அல்லாஹ்வின் மீது சத்தியம்
செய்வதின் மகத்துவம்.
_____________________________________
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மர்யமின் மகன் ஈசா(அலை) அவர்கள், ஒருவர் திருடிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள்.
அவனிடம், 'நீ திருடினாயா' என்று கேட்டார்கள்.
அதற்கு அவன்:
இல்லை..
எவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லையோ அவன் மீதாணையாக!' என்று பதிலளித்தான்.
உடனே ஈசா(அலை) அவர்கள:
'அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டு, என் கண்ணை நம்ப மறுத்து விட்டேன்' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 3444.
அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள்
படிப்பினை:
சிலர் எடுத்ததற்கெல்லாம் சத்தியம் செய்வார்கள். இதைப்பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான். மற்றும் பலர் பொய்ச் சத்தியம் செய்வதையே வழக்காகக் கொண்டிருப்பார்கள். எது எப்படியாயினும் ஒருவர் அல்லாஹ்வை சாட்சியாக்கி சத்தியம் செய்து விட்டால் அந்த சத்தியத்தை நம்புவது எம்மீது கடமையாகும். பொய்ச் சத்தியம் செய்வோர் அதற்கான தண்டனையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வார்கள். இதற்கு நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வும் சிறந்த முன்மாதிரி.
அபூ வாயில்(ரஹ்) அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'எவன் ஒரு சொத்தை அடைவதற்காகப் பொய் சத்தியம் செய்கிறானோ அவன், தன் மீது அல்லாஹ் கோபமுற்ற நிலையில் அவனைச் சந்திப்பான்' என்னும் நபிமொழியைக் கூறிவிட்டு, இந்த நபிமொழியை உறுதிப்படுத்தி அல்லாஹ், 'அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும், சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்பவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களை (ஏறெடுத்துப்) பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது' என்னும் (திருக்குர்ஆன் 03:77) வசனத்தை அருளினான்' என்று கூறினார்கள்.
பிறகு, அஷ்அஸ் இப்னு கைஸ்(ரலி) எங்களிடம் வந்து, 'அபூ அப்திர் ரஹ்மான் (இப்னு மஸ்வூத்) உங்களிடம் என்ன பேசினார்?' என்று கேட்டார். நாங்கள் அவர் (இப்னு மஸ்வூத்(ரலி) சொன்னதை எடுத்துரைத்தோம். அதற்கு அவர், 'அவர் உண்மையே சொன்னார். என் விவகாரத்தில்தான் அது அருளப்பட்டது. எனக்கும் இன்னொரு மனிதருக்குமிடையே ஒரு கிணற்றின் விஷயத்தில் தகராறு இருந்து வந்தது; எனவே, நாங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் (எங்கள்) வழக்கைத் தாக்கல் செய்தோம்.
அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீ இரண்டு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும்; அல்லது (பிரதிவாதியான) அவர் (குற்றத்தை மறுத்து) சத்தியம் செய்ய வேண்டும்' என்று கூறினார்கள். அதற்கு நான், 'அப்படியென்றால் அவர் (பொய்) சத்தியம் செய்வாரே, (பொய் சத்தியம் செய்கிறோமே என்று) கவலைப்பட மாட்டாரே' என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஒரு செல்வத்தை அடைந்து கொள்வதற்காகப் பொய்சத்தியம் செய்கிறவர் (மறுமையில்) தன் மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனைச் சந்திப்பார்' என்று கூறினார்கள். பிறகு, இந்த நபிவாக்கை உறுதிப்படுத்தி அல்லாஹ் (தன் வேதத்தில்) வசனம் ஒன்றை அருளினான்' என்று கூறிவிட்டு, 3:77ம் வசனத்தை (இறுதி வரை) ஓதிக் காட்டினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 2515 2516.
அத்தியாயம் : 48. அடைமானம்
2) பொய்ச் சத்தியம் செய்வோருக்கான எச்சரிக்கைகள்:
لَا يُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِىْٓ
اَيْمَانِكُمْ وَلٰـكِنْ يُّؤَاخِذُكُمْ بِمَا كَسَبَتْ قُلُوْبُكُمْ وَاللّٰهُ غَفُوْرٌ حَلِيْمٌ
(மனதில் நாட்டமின்றி அடிக்கடி நீங்கள் செய்யும்) வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களை குற்றம் பிடிப்பதில்லை. ஆனால், உங்களுடைய உள்ளங்கள் (உறுதியுடன்) செய்யும் சத்தியங்களுக்காக, (அதை நீங்கள் நிறைவேற்றவில்லையாயின்) அவன் உங்களை குற்றம் பிடிப்பான். பின்னும், அல்லாஹ் (குற்றங்களை) மிக்க மன்னிப்பவனும் அதிகம் பொறுமை உடையவனுமாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 2:225)
3) சத்தியம் செய்ய விரும்புவோர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்ய வேண்டும். அல் குர்ஆனின் மீதோ தாய் தந்தையின் மீதோ கஃபாவின் மீதோ சத்தியம் செய்யக் கூடாது.
'சத்தியம் செய்கிறவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 2679.
அத்தியாயம் : 52. சாட்சியங்கள்
சத்தியம் செய்ய விரும்புகிறவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறெவர் மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில், குறைஷிகள் தம் முன்னோர்களின் மீது சத்தியம் செய்து வந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள், “உங்கள் முன்னோர்களின் மீது சத்தியம் செய்யாதீர்கள்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி) (நூல்கள் – புகாரி 3836, முஸ்லிம் 3383
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் வேண்டுமென்றே பொய்யான விஷயத்தில் சத்தியம் செய்யும்போது (நான் சொல்வது பொய்யென்றால்) இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தில் உள்ளவனாவேன் என்று கூறியவர், தான் கூறியது போல் (வேறு மார்க்கத்தில்) ஆவார். மேலும், இரும்பு ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவர் ஆதே ஆயுதத்தால் நரகில் வேதனை செய்யப்படுவார்.'
ஸாபித் இப்னு ளஹ்ஹாக்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 1363.
அத்தியாயம் : 23. ஜனாஸாவின் சட்டங்கள்
4) சத்தியத்தை நிறைவேற்ற உதவுவோம்.
பராஉ வின் ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஏழு செயல்களைச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்; ஏழு செயல்களிலிருந்து எங்களைத் தடுத்தார்கள். அவை (செய்யும்படிக் கட்டளையிட்ட ஏழு செயல்கள்) இவை தாம்;
1. நோயாளிகளை நலம் விசாரிப்பது.
2. ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது.
3. தும்மியவருக்கு அவர், 'அல்ஹம்துலில்லாஹ்' ('அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்' என்று) சொன்னால், 'யர்ஹமுக்கல்லாஹ்' (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக!) என்று பிரார்த்திப்பது.
4. சலாமுக்கு (முகமனுக்கு) பதிலுரைப்பது.
5. அக்கிரமத்திற்குள்ளானவருக்கு உதவுவது.
6. விருந்துக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்வது.
7. சத்தியம் செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்ற உதவுவது.
ஸஹீஹ் புகாரி : 2445.
அத்தியாயம் : 46. அநீதிகளும் அபகரித்தலும்
No comments:
Post a Comment