Pages

Tuesday, 3 December 2019

வஞ்சப்புகழ்ச்சியும் குறைதான்

வஞ்சப்புகழ்ச்சியும் குறைதான்

ஃகலீஃபா உமர் {ரலி} அவர்கள் ஆட்சிக்காலத்தில் ஷாம் தேசத்திலிருந்து ஒரு முஸ்லிம் உமர் {ரலி} அவர்களைக் காண வந்திருந்தார். இருவரும் உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த மனிதர் ”அமீருல் முஃமினீன் அவர்களே!   மாநபி {ஸல்} அவர்களுக்குப் பிறகு சிறந்த மனிதராகவும், முஃமின்களின் சிறந்த தலைவராகவும் உங்களைத் தான் நான் கருதுகிறேன்.

 என்றார்.அதற்கு உமர் {ரலி} அவர்கள் அப்படியா? என்று கேட்டுவிட்டு, “நீர் எனதருமைத் தோழர் அபூபக்ர் ஸித்தீக் {ரலி] அவர்களைப் பார்த்திருக்கிறீரா? என்று கேட்டார்கள்.     அதற்கு அவர் இல்லை நான் பார்த்ததில்லை என்று பதில் கூறினார். உடனே உமர் {ரலி} அவர்கள் “நீர் மட்டும் என் தோழர் அபூபக்ர் {ரலி} அவர்களை பார்த்திருக்கிறேன் என்று கூறியிருந்தீர் என்றால் உம்மை சாட்டையால் அடித்து விரட்டி இருப்பேன். என் தோழரை குறைபடுத்தி,என்னை உயர்வாக்கி புகழ்கிறீரோ?                       எத்தனையோ நாட்கள் அபூபக்ர் {ரலி} அவர்களின் நெஞ்சில் முளைத்திருக்கும் ரோமத்தைப் போன்றாவது நான் இருந்திருக்கக் கூடாதா? என ஏங்கிய நாட்கள் உண்டு. அப்படிப்பட்ட என் தோழரை குறைத்து மதிப்பிட்டு, என்னை உயர்வாகக் கருதுகிறீரோ?” என்று கேட்டார்கள்.
  
நூல்: ஃகுல்ஃபாவுர் ரஸூல் {ஸல்}, பக்கம்:86

உம்மத்தின் நிலை

பெரும்பாலும் குறை கூறுவோர் ”தாம் மிக உயர்வாகவும், மதிப்போடும் நடத்துகிறவர்களிடம் தான் உற்று நோக்கிப் பார்த்து அதை பிறரிடம் கூறிக் கொண்டிருப்பார்கள்.” அதனால் தான் இன்று ஆலிம்கள்,சமுதாயத் தலைவர்கள் மீது வெகு விரைவாக குறை கூற முடிகிறது. ஆனால், அது இந்த உம்மத்திற்கு அழகல்ல என்று பெருமானார் {ஸல்} அவர்கள் நயம்பட உரைத்திருக்கிறார்கள்.   

ஹிஜ்ரி 8 ஜமாதில் அவ்வல் மாதம் நடை பெற்ற மூத்தா யுத்தம். அந்த யுத்தத்தில் பெருமானார் {ஸல்} அவர்களால் நியமிக்கப்பட்ட மூன்று தளபதிகள் ஒருவர் பின் ஒருவராக வீர மரணம் அடைய, இறுதியாக இக்கட்டான நேரத்தில் காலித் இப்னு வலீத் {ரலி} அவர்கள் படைத்தளபதி பொறுப்பை ஏற்கிறார்கள். 

அதுவரை பெரும் நெருக்கடிக்கும், துன்பத்திற்கும் உள்ளான முஸ்லிம்களின் படை காலித் [ரலி} பொறுப் பேற்றதும் புதுத்தெம்பையும், பொலிவையும் அடைகிறது. ஆனாலும் எதிரிப்படையினர் இரண்டு லட்சம் பேர், முஸ்லிம்களின் படையின் எண்ணிக்கையோ வெறும் பத்தாயிரம் தான், காலித் {ரலி} அவர்கள் தங்களது மதியூகத்தால் பெரும் படையை பின் வாங்கி ஓட வைத்தார்கள். ஒரு கட்டத்தில் தொடர்ந்து சென்று தாக்க வேண்டாம் என தளபதி காலித் {ரலி] உத்தரவு பிறப்பிக்கிறார்கள். அன்று மாலையே படையை மதீனாவிற்கு திருப்பிடுமாறு மீண்டும் படையினருக்கு மறு உத்தரவு பிறப்பிக்கிறார்கள் தளபதி காலித் இப்னு வலீத் {ரலி} அவர்கள். வீரர்கள் மதீனா வருவதற்கு முன் இஸ்லாமியப் படை பின்வாங்கி ஓடி வருகிறது எனும் செய்தி காட்டுத் தீப் போல மதீனமாநகரெங்கும் பரவியது. மதீனாவிற்குள் நுழைந்த படையினரை வரவேற்று வாழ்த்துச் சொல்வதற்குப் பதிலாக, மதீனாவின் எல்லையில் திரண்டிருந்த மக்களெல்லாம் ”அல்லாஹ்வின் பாதையில் மன உறுதியோடு போராடாமல் விரண்டோடி வந்தவர்களே! என்று ஒட்டுமொத்தப் படையினர் மீதும் மண் வாரி தூற்றினர்
. செய்தி கேள்விப்பட்டு ஓடி வந்த அண்ணலார் தளபதியிடம் யுத்த களம் குறித்து விசாரிக்கிறார்கள். தளபதி காலித் [ரலி} அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! எதிரிகள் இரண்டு லட்சம் பேர்,முஸ்லிகளோ வெறும் பத்தாயிரம் பேர் தான். மேலும் சூழ்நிலைகள் சாதகமாகி,எதிரிகள் பின் வாங்கி ஓடும் போது தான் திரும்பி வந்து விடுவது சாலச் சிறந்ததாக நான் கருதி படையினரை மதீனா திரும்புமாறு நான் கட்டளையிட்டேன் என்று கூறினார்கள். திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தை நோக்கி மாநபி {ஸல்} அவர்கள் “மக்களே! இவர்கள் விரண்டோடி வந்தவர்களல்லர். எதிர்காலத்தில் அல்லாஹ் நாடினால்…உறுதியுடன் போராடுபவர்கள். என்று கூறினார்கள்.

           நூல்: தஹ்தீப் ஸீரத் இப்னு ஹிஷாம், பக்கம்:213

 இங்கே குறை கூறுவதற்கு முன்னால் குறைகளை சுமத்து வோரின் இடத்தில் தங்களை வைத்துப் பார்க்க வேண்டும் என நபி [ஸல்} அவர்கள் தங்களின் நடவடிக்கயின் மூலம் இந்த உம்மத்திற்கு படிப்பினை தருகிறார்கள்.

மொத்தத்தில் எந்த ஒரு முஸ்லிமும் வேறெந்த ஒருமுஸ்லிமின் குறைகளையும் தேடித் திரிந்து அதைப் பரப்பிக் கொண்டு அலையக் கூடாது என இஸ்லாம் இயம்புகிறது.

அல்லாஹ் கூறுகின்றான்:    

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِيْرًا مِّنَ الظَّنِّ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ‌ وَّلَا تَجَسَّسُوْا وَلَا يَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًا‌  اَ يُحِبُّ اَحَدُكُمْ اَنْ يَّاْكُلَ لَحْمَ اَخِيْهِ مَيْتًا فَكَرِهْتُمُوْهُ‌  وَاتَّقُوا اللّٰهَ‌  اِنَّ اللّٰهَ تَوَّابٌ رَّحِيْمٌ‏ 

  “இறை நம்பிக்கை கொண்டவர்களே! அதிகமான எண்ணங்களில் இருந்து தவிர்ந்துவிடுங்கள். ஏனெனில், எண்ணங்களில் சிலது பாவமாக இருக்கின்றன மேலும், பிறரின் குறைகளை துப்பறிவதில் ஈடுபடாதீர்கள்.
                                      
 அல்குர்ஆன்:49:12

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “ 

 நாவால் ஈமான் கொண்டு உள்ளத்தால் உறுதி கொள்ளாத கூட்டமே! முஸ்லிம்களைப் பற்றி புறம் பேசாதீர்கள்;மேலு அவர்களின் குறைகளை தேடித்திரியாதீர்கள். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை தேடித்திரிகின்றாரோ,அவரின் குறைகளை அல்லஹ்வும் தேடுவான், எவரின் குறைகளை அல்லாஹ் தேட ஆரம்பித்து விடுவானோ அவரை அல்லாஹ் கேவலப் படுத்திவிடுவான் அவர் தன் வீட்டில் வைத்து மறைவாக செய்த போதிலும் சரியே!”

 அறிவிப்பாளர்: அபூ பர்ஸா {ரலி}
   நூல்: தஃப்ஸீர் குர்துபீ,பாகம்:9,பக்கம்:139

நெப்போலியன் ஹில் எனும் எழுத்தாளன் சொல்வான்

 “வீட்டிலும்,வீதியிலும் சுற்றித்திரியும் நாய் தான் உடலைச் சுற்றி பறக்கும் பூச்சிகளைக் கண்டு குரைத்துக் கொண்டிருக்கும். அது போலத்தான் சிலர் மற்றவர்களின் குறையை பெரிதுபடுத்தி பேசித்திரிவார்கள்.

 அவர்களைக் கண்டுப் பயப்படாதீர்கள். காரியம் ஒன்றையே கருத்தில் கொண்டு முன்னேறுங்கள்.
எனவே குறை  கூறும் குணத்தை விட்டொழிப்போம்!

ஈமானை மாசு படுத்தும் குணத்திலிருந்து விடுபடுவோம்!

ஈருலக நன்மைகளைப் பெறுவோம்!!!


No comments:

Post a Comment