அல்லாஹ் தன்னை வணங்குவதற்காக மனித சமுதாயத்திற்கு சில வணக்கங்களைக் கடமையாக ஆக்கியுள்ளான். இந்தக் கடமையான வணக்கங்களை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும். அவ்வாறு நிறைவேற்றும் போது அதற்காக அல்லாஹ் நற்கூலியும், அவற்றை நிறைவேற்றாதவர்களுக்குத் தண்டனையும் வழங்குகின்றான்.
ஒரு மனிதர் அல்லாஹ்விடத்தில் தன்னுடைய அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்காக உபரியான வணக்கங்களைச் செய்து கொள்வதற்கு மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளதோடு ஆர்வமூட்டியும் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இது போன்ற உபரியான வணக்கங்களை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: யார் எனது நேசரை பகைத்துக் கொள்கிறாரோ அவருடன் நான் போர் தொடுக்கின்றேன். நான் என் அடியான் மீது கடமையாக்கியிருக்கும் வணக்கத்தின் மூலமாகவே என் அடியான் எனக்கு நெருக்கமாகின்றான். அதுவே எனக்குப் பிரியமான வணக்கமாகும். எனது அடியான் உபரியான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அதன் பயனாக அவனை நான் நேசிக்கிறேன். நான் அவனை நேசிக்கும் போது அவன் செவியுறுகின்ற செவியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும்,அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகி விடுகின்றேன். அவன் என்னிடம் கேட்டால், நான் அவனுக்குக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் பாதுகாவல் தேடினால் பாதுகாப்பு அளிக்கிறேன். முஃமினுடைய உயிரைக் கைப்பற்றும் போது அடையும் சங்கடத்தைப் போன்று நான் செய்கின்ற வேறு எந்தக் காரியத்திலும் நான் சங்கடம் அடைவதில்லை. (ஏனெனில்) என் அடியான் மரணத்தை வெறுக்கின்றான். நான் அவனுக்கு வேதனை அளிப்பதை வெறுக்கிறேன்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி
உபரியான வணக்கங்கள் புரிவது இறைவனிடம் நெருக்கத்தை அதிகப்படுத்தி நமது தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்வதற்கு வழி வகுக்கும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.
கடமையான வணக்கங்களை நிறைவேற்றும் போது மனிதர்கள் என்ற முறையில் குறைபாடுகள் ஏற்படலாம். இந்தக் குறைபாடுகள் அல்லாஹ்விடத்தில் நம்மைக் குற்றவாளிகளாக ஆக்கி விடக்கூடாது. எனவே கடமையான வணக்கங்களில் ஏற்படும் குறைகளுக்கு ஒரு பரிகாரம் தேவைப்படுகிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த வழியில் உபரியான வணக்கங்கள் புரிவது கடமையான வணக்கங்களில் ஏற்படும் குறைகளை ஈடுசெய்வதாக அமைந்துள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: நிச்சயமாக ஓர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றித் தான் விசாரிக்கப்படுவான். அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும். அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி, "என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள். பிறகு ஸக்காத்தைப் பாருங்கள். மற்ற வணக்கங்களையும் இதே கணக்கின் அடிப்படையில் பார்த்து நிறைவாக்குங்கள்" என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அறிவிப்பவர் : தமீமுத் தாரி (ரலி),
நூல் : தாரமீ
கடமையான வணக்கங்களில் ஏற்படும் குறைகளை உபரியான வணக்கங்கள் நீக்கி விடுவதுடன் இறைவனிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்துபவையாகவும் அமைந்துள்ளன. எனவே கடமையான வணக்கத்தை நிறைவேற்றி விட்டோம் என்று அலட்சியமாக இருந்து விடாமல் உபரியான வணக்கங்களையும் நிறைவேற்றி அல்லாஹ்வின் அருளைப் பெற்றவர்களாக நாம் ஆக வேண்டும்.
இஸ்லாம் கூறும் வணக்க வழிபாடுகளில் முதன்மையானது தொழுகை என்பதை அறிவோம். அந்த அடிப்படையில் அன்றாடம் ஐவேளை தொழுவது ஒவ்வொருவருக்கும் கட்டாயக் கடமையாகும். இவை தவிர உபரியான தொழுகைகளையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு கடமையான தொழுகைக்கும் முன்போ,அல்லது பின்போ வழமையாக சுன்னத் தொழுகைகளை தொழுது வந்துள்ளனர். அந்தத் தொழுகைகளைப் பற்றியும் அவற்றின் சிறப்புகளையும் பார்ப்போம்.
யார் இரவிலும், பகலிலும் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுகின்றாரோ அவருக்காக சுவனத்தில் ஒரு வீடு கட்டப்படுகின்றது என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர் : உம்மு ஹபீபா (ரலி),
நூல் : முஸ்லிம்
லுஹருக்கு முன் நான்கு ரக்அத்துக்கள், லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்துக்கள், மக்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்துக்கள், இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்துக்கள், பஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்துக்கள் ஆகிய சுன்னத்தான பன்னிரண்டு ரக்அத்துகளை யார் தொழுகின்றார்களோ அவருக்காக சுவனத்தில் ஒரு வீடு கட்டப்படுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) ,
நூல் : திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா
நபி (ஸல்) அவர்கள் பஜ்ருடைய சுன்னத் அளவிற்கு வேறு எந்த உபரியான தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி
பஜ்ருடைய இரண்டு ரக்அத்துகள் இந்த உலகம் இன்னும் அதில் உள்ளவை அனைத்தை விடவும் மிகச் சிறந்தவையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : முஸ்லிம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருவரை சுபுஹுக்குப் பின் இரண்டு ரக்அத்துகள் தொழக் கண்டார்கள். அப்போது அவர்கள், "சுபுஹ் தொழுகை இரண்டு ரக்அத்துகள் தான்" என்று சொன்னார்கள். அதற்கு அவர், "சுபுஹுக்கு முந்திய இரண்டு ரக்அத்துகளைத் தொழவில்லை. அவ்விரண்டையும் இப்போது தொழுதேன்" என்று பதிலளித்ததும், நபி (ஸல்) அவர்கள் மவ்னமாகி விட்டார்கள்.
