Tuesday, 26 May 2015

மணமகனுக்காகப் பிரார்த்திப்பது



6386. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களின் (ஆடை) மீது (வாசனைத் திரவியத்தின்) மஞ்சள் நிற அடையாளத்தை நபி(ஸல்) அவர்கள் கண்டபோது 'விஷயம் என்ன?' அல்லது 'என்ன(இது)?' என்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள், ஒரு பேரீச்சங்கொட்டை எடையளவு தங்கத்தை (மஹ்ராக)க் கொடுத்து ஒரு பெண்ணை நான் மணமுடித்துக் கொண்டேன்' என்று பதிலளித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், 'பாரகல்லாஹு லக்க' (அல்லாஹ் உங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவானாக!) என்று பிரார்த்தித்துவிட்டு, 'ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா-மணவிருந்து அளியுங்கள்' என்று கூறினார்கள்.
Book : 80
6387. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
என் தந்தை (உஹுதுப் போரில்) இறந்துவிட்டார்கள். (இறங்கும்போது) 'ஏழு' அல்லது 'ஒன்பது' பெண் மக்களைவிட்டுச் சென்றார்கள். எனவே, (அவர்களைப் பராமரிப்பதற்கேற்ப) நான் (ஒரு கன்னிகழிந்த பெண்ணை) மணந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்) 'ஜாபிரே! மணமுடித்துக் கொண்டாயாமே?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்' என்று பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள், 'கன்னிப் பெண்ணையா? அல்லது கன்னி கழிந்த பெண்ணையா? (யாரை மணந்தாய்?)' என்று கேட்டார்கள். நான், 'கன்னி கழிந்த பெண்ணைத்தான்' என்று சொன்னேன். 'கன்னிப் பெண்ணை மணந்து 'அவளோடு நீயும் உன்னோடு அவளுமாக கூடிக்குலாவி மகிழ்ந்திருக்கலாமே!' அல்லது 'நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே!' என்று கேட்டார்கள்.
நான், 'என் தந்தை ஏழு அல்லது ஒன்பது பெண்மக்களைவிட்டுவிட்டு இறந்துவிட்டார்கள். அந்தப் பெண்மக்களைப் போன்று (இளவயதுப்) பெண்ணை (மணந்து) அவர்களிடம் அழைத்துச் செல்வதை நான் விரும்பவில்லை. எனவே, அவர்களைப் பராமரிக்கும் (தகுதியுள்ள கன்னிகழிந்த ஒரு) பெண்ணை நான் மணமுடித்துக் கொண்டேன்' என்று கூறினேன். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், 'பாரக்கல்லாஹு அலைக்க' (அவ்வாறாயின் அல்லாஹ் உங்கள் மிது அருள்வளம் பொழிவானாக) என்று பிரார்த்தித்தார்கள். 

No comments:

Post a Comment