Friday, 6 November 2020

அல்லாஹ்வின் தூதர்(ﷺ‬) அவர்கள் சிரித்திருக்கின்றார்கள்…..

 அல்லாஹ்வின் தூதர்(ﷺ‬) 

 அவர்கள் சிரித்திருக்கின்றார்கள்….


حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنِ الزُّهْرِىِّ قَالَ أَخْبَرَنِى حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ - رضى الله عنه - قَالَ بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ النَّبِىِّ - صلى الله عليه وسلم - إِذْ جَاءَهُ رَجُلٌ ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكْتُ . قَالَ « مَا لَكَ » . قَالَ وَقَعْتُ عَلَى امْرَأَتِى وَأَنَا صَائِمٌ . فَقَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - « هَلْ تَجِدُ رَقَبَةً تُعْتِقُهَا » . قَالَ لاَ . قَالَ « فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ » . قَالَ لاَ . فَقَالَ « فَهَلْ تَجِدُ إِطْعَامَ سِتِّينَ مِسْكِينًا » . قَالَ لاَ . قَالَ فَمَكَثَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - ، فَبَيْنَا نَحْنُ عَلَى ذَلِكَ أُتِىَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - بِعَرَقٍ فِيهَا تَمْرٌ - وَالْعَرَقُ الْمِكْتَلُ - قَالَ « أَيْنَ السَّائِلُ » . فَقَالَ أَنَا . قَالَ « خُذْهَا فَتَصَدَّقْ بِهِ » . فَقَالَ الرَّجُلُ أَعَلَى أَفْقَرَ مِنِّى يَا رَسُولَ اللَّهِ فَوَاللَّهِ مَا بَيْنَ لاَبَتَيْهَا - يُرِيدُ الْحَرَّتَيْنِ - أَهْلُ بَيْتٍ أَفْقَرُ مِنْ أَهْلِ بَيْتِى ، فَضَحِكَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - حَتَّى بَدَتْ أَنْيَابُهُ ثُمَّ قَالَ « أَطْعِمْهُ أَهْلَكَ » .

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நாங்கள் நபி(ﷺ‬)  அவர்களுடன் அமர்ந்திருந்த சபைக்கு ஸுலைமான் இப்னு ஸஃக்ர் அல்பயாளீ (ரலி) எனும் நபித்தோழர் வந்தார். வந்தவர் “அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்” என்றார்.


அல்லாஹ்வின் தூதர் (ﷺ‬) 

 அவர்கள் “உமக்கு என்ன நேர்ந்தது?” என்று வினவினார்கள். நான் ரமழானில் நோன்பு நோற்றுக் கொண்டு என் மனைவியுடன் பகலில் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்” என்று ஸுலைமான் (ரலி) பதில் கூறினார்கள்.


அப்போது, மாநபி {ஸல்} அவர்கள் “இதற்குப் பரிகாரமாக ஓர் அடிமையை விடுதலை செய்ய உம்மால் இயலுமா?” என்று கேட்டார்கள். அதற்கவர் “என்னால் இயலாது” என்றார்.


அப்படியானால், ”இரண்டு மாதங்கள் தொடர்படியாக நோன்பு நோற்க வேண்டும் உம்மால் இயலுமா?” என்று நபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் “என்னால் இயலாது” என்று கூறிவிட்டார்.


அப்படியென்றால், அதற்குப் பரிகாரமாக “அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். உம்மால் இயலுமா?” என்று நபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் “என்னால் இயலாது” என்று கூறி விட்டார்.


அல்லாஹ்வின் தூதர்(ﷺ‬) 

 அவர்கள் கொஞ்ச நேரம் அப்படியே எங்களுடனே அமர்ந்திருந்தார்கள். அப்போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் முன்பாக பேரீத்தம் பழங்கள் நிறைந்த “அரக்” எனும் பெரிய கூடை ஒன்று கொண்டு வரப்பட்டது.


அப்போது, நபி {ஸல்} அவர்கள் “கேள்வி கேட்டவர் எங்கே?” என்றார்கள். ”இதோ நான் இங்கிருக்கின்றேன்” என்று கூறி ஓரிடத்திலிருந்து எழுந்து நபி {ஸல்} அவர்களின் அருகே வந்தார்.


”பேரீத்தம் பழக்கூடையை நீர் எடுத்துச் சென்று உம்முடைய அந்தச் செயலுக்குப் பரிகாரமாக ஏழைகளுக்குத் தர்மம் செய்வீராக!” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.


அப்போது, அவர் “அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழையாக இருப்போருக்குத் தானே நான் தர்மம் செய்ய வேண்டும்?” அப்படியானால், இதோ தெரிகிற மதீனாவின் இரு கரும்பாறைகளுக்கு – மலைகளுக்கு இடையே வசிப்போரில் என் குடும்பத்தாரை விடப் பரம ஏழை யாருமில்லை” என்று கூறினார்.


