Saturday, 30 November 2019

தண்ணீரைப் பற்றி திருக்குர்ஆன்.

தண்ணீரைப் பற்றி  திருக்குர்ஆன்.

وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً بِقَدَرٍ فَاَسْكَنّٰهُ فِى الْاَرْضِ‌ وَاِنَّا عَلٰى ذَهَابٍ بِهٖ لَقٰدِرُوْنَ‌ ‏ 
மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்.
(அல்குர்ஆன் : 23:18)

உலகத்தில் உள்ள நீரில் 3 % மட்டுமே நல்ல தண்ணீர். இதை மட்டுமே நாம் குடிக்கப் பயன்படுத்த முடியும். இதிலும் 2 % சதவீத தண்ணீர் பனிக்கட்டியாக உள்ளது .வெறும் 1 % தண்ணீர் மட்டுமே பூமி முழுவதும் நாம் வாழும் பகுதியில் கிடைக்கிறது.
        மழை பெய்வதன் மூலம் மட்டுமே நாம் அதிகளவு நல்ல தண்ணீரைப் பெறுகிறோம். மழை பெய்வதற்கு மூலகாரணமாக இருப்பது அடர்ந்த வனப்பகுதிகள்தான். வனப்பகுதியின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஐ.நா .சபை 2011 ஆம் ஆண்டை சர்வதேச வன ஆண்டாக  அறிவித்துள்ளது. நாம் பெரும்பாலும் நதியின் மூலமே தண்ணீரைப் பெறுகிறோம். நதியின் பிறப்பிடம் அருவி. அருவியின் பிறப்பிடம் மலை உச்சி. வனம் அதிகம் இருக்கும் மலை உச்சியில் ஒரு வகையான மண் உள்ளது. அந்த மண், அங்கு மண்ணில் விழும் இலைச் சருகுகளுடன் இணைந்து ஒரு புது வகையான மண்ணாக மாறி விடுகிறது. அந்த மண்ணின் சிறப்பு என்னவென்றால் எவ்வளவு மழை பெய்தாலும், அவ்வளவு மழைநீரையும் பிடித்து வைத்துக் கொள்கிறது. பிறகு, பிடித்து வைத்த மழை நீரை, சொட்டுச் சொட்டாக வெளிவிடுகிறது. இந்தச் சொட்டுகள் இணைந்து சிறு நீரூற்றாக மாறுகிறது. சிறு நீரூற்றுகள் இணைந்து அருவியாக மாறுகிறது. அருவி நதியாகிறது. வனத்தின் முக்கியத்துவம் இதுதான். வனம் பாதிக்கப்படும் போது நம் நீராதாரமும் பாதிக்கப்படும்.
தண்ணீருக்கு அடிப்படையாக இருக்கும் மழை பொழிவது எப்படி?
        பூமியில் உள்ள நீரை, சூரியன் நீராவியாக மாற்றி , மேலே இழுத்துச் சென்று அந்தரத்தில் மேகமாக நிறுத்தியிருப்பதை இன்று அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம் . இம்மேகக்கூட்டங்களின் பிரமாண்டத்தைப் பற்றிப் பெரும்பாலான மக்கள் இன்று கூட அறிந்திருக்கவில்லை. மேலே இழுத்துச் செல்லப்படும் நீராவியானது, ஒன்றோடொன்றாக ( இழுத்து ) இணைக்கப்பட்டு ஆலங்கட்டி (பனிக் கட்டி) தொகுப்புகளாக மாற்றப்படுகின்றது. இப்பனிக் கட்டிகள் , ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு, 1000 அடி முதல் 30 ,000 அடிகள் வரை உயர்கின்றது. 30,000 அடி என்பது 9 கிலோ மீட்டரை விட அதிகமாகும். இது உலகின் பெரிய மலையான இமய மலையின் உயரத்தை விட அதிகம். இவ்வளவு பெரிய மலையின் அளவுக்கு இந்தப் பனிக் கட்டிகள், செங்குத்தாக அடுக்கப்பட்டு, மின் காந்தத் தூண்டுதல் ஏற்பட்டவுடன். பனிக் கட்டிகள் உருகி தண்ணீரைக் கொட்டுகின்றன. இது மழையின் இரகசியமாகும். 'மழை எவ்வாறு உருவாகின்றது ' என்பது பற்றிய – இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றைத் தான் மேலே சுருக்கமாக விவரிக்கப் பட்டுள்ளது.
இதை பற்றி உலகப்பொது மறையான திருகுரானிலே (24 :43) என்கிற வசனம் அப்படியே கூறுவதைப் பார்த்து பிரமித்துதான் போகிறோம் . இறைவனின் வார்த்தைகளே - குர்ஆன் - என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை!

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يُزْجِىْ سَحَابًا ثُمَّ يُؤَلِّفُ بَيْنَهٗ ثُمَّ يَجْعَلُهٗ رُكَامًا فَتَرَى الْوَدْقَ يَخْرُجُ مِنْ خِلٰلِهٖ‌ وَيُنَزِّلُ مِنَ السَّمَآءِ مِنْ جِبَالٍ فِيْهَا مِنْ بَرَدٍ فَيُـصِيْبُ بِهٖ مَنْ يَّشَآءُ وَ يَصْرِفُهٗ عَنْ مَّنْ يَّشَآءُ‌  يَكَادُ سَنَا بَرْقِهٖ يَذْهَبُ بِالْاَبْصَارِ‏ 

 (நபியே !) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து , பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்;  இன்னும் அவன் வானத்தில் மலைக (ளைப் போன்ற மேக கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்;  அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான்-  தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான்- அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது. ( 24:43 )

மனித வாழ்வில் தண்ணீர் மிக மிக முக்கியமானது உணவு இல்லாமல் கூட உயிர் வாழலாம் ஆனால் தண்ணீர் இல்லாமல் மனிதன் உயிர் வாழமுடியாது. எனவேதான் நபி ஸல் அவரகள் தண்ணீர் தர்மத்திற்கு அதிக முக்கியத்துவம் தந்தார்கள்.