Monday, 20 April 2015

அல்லாஹ்வின் அருள்மறை

அல்லாஹ் கூறுகிறான்:
“அல்லாஹ் மிக அழகான செய்தியை வேதமாக இறக்கினான். இவை முரண்பாடில்லாமல் ஒன்றுக்கொன்று ஒப்பானதாகவும் இருக்கின்றன. (பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன. தங்கள்இறைவனை எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தோல்களின் உரோமக்கால்கள் (இவற்றைக் கேட்கும்போது) சிலிர்த்துவிடுகின்றன. பிறகு அவர்களுடைய தோல்களும், இதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும். இதன்மூலம் தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால் எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகின்றானோ அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை.
(அல்குர்ஆன் : 39 : 23)
மனிதகுலம் நேர்வழி பெறவேண்டும் என்பதற்காக வல்ல இறைவன் இறக்கி அருளிய வேதமான பரிசுத்த குர்ஆனை வல்லஅல்லாஹ்தானே புகழ்ந்து பாராட்டி கூறுகிறான். அதை அழகானது என வர்ணிக்கின்றான். அதனுடைய சொல் அமைப்பிலும், இலக்கண நயத்திலும், கருத்து செரிவிலும், ஈர்க்கும் தன்மையிலும், அது அழகானதாக அமைந்துள்ளது. அதிலே எந்தவிதமான முரண்பாடும் காணமுடியாது. சில வசனங்கள் மற்றசில வசனங்களுக்கு எல்லா அம்சங்களிலும் ஒப்பானதாக அமைந்துள்ளது. இலக்கியநயத்தில் ஒன்றை ஒன்று மின்சும் விதத்தில் உள்ளது. எந்த இடத்தில் அது கலந்திருந்தாலும் குர்ஆன் வசனங்களை தனியாக கண்டுபிடித்துவிடமுடியும். இப்படிப்பட்ட கட்டமைப்பு திருக்குர்ஆன் வசனங்களுக்கு மட்டுமே உள்ளது.
வரலாறுகளையும், மனித சமூகம் படிப்பினை பெறவேண்டிய விஷயங்களையும், மறுமை நிகழ்வுகளையும், மனிதவாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிகளையும் திரும்பத்திரும்ப அதில் கூறப்பட்டாலும் அதைப்படிப்பதில் எந்தவிதமான சோர்வும் ஏற்படுவதில்லை, அதன் வசனங்களை எத்தனை முறை திரும்பத்திரும்ப ஓதினாலும் ஓதக்கூடியவர்களுக்கு எவ்வித சோர்வும் ஏற்படுவதில்லை. குர்ஆன்வசனங்களை செவியேற்கின்ற இறைநம்பிக்கையாளர்களின் மேனிரேமாங்களெல்லாம் சிலிர்த்துவிடுகின்றன. இறையச்சம் அதிகரித்து விடுகிறது. அல்லாஹ்வின் அருளை வேண்டி கண்கலங்கி கண்ணீர் வடிக்கின்றனர். இந்த நிலை இறைவசனங்ளில் தங்கியுள்ள கருத்துக்களையும், பொருளையும் உணர்ந்து ஓதுகின்ற போதுதான் ஏற்படுகிறது. உணர்வற்ற நிலையில் வெறும் வாயளவில் ஓதுவதினால் இந்த நிலை ஏற்படாது. குர்ஆன் வசனங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து ஓதுகின்ற போதுதான் அதன் எதார்த்த நிலையை நம்மால் புரியமுடியும்.

No comments:

Post a Comment