இதைக் கேட்ட நபி {ஸல்} அவர்கள் “தங்களது கடவாய்ப் பற்கள் தெரியும் அளவிற்குச் சிரித்தார்கள்; பிறகு, “இதை உம் குடும்படத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!” என்று கூறினார்கள். 


( நூல்: புகாரீ, முஸ்லிம் )


ஆக வாழ்வில் யதார்த்தமாக நடக்கிற நிகழ்வின் போதோ, நகைச்சுவையான சம்பவங்களின் போதோ சிரிப்பது அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. ஏனெனில், அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் இந்த உம்மத்திற்கு தெளிவானதொரு வழியைக் காண்பித்து இருக்கின்றார்கள்.


ஆனால், சதா எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பது, பிறரை கேலி செய்து சிரிப்பது, பிறர் துன்பத்தைக் கண்டு சிரிப்பது, நயவஞ்சகத்தோடு சிரிப்பது, பொய்யாகச் சிரிப்பது போன்ற சிரிப்புக்களை இஸ்லாம் விமர்சிக்கிறது.


 சில சிரிப்புக்களால் பாவங்கள் உருவாகும் என எச்சரிக்கின்றது.


حدثنا علي بن محمد حدثنا أبو معاوية عن أبي رجاء عن برد بن سنان عن مكحول عن واثلة بن الأسقع عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم يا أبا هريرة كن ورعا تكن أعبد الناس وكن قنعا تكن أشكر الناس وأحب للناس ما تحب لنفسك تكن مؤمنا وأحسن جوار من جاورك تكن مسلما وأقل الضحك فإن كثرة الضحك تميت القلب


அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், ஒரு முறை அபூஹுரைரா (ரலி) அவர்களை நோக்கி ”அபூஹுரைராவே! பேணுதலைக் கடைபிடித்து வருவீராக! நீர் ஏனைய மக்களை விட உயர்ந்த வணக்கசாலி ஆகிவிடுவீர்! போதுமென்ற மனத்தைக் கொண்டவராக வாழ்வீராக! ஏனைய மக்களை விட அல்லாஹ்விற்கு அதிகம் நன்றி செலுத்துபவராக ஆகிவிடுவீர்! உமக்கு விரும்புவதையே நீர் பிறர் விஷயங்களிலும் விரும்புவீராக! நீர் முழுமையான இறைநம்பிக்கையாளனாக ஆகிவிடுவீர்! உமக்கு தீங்கிழைத்தோருக்கும் நீர் நலவை நாடுவீராக! நீர் முழுமையான முஸ்லிமாக ஆகிவிடுவீர்!


அபூஹுரைராவே! குறைவாகவே சிரிப்பீராக! ஏனெனில், அதிகமாகச் சிரிப்பது உள்ளத்தை  ( மௌத்தாக்கி விடுகிறது) சரிவர இயங்கவிடாமல் செய்து விடுகிறது” என்று கூறினார்கள்.                                         ( நூல்: இப்னு மாஜா )


قال الفقيه ابو الليث السمرقندي :اياك وضحك القهقهة فان فيه ثمانيا من الافات 

اولها :ان يذمك العلماء والعقلاء

الثانيه: ان يجترئ عليك السفهاء والجهال

والثالثة : انك لو كنت جاهلا ازداد جهلك وان كنت عالما نقص علمك

والرابعة : ان فيه نسيان الذنوب الماضية

والخامسة : فيه جراءة على الذنوب في المستقبل لانك اذا ضحكت يقسو قلبك

والسادسة : ان فيه نسيان الموت وما بعده من امر الاخرة

والسابعة : ان عليك وزر من ضحك بضحكك

والثامنة : انه يجزي بالضحك القليل بكاء كثيرا في الاخرة


அல்லாமா அபுல்லைஸ் அஸ்ஸமர்கந்தீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “உம்மை சப்தமாகச் (வெடிச் சிரிப்பு) சிரிப்பதன் விஷயத்தில் எச்சரிக்கின்றேன். ஏனெனில், அதன் காரணத்தால் எட்டு விதமான பேராபத்துகள் ஏற்படுகின்றன.


1. உம்மை அறிவுடையோரும், ஆலிம்களும் சபிப்பார்கள்.

2. உம் விஷயத்தில் அறிவிழந்தோரும், மடையர்களும் துணிவு பெற்றிடுவார்கள்.

3. நீர் அறிவிலியாக இருந்தால் உம் அறியாமை இன்னும் அதிகரிக்கும். நீர் கற்றறிந்தவனாக, ஆலிமாக இருந்தால் உம் கல்வி குறைந்து விடும்.

4. கடந்த காலத்தில் செய்த பாவங்கள் மறந்து விடும்.

5. எதிர் காலத்தில் பாவம் செய்வதின் மீது உமக்கு துணிவு ஏற்பட்டு விடும். ஏனெனில், உள்ளம் தான் இயங்காமல் இருக்கிறதே.

