ஷஃபான் மாதம் சுன்னத்தான நோன்புகள் அதிகமாக நோக்கத்தக்க சிறந்த மாதமாகும். இருப்பினும் இந்த மாதத்தின் 15 ஆம் நாளில் விஷேடமாக நோன்பு நோற்கப்படுகின்றது. அது “பராத்”, “விராத்” என முஸ்லிம்களால் அழைக்கப்படுகின்றது. இது பித்அத்தான வழிமுறையாகும். ஷஃபான் 15 ஆம் இரவில்தான் குர்ஆன் அருளப்பட்டது என்று சிலர் நம்புகின்றனர். அல்குர்ஆன் ரமழான் மாதத்தில் அருளப்பட்டது என்ற திருக்குர்ஆனின் கூற்றுக்கு எதிரான கருத்தாக இது உள்ளது. சுன்னத்தான நோன்புகளை நோற்காது மார்க்கம் அனுமதிக்காத 15 ஆம் நாள் நோன்பை மட்டும் மக்கள் நோற்று வருவதால் ஷஃபான் நோன்பு குறித்து விளங்கிக் கொள்வோம்.
“நபி(ச) அவர்கள் ஷஃபான் மாதத்தை விட அதிகமாக (ரமழான் அல்லாத) வேறெந்த மாத்திலும் நோன்பு நோற்கவில்லை. ஷஃபான் முழுவதுமாக நோன்பு நோற்பார்கள்.” (அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி), ஆதாரம்: புஹாரி- 1970)
ஷஃபான் மாதம் முழுவதுமாக நபி(ச) அவர்கள் நோன்பு நோற்றதாக இந்த ஹதீஸ் கூறுகின்றது. இதன் உண்மையான அர்த்தம் என்ன? நபி(ச) அவர்கள் ஷஃபான் முழுவதும் நோன்பு நோற்றார்களா? அல்லது ஷஃபானில் அதிகமாக நோன்பு நோற்றார்களா? என்பதைப் பின்வரும் ஹதீஸ்கள் மூலம் தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.
“நபி(ச) அவர்கள் ஏதேனும் ஒரு மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்றுள்ளார்களா? என ஆயிஷா(ரழி) அவர்களிடம் வினவப்பட்ட போது ரமழானைத் தவிர வேறெந்த மாத்திலும் முழு மாதமும் நபி(ச) அவர்கள் நோன்பு நோற்றுள்ளதாக நான் அறியவில்லை என்று கூறினார்கள்.”
(முஸ்லிம்: 1156)
ஷஃபான் முழுவதும் நோன்பு நோற்றார்கள் என்று கூறிய ஆயிஷா(ரழி) அவர்கள்தான் ரமழானைத் தவிர வேறெந்த மாதத்திலும் மாதமும் முழுவதும் நபி(ச) அவர்கள் நோன்பு நோற்றதில்லை என்று கூறுகின்றார்கள்.
அப்படியென்றால் ஷஃபான் முழுவதும் நோன்பு நோற்றுள்ளார்கள் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது?
“நபி(ச) அவர்களது நோன்பு பற்றி ஆயிஷா(ரழி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, நபி(ச) அவர்கள் (தொடராக) நோன்பு நோற்பார்கள். அவர் நோன்பு இருக்கின்றார். (விடவே மாட்டார்) என நாம் சொல்லும் அளவு நோன்பு நோற்பார்கள். சில போது நோன்பு இல்லாது இருப்பார்கள். நோன்பு பிடிக்கமாட்டார்கள் என நாம் சொல்லும் அளவுக்கு நோன்பு பிடிக்காது இருப்பார்கள். ஷஃபானைத் தவிர வேறு மாதங்களில் அவர்கள் அதிகம் நோன்பு நோற்றதை நாம் கண்டதில்லை. ஷஃபான் முழுவதுமாக நோன்பு நோற்பார்கள். ஷஃபானில் சில நாட்கள் விர மற்ற நாட்களெல்லாம் நோன்பு நோற்பார்கள்” எனக் கூறினார்கள். (முஸ்லிம்: 2778)
ஷஃபான் முழுவதும் நோன்பு நோற்பார்கள் என்றால் ஷஃபானில் அதிகமாக நோன்பு நோற்பார்கள் என்பதே அர்த்தமாகும் என்பதை இந்த அறிவிப்பு மிகத் தெளிவாகக் கூறுகின்றது.
“ஷஃபான் முழுவதும் நோன்பு நோற்பார்கள்” என்று கூறிய அவர்களே ஷஃபானில் சில நாட்கள் தவிர ஏனைய நாட்களில் நோன்பு நோற்பார்கள் என்று கூறிவிடுகின்றார்கள்.
எனவே, நபி(ச) அவர்கள் ஷஃபான் முழுவதும் நோன்பு நோற்கவில்லை. ஷஃபானில் அதிகமாக நோன்பு நோற்றுள்ளார் கள் என்பதை அறியலாம்.
இதிலிருந்து ஷஃபான் அதிகமாக சுன்னத்தான நோன்பு நோற்பதற்கு ஏற்ற மாதமாகும் என்பதைக் கவனத்திற் கொள்ளலாம்.
ஷஃபான் 15 ஆம் நாளில் நோன்பு:
ஷஃபான் மாதம் 15 ஆம் தினத்தைச் சிறபபிப்பதற்காகப் பிடிக்கப்படும் நோன்பும் அந்தத் தினத்தில் இரவில் தொழப்படும் “அல்பிய்யா” என்ற தொழுகையும் ஆதாரமற்ற பித்அத்தான நடவடிக்கைகளாகும். அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
ஷஃபான் மாதம் 15 ஆம் தினத்தைச் சிறபபிப்பதற்காகப் பிடிக்கப்படும் நோன்பும் அந்தத் தினத்தில் இரவில் தொழப்படும் “அல்பிய்யா” என்ற தொழுகையும் ஆதாரமற்ற பித்அத்தான நடவடிக்கைகளாகும். அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
ஷஃபான் 15 ஆம் தினத்திற்குப் பின்னர் பிடிக்கப்படும் நோன்பு:
“ஷஃபானின் அரைப்பகுதி வந்துவிட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்” என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆபூஹுரைரா(வ)
ஆதாரம்: அபூதாவூத்- 2339, திர்மிதி- 738
(இந்த அறிவிப்பை இமாம் அல்பானீ(ரஹ்) ஸஹீஹ் என்று கூறுகின்றார்கள். இமாம் அஹ்மத்(ரஹ்) அவர்கள் “முன்கரான” (நிராகரிக்கப்பட வேண்டிய) அறிவிப்பு என்கின்றார்கள்.
இந்த அறிவிப்பின் அடிப்படையில் ஷஃபானின் நடுப்பகுதி வந்துவிட்டால் நோன்பே பிடிக்கக் கூடாது என்பது அர்த்தமல்ல. மாறாக, பிடிக்கலாம் என அங்கீகரிக்கும் ஹதீஸ் களையும் நாம் காணலாம்.
நபி(ச) அவர்கள் ஷஃபானில் சில தினங்களைத் தவிர அதிகமாக நோன்பு நோற்றுள்ளார்கள் என ஏற்கனவே நாம் பார்த்த ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே, ஷஃபானின் பிற்பகுதியில் நோன்பு நோற்பதை இந்த அறிவிப்புக்கள் அனுமதிக்கின்றன.
“வழக்கமாக நோற்கும் நோன்பு அமைந்தாலே தவிர ரமழானுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் யாரும் நோன்பு நோற்க வேண்டாம்” என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(வ)
ஆதாரம்: புஹாரி- 1914
ரமழானுக்கு ஓரிரு தினங்கள் என்பதன் மூலம் ஷஃபான் 28, 29 களில் நோன்பு நோற்க வேண்டாம் எனத் தடுக்கின்றார்கள். அது கூட ஒருவர் வழமையாகப் பிடிக்கும் நோன்புகள் அத்தினங்களில் வந்தால் பிடிக்கலாம் என்கின்றார்கள். ரமழானுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் நோன்பு நோற்க வேண்டாம் எனக் கூறுவதால் அதற்கு முன்னர் சில தினங்களில் நோன்பு நோற்பது தடையல்ல என்பதைப் புரியலாம்.
எப்படி எடுத்துக் கொள்வது?
“ஷஃபான் நடுப்பகுதி வந்தால் நோன்பு நோற்காதீர்கள்” என்ற தடையை எப்படி எடுத்துக் கொள்வது என்ற ஐயம் எழலாம்.
“ஷஃபான் நடுப்பகுதி வந்தால் நோன்பு நோற்காதீர்கள்” என்ற தடையை எப்படி எடுத்துக் கொள்வது என்ற ஐயம் எழலாம்.
“நோன்பு நோற்காதீர்கள்” என்பது கட்டாயத் தடை அல்ல. “மக்ரூஹ்” என்ற நிலையில்தான் உள்ளது. 15 தாண்டிய பின்னரும் நோன்பை நோற்பவர்கள் நோற்றுக் கொள்ளலாம் என்று எடுத்துக் கொள்ளலாம்.
ஷாபி மத்ஹபுடைய அறிஞர்கள் இந்த ஹதீஸை அனுகிய விதம் அவதானிக்கத் தக்கதாகும்.
ஷஃபான் பதினைந்துக்கு முன்னர் நோன்பு நோற்றவர் தொடராக 15 இற்குப் பின்னரும் பிடிக்கலாம் அல்லது வழமையாக நோன்பு நோற்று வருபவர் அந்தத்தினம் 15 இற்குப் பின்னர் வந்தாலும் பிடிக்கலாம். அப்படியின்றி; வெறுமனே ஒருவர் ஷஃபான் ஆரம்பத்தில் பிடிக்காது 16 ஆம் தினத்தில் நோன்பு நோற்பதைத் தவிர்க்க வேண்டும் என்று இது தொடர்பாக வந்துள்ள அனைத்து ஹதீஸ்களையும் இணைத்து அர்த்தம் எடுக்கின்றனர். இதுதான் மிகச்சரியான தீர்ப்பாகப் படுகின்றது.
