Monday, 20 April 2015

நபிகளாரின் பொன்மொழிகள்

நபித்தோழர் அபூதர்ரில் கிஃபாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : என்னுடைய நேசர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு ஏழு கட்டளைகளை உபதேசித்தார்கள். ஏழைகளை நேசிக்கவேண்டும், அவர்களுடன் நெருக்கமாக இருக்கவேண்டும், உனக்குக் கீழ் நிலையில் உள்ளவர்களைப் பார்த்து நன்றி செலுத்தவேண்டும், யாரிடத்திலும் எந்தத் தேவையையும் கேட்காமல் இருக்கவேண்டும், இரத்த உறவினர்களைச் சேர்ந்து வாழவேண்டும், அல்லாஹ்வுடைய விஷயத்தில் யாருடைய ஏச்சுப்பேச்சுக்களையும் பயப்படக்கூடாது. “லாஹவ்ல வலா குவ்வத இல்லாபில்லாஹ்” என்பதை அதிகம் கூறிக்கொண்டிருக்க வேண்டும். அது அல்லாஹ்வுடைய அர்ஷின் கீழ் உள்ள பொக்கிஷத்திருந்து உள்ளதாகும்.
(நூல் : அஹ்மத், தப்ரானி)
இந்த அறிவுரைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறந்த நபித்தோழர்களில் ஒருவரான அபுதர்ரில் கிஃபாரி அவர்களுக்கு கட்டளையிட்டாலும், இவை ஒவ்வொரு இறைநம்பிக்கையாளனும் தனது வாழ்வில் கடைபிடிக்க வேண்டியவையாகும். சிறந்த பண்புடனும், தன்னம்பிக்கையுடனும் மனிதன் வாழ்விற்குத் தேவையான விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன. எல்லாமே மணிமொழிகள். தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்கும்போது சமூகத்தில் அமைதிநிலவும். ஒற்றுமை மலரும்.
முதல் அறிவுரையாக ஏழைகளை நேசிக்க வேண்டும் என்றும், அவர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டுமென்றும் கூறியிருப்பது, கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். பொருளாதரத்தில் நலிந்து அடிமட்டத்தில் இருக்கின்றவர்களுக்கு கைகொடுத்து தூக்கிவிடவேண்டும் என்பதிலும், ஏழை என்பதற்காக சமுதாயத்தில் உள்ள வசதி வாய்ப்புடையவர்கள் அவர்களை ஒதுக்கிவிடக்கூடாது. அவர்களுடன் நெருங்கிப் பழகவேண்டுமென்பதிலும் அல்லாஹ்வின் தூதர் அக்கரை காட்டி, நலிவுற்ற சமூகத்தைப் பற்றி கவலைப்பட்டுள்ளார்கள் என்பதை உணரமுடிகிறது. பொருளாதாரத்தில் தனக்குக்கீழ் நிலையில் உள்ளவர்களையே பார்க்கவேண்டும். அப்போதுதான் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் நிலை ஏற்படும். முடிந்த அளவிற்கு தன்னுடைய தேவையைதானே நிறைவேற்றக்கூடியவர்களாக இருக்கவேண்டும். குடும்ப உறவினர்களுடன் நெருக்கமாகவும், அன்புடனும், பாசத்துடனும் பழகவேண்டும், அவர்களை வெறுக்கக்கூடாது, எங்கும் யாரிடத்திலும் உண்மையை துணிச்சலோடு கூறவேண்டும். அதில் தயக்கம்காட்டக்கூடாது. அல்லாஹ்விற்காக நாம் வாழும்போதும், அவனுடைய கட்டகளைகளை நமது வாழ்வில் கடைபிடிக்கின்றபோதும் அதைப்பார்த்து ஏளனம் செய்கின்ற, வசைபாடுகின்ற யாரைப்பற்றியும் அலட்டிக்கொள்ளவேண்டியதில்லை. அல்லாஹ்வின் வல்லமையையும், அவனுடைய ஆற்றலையும் நினைத்துப்பார்த்து, அவனை அதிகமதிகம் தியானம் செய்யவேண்டும். இந்த நெறிமுறைகளை மனிதசமூகம் எல்லோரும் தங்கள் வாழ்வில் கடைபிடிக்கின்றபோது, வாழ்க்கையில் நிம்மதியும் சுபிட்சமும் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment