Sunday, 11 June 2017

பாவத்தில் வீழ்வதிலிருந்து பாதுகாக்கும் கேடயம் இறையச்சம்....

பாவத்தில் வீழ்வதிலிருந்து பாதுகாக்கும் கேடயம் இறையச்சம்....

حَدَّثَنَا عَطَّافُ بْنُ خَالِدٍ ، قَالَ : حَدَّثَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ خَرَجَ لَيْلَةً يَحْرُسُ النَّاسَ ، فَمَرَّ بِامْرَأَةٍ وَهِيَ فِي بَيْتِهَا وَهِيَ تَقُولُ

تَطَاوَلَ هَذَا اللَّيْلُ وَاسْوَدَّ جَانِبُهْ ... وَطَالَ عَلَيَّ أَنْ لاَ خَلِيلَ أُلاَعِبُهْ
فَوَاللَّهِ لَوْلاَ خَشْيَةُ اللهِ وَحْدَهْ ... لَحُرِّكَ مِنْ هَذَا السَّرِيرِ جَوَانِبُهْ
فَلَمَّا أَصْبَحَ عُمَرُ أَرْسَلَ إِلَى الْمَرْأَةِ ، فَسَأَلَ عَنْهَا ، فَقِيلَ
 هَذِهِ فُلاَنَةُ بِنْتُ فُلاَنٍ ، وَزَوْجُهَا غَازٍ فِي سَبِيلِ اللهِ ، فَأَرْسَلَ إِلَيْهَا امْرَأَةً ، فَقَالَ : كُونِي مَعَهَا حَتَّى يَأْتِيَ زَوْجُهَا ، وَكَتَبَ إِلَى زَوْجِهَا ، فَأَقْفَلَهُ ، ثم دخل على حفصة ابنته رضي الله عنها فقال اني سائلك عن آمر قد أهمني فافرجيه عني. في كم تشتاق امرأة الى زوجها فخفضت رأسها واستحيت قال : فان الله لا يستحي من الحق قَالَتْ : أَرْبَعَةَ أَشْهُرٍ ، أَوْ خَمْسَةَ أَشْهُرٍ ، أَوْ سِتَّةَ أَشْهُرٍ ، فكتب عمر رضي الله عنه ان لا تحـبس الجيوش فوق أربعة اشهر
رواه سعيد بن منصور في سننه واخرجه عبد الرزاق في مصنفه

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலம் அது. ஒரு நாள் இரவு உமர் (ரலி) அவர்கள் நகர்வலம் வருகின்றார்கள். ஒரு வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்கிறது. அழுகையின் ஊடாக இடையே ஏதோ சில வாசகங்களையும் அப்பெண்மனி உதிர்த்துக் கொண்டிருந்தார்.

செவியைக் கூர்மையாக்கி கேட்கின்றார்கள். அப்பெண்மனி “எத்துனை இரவுகள் என் துணைவர் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. எத்துனை நீண்டதாகத் தெரிகிறது இந்த இரவுகள்? என் துணைவர் என்னுடன் கொஞ்சிக் குலாவாமல் எங்கோ இருப்பதனால்….

அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கின்றேன்! அல்லாஹ்வின் அச்சம் மட்டும் என் உள்ளத்தில் இல்லாது போயிருக்குமானால், இந்த கட்டில் என்றோ அதன் உண்மைத் தன்மையை இழந்திருக்கும்… என் தேகமும் தான்…” என்ற பொருள் பட கவி நடையில் தன் உணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

கவிதை வரிகள் உமர் (ரலி) அவர்களின் உள்ளத்தைப் பிழிந்தது. நெருஞ்சி முள்ளாய் தைத்தது. அங்கிருந்து அமைதியாய் அகன்று விட்டார்கள்.

மறுநாள் காலை அந்த வீட்டின் விவரங்களை சேகரிக்க உத்தரவுகள் பரந்தன. இறுதியில், அப்பெண்மனியின் கணவர் அறப்போரில் கலந்து கொள்ளச் சென்று, நீண்ட காலம் ஆகியும் திரும்பி வரவில்லை என்கிற தகவல் பெறப்பட்டு கலீஃபா உமர் (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

உடனே, கலீஃபா உமர் (ரலி) அவர்கள் “ஒரு பெண்ணை தன்னோடு அழைத்துக் கொண்டு அப்பெண்மனியின் வீட்டிற்குச் சென்றார்கள். அப்பெண்மனியை அழைத்து “தன்னோடு அழைத்து வந்த அப்பெண்மனியை சுட்டிக் காட்டி இதோ! இப்பெண்மனியை  உங்களுக்குத் துணையாக வைத்துக் கொள்ளுங்கள்! தங்கள் கணவருக்கு நான் கடிதம் எழுதி அவர் உடனே ஊருக்குப் புறப்பட்டு வர ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறினார்கள்.

பின்னர், நேராக தங்களுடைய மகளான உம்முல் முஃமினீன் அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று ”மகளே! கடந்த இரு தினங்களாக என் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் குத்திக் கொண்டிருக்கிற ஒரு விஷயத்திற்கு நீ தெளிவாக விடையளித்து, என் உள்ளத்தை சிரமத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்” என்று கூறி விட்டு…

”தம் கணவனை விட்டும் பிரிந்து வாழ்கிற ஒரு பெண் எவ்வளவு நாள் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, இயல்புகளோடு இருக்க இயலும்” என்று கேட்டார்கள்.

இந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பாராத அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்கள் வெட்கத்தால் தலை கவிழ்ந்தார்கள். தந்தையே! என்ன கேள்வி கேட்கிறீர்கள் என்று தெரிந்து தான் கேட்கின்றீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு, உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ் சத்தியத்தைச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை” என்கிற இறைவசனத்தை ஓதிக் காண்பித்து விட்டு, நடந்த சம்பவத்தை கூறினார்கள்.

அப்போது, அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்கள் “நான்கு மாதம் அல்லது ஆறு மாதம்” என்று பதில் கூறினார்கள்.

இதைக் கேட்டதும் உமர் (ரலி) அவர்கள் விரைவாக மஸ்ஜிதுன் நபவீயை நோக்கி வந்தார்கள். அறப்போரில் பங்கு பெற உலகின் நாலா பாகங்களுக்கும் சென்றிருக்கிற அத்துனை படைத் தளபதிகளுக்கும் “நான்கு மாதங்களுக்கு மேலாக படையில் பங்கு பெற்றிருக்கும் போர் வீரர்கள் அனைவருக்கும் ஒரு மாத காலம் விடுப்பு கொடுத்து அவரவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப் பட வேண்டும்; இனிமேல் எந்தப் படை வீரர்களும் நான்கு மாதத்திற்கு மேல் போர்ப் பணி செய்யக்கூடாது” என கடிதம் எழுதி தூது அனுப்பினார்கள்.

        ( நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக், ஃகுலஃபாவுர் ரஸூல் {ஸல்}…. }

No comments:

Post a Comment