Sunday, 11 September 2016

ஈதுப்பெருநாட்கள்...

இஸ்லாமிய பார்வையில் ஈதுப்பெருநாட்கள் மிக உயர்ந்த லட்சியத்தையும்,மகத்தான நோக்கத்தையும் அடிப்படையாக கொண்டதாகும்.
ஒவ்வொரு முஸ்லீமும் தன் சந்தோஷத்தை மட்டுமே பிரதான நோக்கமாக கொள்ளாமல் பிறரையும் மகிழ்ச்சிப்படுத்தும் பின்னனி கொண்டது.
இஸ்லாமிய பண்டிகைகளில் ஆட்டம் பாட்டத்திற்கோ,வீண்கேளிக்கைகளுக்கோ,விரயங்களுக்கோ இடமில்லை.
இஸ்லாத்தில் இரு ஈதுப்பெருநாட்களும் கடமையான வணக்கத்தின் முடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது.
நோன்பை நிறைவு செய்கிறபோது ஈதுல்பித்ரையும்,ஹஜ்ஜை நிறைவு செய்கிறபோது ஈதுல்அள்ஹாவையும் அல்லாஹுத்தஆலா இந்த உம்மத்துக்கு தந்துள்ளான்.
அவனை வணங்குவதற்கு வாய்ப்பளித்த அந்த வல்ல நாயனை பெருமைப்படுத்தவும்,நன்றிகூறவும்,நினைவுகூறவுமே முஸ்லீம்கள் ஒன்று கூடுகின்றனர்.
அதனால் தான் ரமலானை நிறைவு செய்யும்போது அல்லாஹுத்தஆலா,
وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ [البقرة: 185
எண்ணிக்கையை நீங்கள் முழுமையாக்குவதற்காகவும், உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்திடவும், நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்டது) என்று கூறுகிறான்.
அதைப்போல ஹஜ்ஜை நிறைவு செய்யும்போது,
وَاذْكُرُوا اللَّهَ فِي أَيَّامٍ مَعْدُودَاتٍ) [البقرة: 203]
குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள் என்று கூறுகிறான்.
புத்தாடைகள் அணிவதோ,நறுமணங்களை பூசிக்கொள்வதோ மட்டும் ஈதின் நோக்கமல்ல,மாறாக படைத்தவனையும்,படைப்புக்களையும் சந்தோஷப்படுத்துவதே உண்மையான நோக்கமாகும்.
அதனால் தான் இமாம் ஹஸன் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
يقول الحسن -رحمه الله-: "كل يومٍ لا نعصِي اللهَ فيه فهو عيد، وكلُّ يومٍ نقضِيه في طاعة الله -جل وعلا- فهو عيدٌ
அல்லாஹ்வுக்கு மாறுசெய்யாத ஒவ்வொரு நாளும்,அவனுடைய வணக்கத்தில் கழிகிற ஒவ்வொரு நாளும் உனக்கு ஈது தான்.
இஸ்லாம் மகிழ்ச்சிக்கு தடைபோடவில்லை,அல்லாஹ்வை மறக்கடிக்கிற சந்தோஷம் வேண்டாம் என்று தான் சொல்கிறது.
ஒரு அறிஞன் சொன்னான்:
இந்த உலகில் நீ எதை இழந்தாலும் அதற்கு பகரம் உண்டு!ஆனால் நீ அல்லாஹ்வை இழந்துவிட்டால் அதற்கு பகரமே கிடையாது.
பெருநாள் என்பது ஒரு முஸ்லிம் கட்டுப்பாடுகளிலிருந்து தன்னை விடுவிக்கும் நாளல்ல!
மேலும் அல்லாஹ்வுடன் உள்ள நம் உறவை முறித்துக்கொள்ளும் நாளுமல்ல.
தக்பீர்தான் பெருநாள் தினத்தின் பெரு முழக்கமாகும்.
அதுவே நம் கொள்கையின் பிரகடனமாகும்.
அதனால் தான் ஒரு முஸ்லிமின் வாழ்வின் முக்கிய தருனங்களில் தக்பீருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
பாங்கில்,இகாமத்தில்,தொழுகையில்,போராட்டத்தில்,போர்களத்தில், அனைத்திலும் தக்பீர்மயம்.
زينوا أعيادكم بالتكبير
உங்களின் ஈதுப்பெருநாட்களை தக்பீரக் கொண்டு அழகுபடுத்துங்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
எனவே இன்றய தினத்தில் முதலாவதாக அல்லாஹ்வை பெருமைப்படுத்துவோம்.

No comments:

Post a Comment