Monday, 28 July 2014

நபிமொழி அறிவோம்

நபித்தோழர்களில் (ஏழைகளான) சிலர் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! வசதி படைத்தோர் நன்மைகளை (தட்டி)க் கொண்டு போய் விடுகின்றனர். நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர்; நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர்; (ஆனால், அவர்கள்) தங்களது அதிகப்படியான செல்வங்களைத் தான தர்மம் செய்கின்றனர். (அவ்வாறு தான தர்மங்கள் செய்ய எங்களிடம் வசதி இல்லையே!) என்று கூறினர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்களும் தர்மம் செய்வதற்கான (முகாந்தரத்)தை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லையா? இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும்; இறைவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமாகும்; ஒவ்வொரு புகழ் மாலையும் (அல்ஹம்துலில்லாஹ்) தர்மமாகும்; ஒவ்வொரு ஓரிறை உறுதி மொழியும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; நல்லதை ஏவுதலும் தர்மமே; தீமையைத் தடுத்தலும் தர்மமே; உங்களில் ஒருவர் தமது பாலுறுப்பி(னைப் பயன்படுத்துகின்ற விதத்தி)லும் தர்மம் உண்டு என்று கூறினார்கள்.
மக்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் (தம் துணைவியிடம்) இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் நன்மை கிடைக்குமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (நீங்களே) சொல்லுங்கள்: தடை செய்யப்பட்ட வழியில் அவர் தமது இச்சையைத் தீர்த்துக் கொண்டால் அவருக்குக் குற்றம் உண்டல்லவா! அவ்வாறே அனுமதிக்கப்பட்ட வழியில் அவர் தமது இச்சையை நிறைவேற்றிக் கொள்ளும் போது அதற்காக அவருக்கு நன்மை கிடைக்கவே செய்யும் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1832

No comments:

Post a Comment