Thursday, 14 August 2014

சுவர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகராத பெண்கள் !!!

அஞ்ஞானக் காலத்தில் (பெண்கள்) ‘தபர்ருஜ்’ செய்ததைப் போன்று நீங்கள் செய்யாதீர்கள்’ என்று ஸூரத்துல் அஹ்ஜாப் மூலமாக இறைவன் கூறுகிறான்.‘தபர்ருஜ்’ என்பதற்கு மார்க்க அறிஞர்கள் பின்வருமாறு விளக்கம் தருகிறார்கள்.
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَىٰ ۖ وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ ۚ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًاِ
(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். (33:33)
தபர்ருஜ் என்றால் என்ன?
‘பெண்கள் தங்களின் அழகு மற்றும் அலங்காரங்களை அந்நிய ஆடவருக்கோ அல்லது மஹர்ரமற்றவர்களுக்கோ (திருமணம் செய்ய ஆகுமான உறவினர்கள் மற்றும் பிறர்) வெளிக்காட்டுவதும், பொது இடங்களில் மேக்கப்புடன் தங்களை அலங்கரித்துக் கொண்டு தோன்றுவதும், அந்நிய ஆண்களின் இச்சையைத் தூண்டும் வேறு எந்த விதமான காரியங்களைச் செய்வது தபர்ருஜ் ஆகும்’
தபர்ருஜ் செய்வதனால் விளையும் தீமைகள்:-
இமாம் அத்தாபி அவர்கள் தங்களின் ‘அல் கபாயிர்’ (பெரும் பாவங்கள்) என்ற நூலில் கூறுகிறார்கள்: ‘பெண்கள் சபிக்கப்படுவதற்கான மற்ற விஷயங்களில் மறைத்துள்ள தங்களுடைய அலங்காரத்தை வெளிக்காட்டுவதும், வெளியே செல்லும்போது வாசனை திரவியங்கள் உபயோகிப்பதும், வண்ணமயமான அல்லது சிறிய வெளிப்புற ஆடை அணிவதும் அடங்கும். தபர்ருஜ் என்பது இது அனைத்தையும் உள்ளடக்குகின்றது. மேன்மைக்குரிய அல்லாஹ் தபர்ருஜையும் அதைச் செய்யும் பெண்களையும் வெறுக்கிறான்’
தபர்ருஜ் மோசமானது:-
உமையா பின்த் ருகையா (ரழி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதற்காக நபியவர்களிடம் வந்தபோது அன்னார் அவருக்குப் பின்வருமாறு அறிவுறுத்தினார்கள்: ‘நீர் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்கக்கூடாது, திருடக் கூடாது, விபசாரத்தில் ஈடுபடக் கூடாது, நீர் உமது குழந்தைகளைக் கொல்லக் கூடாது, அவதூறு கூறலாகாது, ஓலமிட்டு அழுது புலம்பக் கூடாது, நீர் ஜாஹிலிய்யத்தில் போல ‘தபர்ருஜ்’ எனும் அழகையோ கவர்ச்சியையோ வெளிக்காட்டக் கூடாது.’ (அஹ்மத்)
அல்லாஹ்வின் தூதரவர்கள் தபர்ருஜை ஷிர்க், விபச்சாரம், திருட்டு போன்ற மற்ற மோசமான செயல்களுடன் சமமாக்கி சொல்கின்ற அளவுக்கு தபர்ருஜ் மோசமானது.
நாணம் (வெட்கம்) விலகின் ஈமானும் விலகிவிடும்:-
இஸ்லாம் வெட்கமெனும் பண்புக்கு கூடிய முக்கியத்துவம் அளிக்கிறது. ‘ஒவ்வொரு மதத்திற்குமுரிய ஒரு விஷேட ஒழுக்கப் பண்பு உண்டு. இஸ்லாத்திற்குரிய ஒழுக்கப் பண்பு வெட்கமாகும் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.’ (முவத்தா)
வெட்கம் ஈமான் சார்ந்தது. ஈமான் சுவனத்திற்குரியது’ என்பதும் ஒரு நபிமொழி. (திர்மிதி)
‘வெட்கமும் ஈமானும் ஒன்றோடொன்று இணைந்தவை. பின்னிப்பிணைந்தவை. இவற்றுள் ஒன்றை எடுத்துவிட்டால் மற்றதும் எடுபட்டு விடும்’ என்ற ஹதீஸும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். (ஹாகிம்)
இந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த வெட்க உணர்வு ஆண்களை விட பெண்களிடம் அதிகம் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அத்தகைய வெட்க உணர்வின் அடையாளமாகவும் வெளிப்பாடாகவும் இருப்பதே பெண்களுக்குரிய இஸ்லாமிய உடையாகும்.
ஆயிஷா (ரழி) அவர்கள் சொல்கிறார்கள்: ‘ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களும் எனது தந்தையும் அடக்கம் செய்யப்பட்ட அறையினுள் நான் எனது மேலாடை இல்லாது பிரவேசிப்பது வழக்கமாக இருந்தது. அவர்கள் இருவரும் எனது கணவரும், தந்தையும் தானே என்ற கருத்திலேயே அப்படி நான் நடந்து கொண்டேன். எனினும் உமர் (ரழி) அவர்கள் அங்கு அடக்கப்பட்ட பின்னர் அதனால் எனக்கேற்பட்ட கூச்ச உணர்வின் காரணமாக நான் மேலாடையில்லாது அந்த அறையினுள் பிரவேசிப்பதில்லை.’ (இப்னு அஸாகிர்)
அந்நிய ஆடவர் விடயத்தில் அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் எத்தகைய கருத்தை கொண்டிருந்தார்கள் என்பதை இச்சம்பவம் காட்டுகின்றது. மரணத்திற்குப் பின்னாலேயே அவர்கள் இப்படி நடந்து கொண்டார்கள் என்றால் உயிரோடிருப்பவர்களுக்கு முன்னால் எப்படி நடந்து கொண்டிருப்பார்கள் என்பதை ஊகிக்க முடியும்.
உண்மையில் அந்நிய ஆண்களுக்கு முன்னால் பெண்கள் இந்தளவு நாணத்துடனும் அடக்கமாகவும் நடந்து கொள்ளல் வேண்டும் என்பதே இஸ்லாமிய ஷரீஆவின் எதிர்;பார்ப்பாகும். மற்றொரு நபிமொழி இங்கு எமது சிந்தனைக்குரியதாகும்.
‘அல்லாஹ் நாணமிக்கவன். மிகவும் மறைந்திருக்கக் கூடியவன். அவன் வெட்கத்தையும், மறைப்பையும் விரும்புகிறான்.’ (அபூதாவுத்)
இந்த ஹதீஸ் வெட்க உணர்விற்கும் மறைத்தலுக்கும் இடையே உள்ள இறுக்கமான தொடர்பை எடுத்துக்காட்ட போதுமானதாகும்.
நற்குணம் படைத்த மனைவி
மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் ‘இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக’ என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.’ திருக்;குர்ஆன் 66 –11
நல்ல மனைவியானவள் இரத்த பந்த உறவு முறைகளை முறிக்காமலும், கணவருக்கு கீழ்ப்படிந்து நடக்க கூடியவளாகவும் இருக்க வேண்டும். தன்னுடைய பெற்றோர்களிடமும், மற்றும் குழந்தைகளிடமும் எந்த மாதிரியாக நடந்துக்கொள்ள வேண்டும். வெளி இடங்களிலும், வெளி நபர்களிடமும், பொது இடங்களிலும் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்ற மனைவிகளுக்குரிய பல பங்குகளை பற்றி திருமறையானது பல இடங்களில் குறிப்பிடுகிறது.
ஒரு மனிதன் எவ்வளவு தான் நன்னடத்தையுள்ளவனாக இருந்தாலும் சரிதான். அவனுடைய மனைவி நன்னடத்தை உடையவளாக இல்லையெனில், அவனால் ஒரு போதும் இவ்வுலகில் நிம்மதியுடனும், மன அமைதியுடனும் வாழ்ந்திட முடியாது
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :‘உலகின் அனைத்துப் பொருள்களும் அனுபவிப்பதற்காக உள்ளவைதாம்! அவற்றில் சிறந்த பொருள் நன்னடத்தை உள்ள மனைவி!’ அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) ஆதாரம் : முஸ்லிம், மிஷ்காத்

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...