Thursday, 14 August 2014

நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இப்போது எனக்கு (மணப்) பெண் தேவையில்லை’ எனக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “உம்மிடம் (மஹ்ர் செலுத்த) என்ன உள்ளது?” என்று கேட்டார்கள். அவர், “என்னிடம் எதுவுமில்லை” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “இரும்பாலான மோதிரத்தையேனும் இவளுக்கு (மஹ்ராகக்) கொடு!” என்று சொன்னார்கள். அவர், “என்னிடம் ஏதுமில்லை” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், “சரி, குர்ஆனில் ஏதேனும் உம்மிடம் (மனனமாய்) உள்ளதா?” என்று கேட்டார்கள். அவர், “இன்னது இன்னது (மனனமாய்) உள்ளது” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு உரியவளாக்கி விட்டேன்” என்று சொன்னார்கள். புகாரி (5141)
எனவே திருமணத்துக்குப் பிறகு தான் பெண் ஆணுக்கு உரியவளாகிறாள். மேலும் ஆணுடைய காதலுக்கும் அவனுடைய கொஞ்சலுக்கும் உரியவள் மனைவி தான் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ(21)30
நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. அல்குர்ஆன் (30 : 21)
எனவே நாம் பெண் பேசியிருந்தாலும் அப்பெண்ணை மணந்து கொள்ளாதவரை அவள் நமக்கு அந்நியப் பெண் தான். ஒரு அந்நியப் பெண்ணிடம் நாம் எந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமோ அதே போன்று தான் நமக்கு பேசி முடிக்கப்பட்ட பெண்ணிடமும் நடந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment