Pages

Saturday, 17 August 2013

* ஏப்ரல் 1 – முட்டாள்கள் தினமா?

சிந்தனை
கண்ணியமிக்க அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர். அவர்கள் ஒட்டுக் கேட்கின்றனர் அவர்களில் அதிகமானோர் பொய்யர்கள். (அல்குர்ஆன் : 26: 221 – 223)

பொய் பேசுவதை சாதாரணமாகவும் விளையாட்டாகவும் சிலர் கருதினாலும் அது பிற மக்களின் தனிவாழ்விலும் பொது வாழ்விலும் விரும்பத்தகாத பாதிப்புகளை ஏற்படுத்தி விடுவதைப் பார்க்கிறேம். 

சுயநலன் மேலோங்க தனிமனிதனின் பேசும் பொய் அவனது குடும்பத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிப்படையச் செய்கிறது. ஆரம்பத்தில் அவன் பேசுவதே புத்திசாலிதனம் என சிலாகித்துச் சொல்லப்பட்டாலும் நாளடைவில் அவனது தன்மை வெறுப்பிற்குரியதாக ஆகி விடுகிறது. 

பொய்யின் விழைவு

அரசியல்வாதி பேசும் பொய் நாட்டையும் மக்களையும் முடமாக்கும் நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது. 

ஒரு நாட்டின் அதிபர் கொள்ளும் விருப்பு வெறுப்பு பிற நாடுகளுடனான நல்லுறவைப் பாதித்து மக்களுக்கும் சேதாரங்களை ஏற்படுத்தி விடுகிறது. 

ஊடகங்கள் பேசும் பொய்யினால் பல மதங்கள் வாழும் நாட்டில் அவர்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தி விடுகிறது.

கட்சித்தலைவன் பேசும் பொய் அவனது கட்சியை கடைந்தெடுத்த அயோக்கியர்களின் பாசறையாக ஆக்கி விடுகிறது.

வரலாற்றாசிரியன் எழுதும் பொய்யினால் வரும் தலைமுறை களின் வாழ்வும், பாரம்பரியமும் வன்கொடுமைக்கு ஆளாகும் துர்பாக்கியம் ஏற்பட்டு விடுகிறது.

ஆசிரியன் பேசும் பொய் மாணவனை மலட்டுச்; சிந்தனையாளனாக ஆக்கி விடுகிறது.

கவிஞனின் பொய் வீண் கற்பனைகளிலேயே அவனையும் மக்களையும் உழலச் செய்கிறது. 

மார்க்க விஷயங்களில் உண்மை வடிவத்தை தேடாமல் - நாடாமல் பொய்யான கதைகளில் மூழ்கி கிடந்தால் மறுமை வாழ்வே நஷ்டத்தில் ஆகி விடுகிறது.

எனவே தான் இட்டுக்கட்டிப் பொய்ப் பேசும் ஒவ்வொருவரும் பாவி! அவர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகின்றனர். ஷைத்தான்களே அவர்களுக்குத் தோழமையாக ஆக்கப்படுகிறான். அவனோ கெட்ட தோழன். அல்லாஹ்வின் மீதே பொய் கூறுவான். மனிதர்களை மீளாத்துயரத்தில் இம்மை மறுமை வாழ்வை துக்கத்தில் ஆக்கி விடும் கெட்ட சகவாசி

நமக்குத் தேவைதானா இந்த துயரம்? பொய்யினால் வேண்டுமா இந்த நஷ்டக்கூட்டு? அல்லாஹ் பாதுகாப்பானாக!

மனிதர்களில பலர் பிறரை கிண்டல் செய்து அல்லது கேலி செய்வதன் மூலம் மற்றவர்கள் படும் சங்கடங்களை கண்டு சந்தோஷப்படும் பழக்கம் இருந்து வருகிறது. உலகம் முழுவதும் ஏப்ரல் ஃபூல் எனும் பெயரில் ஏப்ரல் 1-ம் தேதி அன்று மற்றவர்களை கேலி செய்வதும், கிண்டல் செய்வதும் நடைமுறை பழக்கமாகி அதனை வருடந்தோறும் முட்டாள்கள் தினம் எனும் பெயரில் கொண்டாடி வருவதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி அன்று உலகம் முழுவதும் உள்ள பள்ளிக்கூட மாணவர்கள், நண்பர்கள், நெருக்கமானவர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் பொய்யான விஷயங்களை உண்மை போன்று சொல்வதன் மூலம் தனக்கு வேண்டியவர்களே படும் சிரமங்களை பார்த்து சிரிக்க போகும் விழாவினை கொண்டாட இருக்கின்றனர்.

நாள் உருவான விதம்

 இந்த நாள் எப்படி உருவானது என மூன்று வகையான காரணங்களை சொல்கின்றனர். அதாவது ரோமானியர் களும், ஹிந்துக்களும் பழங்கால கலாச்சாரத்தில் ஏப்ரல் 1-ம் தேதியை தான் புதிய வருடப்பிறப்பாகக் கொண்டாடினர்.

* ஐரோப்பியர்கள் ஏப்ரல் ஃபூல் என்பதை ஏப்ரல் ஃபிஷ் என்றழைத்தனர். ஏனெனில் சூரியன் இந்த நாளில் தன் பாதையை மாற்றிக் கொள்வதால் இவ்வாறு அழைத்தனர். மேலும் ஏப்ரல் முதல் வாரத்தில் இயேசு கிருஸ்து சங்கடத்திற்குள்ளானதாக கிருஸ்தவர்கள் நம்புகின்றனர்.

* மேலும், 1582ம் ஆண்டு போப் கிரிகோரி 13 என்பவர் இன்றைய நடைமுறையில் உள்ள ஜனவரி 1-ம் தேதி புது வருடப் பிறப்பு நாளை அறிமுகப்படுத்தியதை ஃபிரான்ஸில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தனர். அத்தகைய பழமைவாதிகளை கிண்டல் செய்யும் விதமாக, பொய் வதந்திகளை பரப்பி முட்டாளாக்கினர். பின்னர் நாளடைவில் அது ஐரோப்பா முழுவதும் பரவி ஏப்ரல் ஃபூல் எனும் பெயரில் அடுத்தவர்களை முட்டாளாக்கக்கூடிய தினமாக கொண்டாடப்படுகிறது.

* முஸ்லீம் சமுதாயத்திலே இந்த நாள் உருவான வரலாறு எனும் பெயரில் ஒரு கதையையும் ஏற்படுத்தியுள்ளனர். அதாவது, முஸ்லீம்கள் ஸ்பெயினை 800 ஆண்டுகாலம் ஆட்சி செய்தனர். முஸ்லீம்களை கருவருக்க வேண்டும், ஐரோப்பாவை விட்டு இஸ்லாத்தை துடைத்தெறிய வேண்டும் என்பதற்காக ஐரோப்பியர்களும், கிருஸ்த வர்களும் இணைந்து, திட்டம் தீட்டி, முஸ்லீம்களை தாங்கள் கொண்டிருக்கும் கொள்கை யிலிருந்து விலக்கி விட வேண்டும் என்பதற்காக அன்றைய ஸ்பெயினில் இருந்த முஸ்லிம் இளைஞர்களுக்கு மதுவையும், போதை வஸ்துக்களையும் உட்கொள்ள பழக்கியதன் மூலம் அவர்களை உலக ஆசையின் பக்கம் திருப்பினர்.

இதனால் முஸ்லீம்களிடம் ஏற்பட்ட கொள்கை சறுக்கலை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி அங்கிருந்த இஸ்லாமிய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, கிருஸ்தவ ஆட்சியை நிறுவினர். அன்றைய முஸ்லீம் ஸ்பெயின் வீழ்ந்தது ஏப்ரல் 1-ம் தேதி என்பதால், முஸ்லீம்களை ஏப்ரல் சூழ்ச்சி எனும் பெயரில் எள்ளி நகையாட உருவாக்கப்பட்டதுதான் இந்த ஏப்ரல் 1-ம் தேதி எனும் முட்டாள்கள் தினம் என்கின்ற ஒரு கருத்தும் நம் சமுதாயத்தில் நிலவி வருவதை நாம் யாரும் மறுக்க இயலாது. 

