Tuesday, 30 July 2013

இப்படியும் சில மனிதர்கள்

                                          இரைவனின்திருப்பெயரால்                                                                                                                                                                                                                                                         இப்படியும் சில மனிதர்கள்
அல்லாஹ் கூறுகிறான்: ”மனிதர்களில் சிலர் இப்படியும் இருக்கிறார்கள். ”நாங்கள் இறை நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று அவர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் அல்லாஹ்வுடைய பாதையில் ஏதாவது துன்பம் ஏற்படுமானால், மனிதர்களால் கொடுக்கப்படும் துன்பத்தை அல்லாஹ்வின் வேதனை வந்து விட்டதை போல் கருதுகின்றனர். (எனவே விலகிச் சென்று விடுகின்றனர்)
அதே நேரத்தில் உம் இறைவனிடமிருந்து உதவி வரும் போது ”நிச்சயமாக நாங்கள் உங்களுடனேதான் இருந்தோம் என்று கூறுகிறார்கள். அல்லாஹ் அகிலத்தாரின் இதயங் களில் இருப்பவற்றை நன்கு அறிந்தவனாக இல்லையா, மேலும் நிச்சயமாக உண்மை இறை நம்பிக் கையுடையோர் யார் என்பதையும் நயவஞ்சகர்கள் யார் என்பதையும் அல்லாஹ் நன்கு அறிவான். நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம் நீங்கள் எங்கள் வழியைப் பின்பற்றுங்கள். உங்கள் குற்றங்களை நாங்கள் சுமந்து கொள்கிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் தம் குற்றங்களிலிருந்து கூட எதையும் சுமப்பவர்களாக இல்லை. இந்நிலையில் உங்கள் குற்றங்களை சுமப்பதாகச் சொல்லும் அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே! நிச்சயமாக அவர்கள் தங்களுடைய பாவச் சுமைகளையும், அத்துடன் அவர்கள் யாரையெல்லாம் வழிகெடுத்தார்களோ அவர்களுடைய பாவச் சுமைகளையும் சுமப்பார்கள். மறுமை நாளில் அவர்கள் இட்டுக்கட்டியிருந்ததைப் பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 29:10,13)
இந்த வசனங்களை ஒவ்வொரு இறை விசுவாசியும் திரும்பத் திரும்பப் படித்து, இந்த வசனங்களில் உள்ள ஆழமான விஷயங்களை சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளார்கள். இந்த வசனங்களின் மூலம் வல்ல அல்லாஹ் இறை நம்பிக்கை கொண்டவர்களின் நிலையைத் தான் சொல்லிக் காண்பிக் கின்றானே தவிர இறை நிராகரிப்பாளர்களைப் பற்றியல்ல என்பதை கவனிப்பது அவசியமாகும். அல்லாஹ்வை நம்பியிருக்கின்றோம் என்று கூறிக் கொண்டே அந்த நம்பிக்கைக்குத் துரோகமான முறையில் நடக்கக் கூடியவர்களும் முஸ்லிம்களில் இருக்கிறார்கள் என்பதை இந்த வசனங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. இப்படிப்பட்ட இரண்டும் கெட்ட நிலையில் உள்ளவர்கள் தான் இஸ்லாத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள். துன்பம் எதுவுமே அனுபவிக்காமல் முஸ்லிமாக வாழ நினைப்பார்கள். தான் முஸ்லிம் என்பதற்காக அடையும் சிறுதுன்பத்தைக் கூட மிகப்பெரிய சோதனை யாகவும், வேதனையாகவும் கருதி ஓடிவிடுவார்கள். ஆதாயம் கிடைக்கும் போது ஓடிவருவார்கள். இப்படிப்பட்டவர்களை இறை நிராகரிப்பாளர்கள் என்றே அல்லாஹ் குறிப்பிடுகிறான். இவர்கள் தங்கள் பக்கம் மக்களை அழைப்பார்கள், அவர்களுடைய பாவங்களுக்கெல்லாம் தாங்கள் பொறுப்பேற்பதாகக் கூறுவார்கள். ஆனால் அவர்களே பாவிகள், அவர்கள் செய்த பாவத்திற்குக் கூட அவர்களால் பொறுப்பேற்க முடியாது என்று கூறி அல்லாஹ் இவர்களை இனம் காட்டி விட்டான். இப்படிப்பட்ட மோசமான பண்புகள் தங்களிடம் வந்து விடாமல் ஒவ்வொரு முஸ்லிமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment