Tuesday, 26 May 2015

மனிதர்களின் அடக்கு முறையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்.

 மனிதர்களின் அடக்கு முறையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல். 
6363. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு முறை) அபூ தல்ஹா(ரலி) அவர்களிடம், 'உங்கள் சிறுவர்களில் ஒரு சிறுவனை எனக்குப் பணிவிடை புரிவதற்காகத் தேடி (அழைத்து) வாருங்கள். (நான் கைபருக்குப் புறப்பட வேண்டும்)' என்று கூறினார்கள் எனவே, அபூ தல்ஹா(ரலி) அவர்கள் என்னை வாகனத்தில் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டு (கைபரை நோக்கிப்) புறப்பட்டார்கள். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (வழியில்) தங்கும்போதெல்லாம் அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஹம்மி, வல்ஹஸனி, வல் அஜ்ஸி, வல்கஸலி, வல்புக்லி, வல்ஜுப்னி, வ ளலஇத் தைனி, வ ஃகலபத்திர் ரிஜால்' என்று அதிகமாகப் பிரார்த்திப்பதை செவிமடுத்துவந்தேன். (பொருள்: இறைவா! (வருங்காலத்தைப் பற்றியக்) கவலையிலிருந்தும், (நடந்து முடிந்துவிட்டவை பற்றிய) துக்கத்திலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும கஞ்சத்தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்கு முறைகளிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.) 
கைபரிலிருந்து (மதீனாவுக்குத்) திரும்பும் வரை அவர்களுக்கு நான் பணிவிடைகள் புரிந்து கொண்டிருந்தேன். (அப்போரில் கிடைத்த போர்ச் செல்வங்களில் தமக்கரிய பங்கிற்காக) ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களைப் பெற்று (மணந்து) கொண்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றி ஒரு துணியைக் கட்டியதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு அதில் தமக்குப் பின்னால் ஸஃபிய்யா(ரலி) அவர்களை அமர்த்திக் கொண்டார்கள். (அந்தப் பயணத்தில்) நாங்கள் 'சத்துஸ் ஸஹ்பா' எனுமிடத்தை அடைந்தபோது ஒரு தோல் விரிப்பில் (பேரீச்சம்பழம், பாலாடை, நெய் ஆகியவற்றைக் கலந்து) 'ஹைஸ்' எனும் பலகாரத்தைத் தயாரித்தார்கள். பிறகு (மணவிருந்துக்கு மக்களை அழைப்பதற்காக) என்னை அனுப்பி வைத்தார்கள். எனவே, நான் மக்களை அழைத்தேன். அவர்களும் (வந்து வலீமா விருந்து) உண்டனர். அதுதான் ஸஃபிய்யா(ரலி) அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவைத் தொடங்கிய நிகழ்ச்சியாக அமைந்தது. 
பின்னர் நபி(ஸல்) அவர்கள் (மதீனா நோக்கி) வந்து கொண்டிருந்தபோது 'உஹுத்' மலை அவர்களுக்குத் தென்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் 'இந்த சிறிய மலை நம்மை நேசிக்கின்றது. நாமும் அதனை நேசிக்கிறோம்' என்றார்கள். பிறகு மதீனாவைப் பார்த்தபோது, 'இறைவா! இப்ராஹீம்(அலை) அவர்கள் மக்காவைப் புனித(நகர)மாக அறிவித்ததைப் போன்று இந்த இரண்டு மலைகளுக்கிடையே உள்ள பகுதியைப் புனித(நகர)மாக அறிவிக்கிறேன். இறைவா! மதீனாவாசிகளின் (அளவைகளான) 'முத்(து)' மற்றும் 'ஸாஉ' ஆகியவற்றில் நீ வளத்தை ஏற்படுத்துவாயாக' என்று பிரார்த்தித்தார்கள். 

No comments:

Post a Comment