முக்கியமான அம்சங்கள்
1. சுய மரியாதையோடும், கண்ணியத்தோடும் பிறருக்கு ஈந்து வாழும் கொடைத்தன்மையோடும் வாழ்கிற நல்ல சந்ததியை, அழகிய தலைமுறையை உருவாக்க வேண்டும்.
சிறந்த, ஸாலிஹான பெற்றோருக்கான தகுதிகளில் ஒன்றாக இஸ்லாம் சொல்கிற முக்கியமான அம்சங்களில் ஒன்று.
சந்ததிகளுக்கு, வாரிசுகளுக்கு நிறைவான அல்லது வாழ்க்கைக்கு போதுமான அளவிற்கு சொத்து, செல்வங்களை சேர்த்து வைக்க வேண்டும்.
அல் கஹ்ஃப் அத்தியாயத்தில் மூஸா {அலை} மற்றும் கிள்ர் {அலை} ஆகியோரின் உரையாடல் மற்றும் பயணத்தின் ஊடாக பல்வேறு படிப்பினைகளையும் பாடங்களையும் சுட்டிக்காட்டுகிற அல்லாஹ் சந்ததிகளின் எதிர்கால வாழ்விற்காக சொத்து, செல்வங்களை சேர்த்து வைக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகின்றான்.
فَانْطَلَقَا حَتَّى إِذَا أَتَيَا أَهْلَ قَرْيَةٍ اسْتَطْعَمَا أَهْلَهَا فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا فَوَجَدَا فِيهَا جِدَارًا يُرِيدُ أَنْ يَنْقَضَّ فَأَقَامَهُ قَالَ لَوْ شِئْتَ لَاتَّخَذْتَ عَلَيْهِ أَجْرًا ()
மூஸா {அலை} அவர்களும், கிள்ர் {அலை} அவர்களும் ஒரு ஊருக்கு வருவார்கள். அவ்வூர் வாசிகளிடம் உண்பதற்கு உணவும் கேட்பார்கள். ஆனால், இருவருக்கும் உணவளிக்க அவ்வூர் வாசிகள் மறுத்து விடுவார்கள். இந்த நிலையில், ஊரின் ஓர் பகுதியில் கேட்பாரற்று கிடக்கும் சிதிலமடைந்து கிடக்கும் ஒரு வீட்டின் சுவரை சரி செய்யும் பணியில் கிள்ர் {அலை} அவர்கள் மூஸா {அலை} அவர்களின் துணை கொண்டு ஈடுபட்டு சரி செய்து விடுவார்கள்.
உணவு தர மறுத்த ஊரில் சிதிலமடைந்து கிடைந்த ஒரு வீட்டின் சுவரை செப்பனிட்ட இந்த செயலால் சினமுற்ற மூஸா {அலை} அவர்கள் “நாம் செய்த இந்த வேலைக்காக கொஞ்சம் பணத்தை கூலியாகவாவது பெற்றிருக்கலாம் அல்லவா?” என கிள்ர் {அலை} அவர்களிடம் கேட்பார்கள்.
( அல்குர்ஆன்: 18: 77 )
பயணத்தில் நடைபெற்ற அனைத்து விஷயங்களுக்கும் விளக்கமளிக்கும் கிள்ர் {அலை} அவர்கள் இதற்கும் விடையளிப்பார்கள்.
وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُ كَنْزٌ لَهُمَا وَكَانَ أَبُوهُمَا صَالِحًا فَأَرَادَ رَبُّكَ أَنْ يَبْلُغَا أَشُدَّهُمَا وَيَسْتَخْرِجَا كَنْزَهُمَا رَحْمَةً مِنْ رَبِّكَ وَمَا فَعَلْتُهُ عَنْ أَمْرِي ذَلِكَ تَأْوِيلُ مَا لَمْ تَسْطِعْ عَلَيْهِ صَبْرًا ()
“நாம் செப்பனிட்டுச் சரி செய்த சுவர் இருக்கிறதல்லவா அதன் கீழே காலஞ் சென்ற ஸாலிஹான ஒரு பெற்றோர் தங்களின் இரு பிள்ளைகளுக்காக செல்வத்தை புதைத்து வைத்து சென்றிருக்கின்றனர். உமது இறைவனான அல்லாஹ், அவனின் அருள் கொண்டு அந்த இரு பிள்ளைகளும் பருவ வயதை அடைந்ததன் பின்னர் அவர்களின் கரங்களில் கொண்டு சேர்க்க நாடினான். இதற்காகத்தான் நானும், அவனுடைய ஆணைக்கிணங்க இவ்வாறு செய்தேன். ஆனால், உம்மால் இது விஷயத்தில் எம்முடன் பொருமையாக இருக்க முடியாமல் போய் விட்டது” என்று கிள்ர் {அலை} விளக்கம் அளிப்பார்கள். ( அல்குர்ஆன்: 18: 82 )
இங்கே, அல்லாஹ் தங்களின் வாரிசுகளுக்காக, சந்ததிகளுக்காக செல்வத்தைச் சேர்த்து வைத்த பெற்றோர்களை அடையாளப்படுத்தும் போது
وَكَانَ أَبُوهُمَا صَالِحًا
அந்த இரு பிள்ளைகளின் பெற்றோர் ஸாலிஹீன்களாக இருந்தார்கள் என்கிறான்.