ஆனால் இத்தகைய சிந்தனைகள் முஸ்லீம் இளைஞர்களிடத்தில் ஏற்படுவது, அவர்களை மற்ற சமுதாயத்தினருக்கிடையில் குறிப்பாக கிருஸ்தவர்களை பற்றி வெறுப்பு தான் ஏற்படும் என்பதை ஏனோ உணர மறுக்கின்றனர். மேலும், முஸ்லீம் ஸ்பெயின் வீழ்ந்தது ஏப்ரல் 1-ம் தேதி அல்ல. ஜனவரி 12-ம் தேதி 1492ம் வருடம், முஸ்லீம் ஆட்சியாளர்களுக்குள் ஏற்பட்ட ஒற்றுமையின்மை, பதவிப் போட்டி, திறமையின்மை போன்றவை தான் முஸ்லீம் ஸ்பெயின் வீழ்வதற்கு காரணம் என்பதை உணர வேண்டும்.

ஏப்ரல் 1- முட்டாள்கள் தினம் உருவான வரலாறு பலவாறாக சொல்லப்பட்டாலும், முஸ்லீம்களாகிய நாம் இந்த நாளைக் கொண்டாடுகிறோம் எனும் பெயரில், பொய் சொல்வது கூடுமா? கூடாதா? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

நம்பிக்கைக் கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கலாம். எந்தப் பெண்களும் வேறு பெண்களை கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கைக் கொண்டபின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன் 49:11)

சிலர் தனக்கு மிகவும் நெருக்கமாக உள்ள மனைவி, குழந்தைகள், பெற்றோர் போன்றவர்களிடம், இறந்து விட்டதாக அல்லது ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு விட்டது போன்ற அதிர்ச்சி தரும் செய்திகளை அனுப்பி, அதனால் அவர்கள் படும் சங்கடங்களை கண்டு ரசிக்கின்றனர். சிரிக்கின்றனர். ஆனால் இந்த அற்ப சந்தோசம் சில நேரங்களில் இந்த செய்தியை கேட்ட மாத்திரத்தில் பலவீனமான இதயம் உள்ளவர்கள் உயிரையே குடித்து விடும் என்பதை ஏனோ மறந்து விடுகின்றனர்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
விளையாட்டுக்காகக் கூட பொய் சொல்லாதவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீடு கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். (அபூஉமாமா(ரலி) அபூதாவூது) 

இத்தகைய பொய்யான செயல்கள் நம்மிடம் இருக்குமேயானால் நம்மிடம் நயவஞ்சகதனத்தின் பண்புகள் உள்ளது என்பதை உணர்ந்துக் கொள்ள வேண்டும். 

நயவஞ்சகனின் பண்புகள் மூன்று: 1. பேசினால் பொய் பேசுவான். 2. வாக்களித்தால் மாறு செய்வான். 3. நம்பினால் மோசடி செய்வான். (அபூஹ_ரைரா(ரலி) புகாரி, முஸ்லீம்)

நீர் உம் சகோதரரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி அதை அவர் உண்மையென்று கருதிக் கொண்டிருக்கையில், நீர் சொன்ன விஷயம் பொய்யாய் இருப்பது நீ அவருக்கு செய்யும் நம்பிக்கை துரோகமாகும். (ஸஃப்யான் பின் அஸீத் ஹள்ரமி(ரலி) அபூதாவூது)

மேலும் மக்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காகவும், நேரத்தை போக்குவதற்காகவும் தான் என்று காரணம் சொல்பவர்களையும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள் என்பதையும் விளங்கி விடுபட வேண்டும்.

எவனொருவன் மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக பொய் சொல்வானோ அவன் நாசமடைவானாக! அவன் நாசமடைவானாக! அவன் நாசமடைவானாக! என்று சபித்தார்கள். (முஆவியா பின் ஹைதா(ரலி) திர்மிதி 235, அபூதாவூது 4990)

ஒரு முறை நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் பயணத்தில் இருந்தோம். எங்களில் ஒருவர் அயர்ந்து உறங்கினார். எங்களில் சிலர் அம்மனிதரின் அம்புகளையும், வாளையும் எடுத்து ஒளித்து வைத்தனர். அவர் உறக்கத்திலிருந்து எழுந்து, தன் பொருளை காணாமல் அதிர்ந்து தேடலானார். மக்கள் சிரித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், எதற்காக சிரித்தீர்கள் என வினவினார்கள். அப்போது, ஒன்றுமில்லை! இந்த மனிதரி;ன் அம்புகளையும் வாளையும் ஒளித்து வைத்து இவரை பயமுறுத்தினோம் என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ஒரு முஸ்லீமை பயமுறுத்துவது ஆகுமானதல்ல! என்றார்கள். (அப்தூர் ரஹ்மான் இப்னு அபீலைலா(ரலி)அபூதாவூது 5004, அஹ்மது 22555) 

