Tuesday, 30 July 2013

மென்மையே நன்மை!

பயான்
ஒரு மனிதனை, அவன் நல்லவனா? கெட்டவனா? என அறிய உதவுவது அவனுடைய நற்குணமே! ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமானதும் அவனுக்கு நன்மைகளை வழங்கக் கூடியதும் நற்குணமே! நற்குணமானது இவ்வுலகில் மட்டுமல்லாமல் மறுமையிலும் இறைவனின் நேசத்தையும் நன்மையையும் பெற்றுத்தரக் கூடியதாகும்.

நமக்கு முன்மாதிரியாகவும் நேர்வழிகாட்டியாகவும் இறைவன் நமக்கு அனுப்பிய நபி (ஸல்) அவர்களின் நற்குணத்தைப் பற்றி இறைவனே தன் திருமறையில்,  

நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர். (அல்குர்ஆன் 68:4)

என்று கூறுகின்றான். மேலும் நபி (ஸல்) அவர்களுடன் வாழ்ந்த நபித்தோழர்களும் அவர்களைப் பற்றியும் அவர்களின் குணங்களை பற்றியும் நிறைய செய்திகளைக் குறிப்பிட்டுள்ளனர்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்களில் மிகவும் அழகிய குணமுடையவர்களாக விளங்கினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி­),     நூல்கள்: புகாரி, முஸ்­லிம்

நபி (ஸல்) அவர்கள் தீமையைச் செய்பவர்களாகவோ சொல்பவர்களாகவோ, தீமையை நாடக்கூடியவர்களாகவோ இருந்ததில்லை. அவர்கள் சொல்வார்கள்: உங்களில் மிகச் சிறந்தவர்கள் அழகான குணமுடையவர்களே! அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ர­லி), நூல்கள்: புகாரி, முஸ்­லிம்

ஒருவர் சிறந்தவர் என்று கூற வேண்டுமானால் அவரிடம் அழகான குணமிருக்க வேண்டும். குணங்களில் மிகவும் அவசியமானவை மென்மை (நிதானம்). அறிவோடு இணைந்த இந்தக் குணத்தை அல்லாஹ் நேசிக்கின்றான். மேலும் இதற்கு நன்மைகளையும் வழங்கின்றான்.

இதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள், அப்துல் கைஸ் குலத்தின் (தலைவர்) அஷஜ்ஜு அவர்களிடம் கூறினார்கள்: உம்மிடம் அல்லாஹ் நேசிக்கக்கூடிய இரு குணங்கள் உள்ளன. 1. அறிவாற்றல், 2. நிதானம். அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி­),  நூல்: முஸ்லி­ம் (24)

சிலருக்குச் சின்ன விசயத்திற்குக் கூட கடும் கோபம் ஏற்பட்டு விடுகிறது. இதனால் நிதானம் இழந்து கடும் வார்த்தைகளை விட்டு விடுகின்றனர். இதனால் அது சிலரின் உள்ளத்தில் ஆறாத் தழும்பாய் மாறிவிடுகிறது.

தனது பலத்தால் (மனிதர்களை) அதிகம் அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி), நூல்: புகாரி (6114)


மன்னிப்போம்

அடுத்தவர்கள் தவறு செய்யும் போது அவற்றை மன்னித்து பொறுமை காப்பது நற்காரியங்களில் உள்ளதாகும்.

யார் பொறுமையை மேற்கொண்டு மன்னிக்கிறாரோ அது உறுதி மிக்க காரியங்களில் ஒன்றாகும். (அல்குர்ஆன் 42:43)

எவரிடம் பொறுமை இருக்குமோ அவரிடம் மென்மை குணமும் இருக்கும். இதனால் அடுத்தவரிடம் நன்மதிப்பைப் பெறுவதுடன் இறையருளையும் அடையலாம். குழந்தைகள் சேட்டைகள் செய்யும் போது அடித்துத் திருத்துதல் பல நேரங்களில் மோசமான விளைவை ஏற்படுத்தி விடும்.

ஆனால் மென்மையான முறையில் அணுகினால் அக்குழந்தைகள் நம்முடன் நெருங்கி இருப்பதோடு அவர்களின் தவறுகளையும் நாம் களைய முடியும்.


அன்பால் திருத்துவோம்

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பள்ளிவாச­ல் சிறுநீர் கழித்த நாட்டுப்புற மனிதரை அழகிய உபதேசத்தின் மூலம் நபி (ஸல்) அவர்கள் திருத்தியுள்ளார்கள்.

ஒரு கிராமவாசி பள்ளிவாச­ல் சிறுநீர் கழித்துவிட்டார். அவரைத் தாக்குவதற்காக அவரை நோக்கி மக்கள் கொதித்தெழுந்தனர். அப்போது மக்களிடம் நபி (ஸல்) அவர்கள், ''அவரை விட்டுவிடுங்கள்; அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி விடுங்கள். (எப்போதும்) நளினமாக நடந்து கொள்ளவே நீங்கள் அனுப்பப்பட்டுள்ளீர்கள். கடினமாக நடந்து கொள்ள நீங்கள் அனுப்பப்படவில்லை'' என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி), நூல்: புகாரி (6128)

முஸ்லி­மின் 480வது அறிவிப்பில் அந்தக் கிராமவாசியிடம் நபி (ஸல்) அவர்கள், ''இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகியவற்றுக்குரிய இடமல்ல! இது இறைவனை நினைவு கூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் உரியதாகும்'' என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.

இந்த மென்மை, குணங்களில் அழகானது மட்டுமல்ல! இது நன்மைகளை வாரி வழங்கும் அழகிய குணமுமாகும். மேலும் மென்மை இருக்கும் இடம் அழகாகி விடும்.

மென்மை எதில் இருந்தாலும் அதை அது அழகாக்கி விடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகி விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ர­லி), நூல்: முஸ்­ம் (5056)

''அல்லாஹ் மென்மையானவன். மென்மையான போக்கையே அவன் விரும்புகிறான். வன்மைக்கும் பிறவற்றிற்கும் வழங்காததையெல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ர­லி), நூல்: முஸ்லி­ம் (5055)

அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல் வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3:134)


ஆகவே நாம் கோபத்தை அடக்கி பொறுமை மேற்கொண்டு மென்மையுடன் நடந்து கொண்டால் அல்லாஹ்வின் நேசத்தையும் நன்மையையும் வாரிச் செல்லலாம்.

No comments:

Post a Comment