المشركون عن قتلى أحد انصرف رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فرأى منظرا ساءه، رأى حمزة قد شق بطنه، واصطلم أنفه، وجدعت أذناه، فقال:" لولا أن يحزن النساء أو تكون سنة بعدي لتركته حتى يبعثه الله من بطون السباع والطير لأمثلن مكانه بسبعين رجلا"

உஹத் யுத்தகளத்தை மாநபி {ஸல்} அவர்கள் யுத்தம் முடிந்து ஷஹீத்களை பார்வையிட்டு வருகிற பொழுது, ஒரு உடலின் அருகே மாநபி {ஸல்} அவர்கள் ஸ்தம்பித்து நின்று விடுகின்றார்கள். நெஞ்சு பொறுக்காமல் அழுகின்றார்கள்.

ஆம்! அஸதுல்லாஹ் ஹம்ஜா (ரலி) அவர்களின் வீர மரணம்! மாநபி {ஸல்} அவர்களை ஓர் உலுக்கு உலுக்கிற்று!

வயிறு கிழிக்கப்பட்டு, குடல்கள் எல்லாம் அறுக்கப்பட்டு, மூக்கு சிதைத்து, காதுகளை கிழித்து, தலையை கொய்து, மண்டை ஓட்டை பிய்த்து எடுத்து மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த ஹம்ஜா (ரலி) அவர்களின் உடலைப் பார்த்த மாநபி {ஸல்} அவர்கள்.....

“ பெண்கள் கவலை கொள்வார்கள் எனும் அச்சம் எனக்கு இல்லை எனில், எனக்குப் பிறகு இந்த நடைமுறை காலம், காலமாக பின்பற்றப்பட்டு விடுமோ எனும் அச்சம் எனக்கு இல்லாதிருக்குமானால்,

என் பெரிய தந்தையே! உங்களின் இந்த உடலை இந்த வனாந்தரத்திலேயே விட்டு விட்டுச் சென்று விடுவேன்! நாளை மஹ்ஷ்ரில் அல்லாஹ் மக்களை அவர்களின் புதைகுழிகளில் இருந்து எழுப்பும் போது, அவர்கள் அங்கிருந்து எழுந்து வரும்போது, நீங்கள் இந்த வனாந்தரத்தில் விடப்பட்ட பின்னர் உங்களை தின்ற வனவிலங்குகளின் வயிறுகளில் இருந்து மஹ்ஷரை நோக்கி வருவதை நான் விரும்பி இருப்பேன்! இப்போது சொல்கின்றேன்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதே போன்று எதிரிகளின் எழுபது பேர்களை சிதைக்காமல் விட மாட்டேன்” என சபதமெடுத்து விட்டு, கஃபன் செய்து மாநபி {ஸல்} அவர்கள் அங்கேயே ஓரிடத்தில் அடக்கம் செய்தார்கள்.

அந்த இடத்திலேயே மாநபி {ஸல்} அவர்களுக்கு அல்லாஹ்….

وَإِنْ عاقَبْتُمْ فَعاقِبُوا بِمِثْلِ ما عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ ()

“நீங்கள் தண்டிக்க வேண்டும் என விரும்பினால் உங்களை அவர்கள் எவ்வாறு தண்டித்தார்களோ அவ்வாறே தண்டித்து விடுங்கள் நபியே! மாறாக, நீங்கள் பொறுமை காத்தீர்கள் என்றால் அதுவே பொறுமையாளர்களுக்கு மிகச் சிறந்ததாகும்” என இறைவசனத்தை இறக்கியருளினான்.

அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சபதத்தை முறித்துக் கொண்டு, சத்தியத்திற்கான பரிகாரத்தைச் செய்தார்கள்.
 ( நூல்: தஃப்ஸீர் குர்துபீ, இப்னு கஸீர் )

No comments:

Post a Comment