மேலும்,அதேப்போல் இன்று நம் சமுதாயச் சொந்தங்களிடத்திலே தங்களுக்கு யாரையாவது பிடிக்கவில்லை என்றால் அல்லது தன் இயக்கத்துக்கு எதிராக இருந்தால் அல்லது தங்களின் சுயலாபம் இந்த நபரால் பறிபோய் விடும் என்று எண்ணினால் அவதூறுகள் பரப்புவதை பார்க்கிறோம். அதை கேள்விப்படும் நாமும் விசாரிக்காமல் அப்படியே பரப்பி விடுகின்றோம். அத்தகைய செயல்களை செய்வதற்கு முன் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டும்.

கேள்விப்பட்டதையெல்லாம் பரப்புபவன் பொய்யன் என்பதற்கு அடையாளமாகும் (ஹாபிஸ் இப்னு ஆஸிம்(ரலி) முஸ்லீம்)

நம்மிடையே விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை அதை விட்டும் விலக்குவதற்காக அல்லது அதை விட்டு வருவதற்காக எதையாவது தருவதாக ஆசை காட்டி அழைப்பது வழக்கம். ஆனால் அதையும் கூடாது என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தடைச் செய்கிறார்கள்.

எவர் ஒருவர் குழந்தைக்கு பொருள் தருவதாக அழைத்து, தரவில்லையோ அது பொய் என அவர் பெயரில் எழுதப்படும் (அபூஹூரைரா(ரலி) அபூதாவூது 4991)

நம்முடைய பேச்சுக்கள் நமக்கு எப்படிப்பட்ட அந்தஸ்தை தரும் என்பதை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கன்:

உண்மைபேசுவது நேர்மையாகும். நேர்மையானது ஒருவரை சொர்;க்கத்தில் கொண்டு சேர்க்கும். உண்மைப் பேசிக் கொண்டிருக்கும் காலம் வரை அவர் உண்மையாளர் பட்டியலில் இருப்பார். பொய் பாவங்களின் ஊற்றுக் கண்ணாகும். பாவமானது ஒருவரை நரகில் கொண்டுச் சேர்க்கும். பொய்ச் சொல்லிக் கொண்டிருக்கும் காலம் வரை அவர் பொய்யர்களின் பட்டியலில் இருப்பார் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி) புகாரி 5743, முஸ்லீம் 2607)

அதேசமயம் இஸ்லாமிய மார்க்கம் அவசியம் ஏற்படும்போது பொய் சொல்லவும் அனுமதி வழங்கியுள்ளது. அதாவது

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மூன்று இடங்களில் பொய் சொல்ல அனுமதி வழங்கியுள்ளார்கள். 1. மனைவியை சந்தோசப்படுத்துவதற்காகவும் 2. இரண்டு பேருக்கு மத்தியில் சமாதானம் செய்து வைப்பதற்காகவும் 3. போரின் போதும் பொய் சொல்ல அனுமதி அளித்துள்ளார்கள். (அஸ்மா பின்த் யஸீது (ரலி) திர்மிதி 1939)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களே! நீங்கள் சிரிக்க வைத்து பேசமாட்டீர்களா? என வினவியதற்கு, நானும் சிரிக்க வைத்து பேசுவேன். ஆனால் உண்மையை தவிர வேறு எதையும் பேசுவதில்லை என்று பதில் கூறினார்கள். (அபூஹ_ரைரா(ரலி) திர்மிதி 1990)

ஆகவே அல்லாஹ்வின் நல்லடியார்களே! இந்த அளவுக்கு அல்லாஹ்வும், அவனின் திருத்தூதரும் கண்டித்துள்ள பொய் பேசுவது, பொய்யான செய்கைகள் செய்வதிலிருந்தும், அத்தகைய செயல்களையே பிரதானப்படுத்தும் ஏப்ரல் 1-ம் தேதி கொண்டாட்டங்களிலிருந்தும் நாம் விலகி உண்மையான முஸ்லீமாக வாழ்ந்து எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் உண்மையாளர் என்ற பெயர் எடுக்க வல்ல அல்லாஹ் கிருபைச் செய்வானாக!

No comments:

Post a Comment