அறிவிப்பவர் : கைஸ் பின் அம்ர் (ரலி),
நூல் : திர்மிதீ, அபூதாவூத்
யார் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்துகளைத் தொழவில்லையோ அவர் அவ்விரு ரக்அத்துகளையும் சூரியன் உதித்த பின் தொழுவாராக என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : திர்மிதி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகைக்கு முன் நான்கு ரக்அத்துகளையும், ஃபஜ்ரு தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்துகளையும் விடவே மாட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி
யார் லுஹருக்கு முன்பு நான்கு ரக்அத்துகளும் பின்பு நான்கு ரக்அத்துகளும் தொழுகின்றாரோ அவருக்கு நரகத்தை அல்லாஹ் தடுத்து விடுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர் : உம்மு ஹபீபா (ரலி),
நூல் : திர்மிதி
அஸருக்கு முன் நான்கு ரக்அத்துகள் தொழும் மனிதருக்கு அல்லாஹ் அருள் செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் : திர்மிதீ, அபூதாவூத், இப்னு மாஜா
மக்ரிபுக்கு முன் நீங்கள் தொழுங்கள். மக்ரிபுக்கு முன் தொழுங்கள். மக்ரிபுக்கு முன் விரும்பியவர்கள் தொழுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அதை ஒரு சுன்னத்தாகக் கருதக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் அல் முஸ்னி (ரலி),
நூல் : புகாரி
நான் உக்பா பின் ஆமிர் (ரலி) யிடம் சென்று, "அபூதமீம் மக்ரிபுக்கு முன் இரண்டு ரக்அத் தொழுகிறார்களே! இது உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் இவ்வாறு செய்து வந்தோம்" என்று விடையளித்தார்கள். "இப்போது ஏன் விட்டு விட்டீர்கள்?" என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், "அலுவல்களே காரணம் என்றார்கள்.
அறிவிப்பவர் : மர்ஸத் பின் அப்துல்லாஹ்,
நூல் : புகாரி
நபி (ஸல்) அவர்கள் மக்ரிபுக்கு முன் சுன்னத் தொழுவதை வலியுறுத்திச் சொல்லவில்லை என்றாலும் விரும்பியவர்கள் தொழுமாறு கட்டளை இட்டுள்ளார்கள். ஆனால் இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மக்ரிபுக்கு முன்னால் சுன்னத் தொழுவது நடைமுறையில் இல்லை.
குறிப்பாக ஹனபி மத்ஹபில் மக்ரிப் பாங்கு சொல்லப் பட்டவுடனேயே இகாமத்தும் சொல்லி தொழுகையைத் துவக்கி விடுகின்றனர். இதனால் யாரும் முன் சுன்னத் தொழ முடியாத நிலை ஏற்படுகின்றது. இது நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாற்றமானதாகும். மற்ற தொழுகைகளைப் போல் மக்ரிபுடைய பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையில் முன் சுன்னத் தொழுவதற்கான இடைவெளியை ஏற்படுத்துவது அவசியமாகும்.
ஒவ்வொரு பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையில் ஒரு தொழுகை உண்டு. விரும்பியவர்கள் தொழலாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகப்பல் (ரலி),
நூல் : புகாரி, முஸ்லிம்
நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுது விட்டு என்னிடம் வந்து நான்கு அல்லது ஆறு ரக்அத்துகள் ஒரு போதும் தொழாமல் இருந்ததில்லை.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : அஹ்மது, அபூதாவூத்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜும்ஆவில்) உரையாற்றிக் கொண்டிருக்கும் போது ஸுலைக் அல் கத்பானி வந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், "நீ வருவதற்கு முன் இரண்டு ரக்அத்துகள் தொழுதாயா?" என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். "நீ இரண்டு ரக்அத்துகளைச் சுருக்கமாகத் தொழுது கொள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா, ஜாபிர் (ரலி),
நூல் : இப்னு மாஜா
இப்னு உமர் (ரலி) ஜும்ஆ தொழுகையை நீட்டித் தொழுவார்கள். ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்துகளை தன் வீட்டில் தொழுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைச் செய்தார்கள் என்றும் கூறுவார்கள்.
அறிவிப்பவர் : நாபிஃ , நூல் : அபூதாவூத்
உங்களில் ஒருவர் ஜும்ஆ தொழுதால் அதன் பின்பு நான்கு ரக்அத்துகள் தொழுவாராக என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம், திர்மிதி, நஸயீ
இந்த அடிப்படையில் கடமையான தொழுகைகளின் முன், பின் சுன்னத் தொழுகைகளை பேணி தொழுவோமாக!
No comments:
Post a Comment