6. மரணத்தைப் பற்றிய ஞாபகமோ, மறுமையைப் பற்றிய சிந்தனையோ உமக்கு இருக்காது.

7. நீர் சிரித்த உம் சிரிப்பால் உம்மீது ஒரு பாவம் எழுதப்படுகின்றது.

8. மறுமையில் அல்லாஹ் உம்மை அழுகையைக் கொண்டு சோதிப்பான்.


                              ( தம்பீஹுல் ஃகாஃபிலீன், பாகம் 1, பக்கம்: 152 )


وروى عن ابن عباس رضي الله عنه أنه قال : من أذنب وهو يضحك دخل النار وهو يبكي .


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “எவனொருவன் சிரித்துக் கொண்டே பாவத்தில் ஈடுபடுகின்றானோ அவன் அழுது கொண்டே நரகில் நுழைவான்”.


قال يحيى بن معاذ الرازي رحمه الله : أربع خصال لم يبقين للمؤمن ضحكاً ولا فرحاً : همّ المعاد - يعني همّ الآخرة . وشغل المعاش ، وغم الذنوب ، وإلمام المصائب .


யஹ்யா இப்னு முஆத் அர்ராஸீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “நான்கு அம்சங்கள் ஓர் இறைநம்பிக்கையாளனை சிரிக்கவோ, மகிழ்ச்சியாக இருக்கவோ விடாது.


1. மறுமை பற்றிய கவலை. 

2. உலக வாழ்வு சம்பந்தமாக உழைப்பில் ஈடுபடுவது.

 3. பாவத்தை நினைத்து கவலை கொள்வது. 

4. சோதனைகளில் உழன்று கொண்டிருப்பது. 

இந்நான்கு அம்சங்களைக் கொண்டிருக்கிற் ஓர் இறைநம்பிக்கையாளனின் வாழ்வென்பது சிரிப்பதற்கான அவகாசத்தையே தராது. ஆகவே, இந்த நான்கில் ஏதாவது ஒன்றில் உம்மை ஈடுபடுத்து, அது உம்மை சிரிப்பதில் இருந்தும் காப்பாற்றி விடும். ஏனெனில், சிரிப்பு என்பது இறைநம்பிக்கையாளனின் குணமோ, அடையாளமோ அல்ல.”


         ( நூல்: தம்பீஹுல் ஃகாஃபிலீன், பாகம்: 1, பக்கம்: 148 )


وَقِيلَ : مَرَّ الْحَسَنُ الْبَصْرِيُّ بِشَابٍّ وَهُوَ يَضْحَكُ ، فَقَالَ لَهُ : يَا بُنَيَّ هَلْ جُزْتَ عَلَى الصِّرَاطِ ؟ قَالَ : لَا فَقَالَ : هَلْ تَبَيَّنَ لَكَ ، إِلَى الْجَنَّةِ تَصِيرُ أَمْ إِلَى النَّارِ ؟ قَالَ : لَا.


قَالَ : فَفِيمَ هَذَا الضَّحِكُ ؟ قَالَ : فَمَا رُؤِيَ الْفَتَى ضَاحِكًا بَعْدَهُ قَطُّ.


يَعْنِي أَنَّ قَوْلَ الْحَسَنِ وَقَعَ فِي قَلْبِهِ فَتَابَ عَنِ الضَّحِكِ.


ஒரு நாள் இமாம் ஹஸன் அல் பஸரீ (ரஹ்) அவர்கள் வீதி வழியாக சென்று கொண்டிருந்தார்கள். அங்கே ஓர் இளைஞன் ஏதோ ஒரு காட்சியைக் கண்டு சிரித்துக் கொண்டிருந்தான்.


அவனிடம், ஓ மகனே! நீ ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை கடந்து விட்டாயா? என்று கேட்டார். அவன், ”இல்லை” என்றான்.


நீ சுவனம் செல்வாயா? அல்லது நரகம் செல்வாயா? என்பது உமக்கு தீர்மானமாகத் தெரிந்து விட்டதா?” என்று கேட்டார்கள். அதற்கவன் “இல்லை” என்றான். அப்படியென்றால், எதற்காக நீ இப்படிச் சிரிக்க வேண்டும்? என்று மீண்டும் கேட்டார்கள்.


இமாம் ஹஸன் பஸரீ (ரஹ்) கூறுகின்றார்கள்: “ இந்த நிகழ்வுக்குப் பின்னர் அந்த இளைஞனை சிரிப்பவனாக ஒரு போதும் நான் கண்டதில்லை. நான் கூறியநல்லுபதேசம் அவனுடைய உள்ளத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்கி இருக்கின்றது.”


 ( நூல்: தம்பீஹுல் ஃகாஃபிலீன், பாகம்: 1, பக்கம்: 149 )

No comments:

Post a Comment