“15 இற்குப் பின்னர் பிடிக்காதீர்கள்” என்ற ஹதீஸும் பிடிக்கலாம் என அனுமதியளிக்கும் விதத்தில் அமைந்துள்ள அறிவிப்புக்களும் முரண்படுவது போல் தென்படலாம். இது குறித்து இமாம் இப்னுல் கையிம்(ரஹ்) அவர்கள் தஹ்தீபுஸ் ஸுனனில் விளக்கும் போது,
“ஷஃபான் 15 இற்குப் பின்னர் பிடிக்க வேண்டாம் எனக் கூறும் ஹதீஸ் இமாம் முஸ்லிமின் நிபந்தனையின் அடிப்படையில் ஸஹீஹான அறிவிப்பாகும். அலாஉ அவர்கள் இந்த ஹதீஸைத் தனித்து அறிவித்தாலும் அது இந்த ஹதீஸில் குறைவை ஏற்படுத்தாது. அலாஉ அவர்கள் உறுதியான அறிவிப்பாளராவார். இவர், தனது தந்தை மூலமும் அபூஹூரைரா(வ) மூலமும் அறிவிக்கக் கூடிய பல ஹதீஸ்கள் இமாம் முஸ்லிம் தனது கிரந்தத்தில் பதிவு செய்துள்ளார்கள். அதிகமான ஹதீஸ்கள் தனிப்பட்ட அறிவிப்பாளர்களினூடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உம்மத் அதை ஏற்று அமல் செய்தும் வருகின்றது.
ஷஃபான் நோன்பு குறித்து வந்துள்ள பேசும் ஹதீஸ்களுக்கிடையில் முரண்பாடு இருப்பதாகத் தோன்றலாம். அவற்றுக்கிடையில் முரண்பாடு இல்லை. ஷஃபான் 15 இற்குப் பின்னர் நோன்பு பிடிக்கலாம் என அனுமதிக்கும் ஹதீஸ்கள் 15 இற்கு முன்னரும் நோன்பு நோற்பவர் அதோடு சேர்த்து 15 இற்குப் பின்னரும் பிடிப்பதையே குறிக்கின்றது. 15 “இற்குப் பின்னர் பிடிக்க வேண்டாம்” எனக் கூறும் அலாஉ அவர்களது அறிவிப்பு 15 இற்குப் பின்னர் நோன்பு நோற்க ஆரம்பிப்பது குறித்ததாகும். இவர் முன்னைய 15 உடன் பின்னையதை இணைத்துப் பிடிப்பவரும் அல்ல; வழக்கமாகப் பிடித்து வரும் நோன்பைப் பிடிப்பவரும் அல்ல. இந்த அடிப்படையில் நோற்பதுதான் கூடாது என இந்த ஹதீஸ் குறிப்பிடுகின்றது என விபரிக்கின்றார்கள்.
இது குறித்து ஷைய்க் இப்னு பாஸ்(ரஹ்) அவர்கள் கூறும் போது,
அல்லாமா நாஸிருத்தீன் அல் பானி(ரஹ்) அவர்கள் கூறியது போல் (15 இற்குப் பின்னர் நோன்பு நோற்காதீர்கள் எனும்) இந்த ஹதீஸ் ஸஹீஹானதுதான். 15 நாளுக்குப் பின்னர் நோன்பு நோற்க ஆரம்பிப்பது தடை என்பதே இதன் அர்த்தமாகும். யார் ஷஃபான் முழுவதும் அல்லது அதில் அதிகமான நாட்கள் நோன்பு நோற்க விரும்புகின்றாரோ அவர் ஸுன்னாவின் அடிப்படையில் சரியாகவே செய்தவராவார் என்று குறிப்பிடுகின்றார்கள்.
(பதாவா ஷைக் பின்பாஸ்: 15/385)
(பதாவா ஷைக் பின்பாஸ்: 15/385)
எனவே, ஷஃபான் முதல் பகுதியில் நோன்பு நோற்பவர் இறுதிப் பகுதியிலும் நோன்பு நோற்கலாம் என்பதே சரியானதாகும். ஷஃபான் 16 ஆம் தினத்திலிருந்து நோன்பு நோற்பதை ஆரம்பிக்கக் கூடாது. ஷஃபான் 15 ஆம் தினத்தைச் சிறப்பிக்கப் பிடிக்கப்படும் நோன்பு பித்அத்தான நோன்பாகும். இவற்றைக் கவனத்திற் கொண்டு ஷஃபானில் சுன்னத்தான நோன்பை நோற்று அல்லாஹ்வின் அருளைப் பெற முயல்வோமாக!
No comments:
Post a Comment