ஒரு மனிதர் நபிகளாரின் அவையில் வந்து “அல்லாஹ்வின் தூதரே! இரு தந்தையர்களில் யார் சிறந்தவர்? ஒருவர் மார்க்க விழுமியங்களோடு வாழ்கிறார், அத்தோடு தமது சந்ததியினருக்கு விசாலமான பொருளாதாரத்தையும் விட்டுச் செல்கின்றார்.
இன்னொருவர், மார்க்க விழுமியத்தோடு வாழ்கிறார். ஆனால் தமது சந்ததியினருக்கு தேவையான அளவுக்கு பொருளாதார வசதியை ஏற்படுத்தாமல் சென்று விடுகின்றார்” என்று.
அதற்கு, “இருவரில் முதலாமவரே சிறந்த தந்தையாவார்” என மாநபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். ( நூல்: தர்ஃகீப் அத் தர்ஹீப் )
عن الزّهري عن عامر بن سعد بن أبيه أنّ رسول الله صلّى الله عليه وسلّم جاء يعوده عام حجّة الوداع من وجعٍ اشتدّ به، فقلت: (يا رسول الله، إنّي ذو مال ولا يرثني إلّا ابنة، أفأتصدّق بثلثي مالي؟ فقال صلّى الله عليه وسلم: لا، قلت: فالشّطر يا رسول الله؟ قال رسول الله عليه الصلاة والسلام: لا، قلت: فالثّلث؟ فأجاب رسول الله صلّى الله عليه وسلم: الثّلث والثّلث كثير، إنّك إن تذر ورثتك أغنياء خيرٌ من أن تذرهم عالة يتكفّفون النّاس،
ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ”இறுதி ஹஜ்ஜின் போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக நபி {ஸல்} அவர்கள் இருந்தார்கள்.
அப்போது நான் அவர்களிடம் ” அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் மரணத் தருவாயை அடைந்து விட்டேன் எனக் கருதுகின்றேன்.நான் செல்வந்தன்; என்னுடைய ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுக்காரர்களில்லை.
எனவே, என்னுடைய பொருளில் மூன்றில் இரண்டு பங்கை நான் தர்மம் செய்து விடட்டுமா?' எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ”வேண்டாம்" என்றார்கள்.
பின்னர் நான் ”பாதியைக் கொடுக்கட்டுமா?” எனக் கேட்டேன். அதற்கும் நபி(ஸல்) அவர்கள் ”வேண்டாம்” என்று கூறிவிட்டு, வேண்டுமானால் மூன்றில் ஒரு பங்கை தர்மம் செய்துவிடுங்கள். அதுவும் அதிகம்தான்.
ஏனெனில், உம்முடைய வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாகவிட்டுச் செல்வதைவிட பிறரிடம் தேவையற்றவர்களாகவிட்டுச் செல்வதே சிறந்ததாகும்!” என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )
எனவே, நம்முடைய சந்ததிகளை வாழ்க்கையில் எந்த சந்தர்பத்திலும், எவரிடத்திலும் கையேந்துகிற சூழ்நிலையில் விட்டுச் செல்வதில் இருந்து தவிர்ந்து, போதுமான, வாழ்க்கைக்குத் தேவையான சொத்து செல்வங்களை சேர்த்து தன்னிறைவானவர்களாக வாழ வழி வகை செய்வோம்.
No comments:
Post a Comment