Pages

Friday, 6 November 2020

பூகம்பம், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர்களில் இருந்து படிப்பினை பெற வேண்டும்...

 பூகம்பம், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர்களில்  இருந்து படிப்பினை  பெற வேண்டும்...


 


இந்த மனித சமூகம் தீய வழிகளிலிருந்து விலகி நேர்வழியில் தொடர்ந்து பயணிக்க வேண்டும், பாவங்களில் இருந்து தம்மை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும், இறைவன் வகுத்த வரம்புகளில், எல்லைகளில் கவனத்தோடு செயல்பட வேண்டும் என்பன போன்ற பல பாடங்களையும், படிப்பினைகளையும் பெற வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறான பேரிடர்களையும், பேரிழப்புக்களையும் அல்லாஹ் ஏற்படுத்துகின்றான்.


أَأَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ () أَمْ أَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا فَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرِ ()


“வானத்திலிருப்பவன் உங்களைப் பூமியினுள் ஆழ்த்தி விடுவதையும், அப்போது உடனே பூமி அதிரத்தொடங்குவதையும் குறித்து நீங்கள் அச்சமின்றி இருக்கின்றீர்களா? அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கற்களைப் பொழியும் காற்றை அனுப்புவது குறித்து நீங்கள் அச்சமின்றி இருக்கின்றீர்களா? இவைகள் வந்து விட்டால் பிறகு உங்களுக்கு தெரிந்து விடும் எனது எச்சரிக்கை எப்படி இருக்கின்றது என்று!”                                                    

( அல்குர்ஆன்: 67:16,17 )


ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ ()


“மனிதர்களின் கரங்கள் செய்த தீய வினைகளினால் அம்மனிதர்கள் படிப்பினைப் பெற்று திருந்தி திரும்ப வேண்டும் என்பதற்காக அத்தீய வினைகள் சிலதின் பிரதிபலனை தண்டனையை அவர்களுக்கு அல்லாஹ் உணரச்செய்வதற்காக கடலிலும், கரையிலும் பெரும் ஆபத்துக்களை விளைவிக்கின்றான்”.

                                                          (அல்குர்ஆன்:30:41)


حدثنا علي بن حجر حدثنا محمد بن يزيد الواسطي عن المستلم بن سعيد عن رميح الجذامي عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام بال قطع سلكه فتتابع قال أبو عيسى وفي الباب عن علي وهذا حديث غريب لا نعرفه إلا من هذا الوجه


“என் சமூகத்தினர் பதினைந்து வகையான பாவங்களை மிகச் சாதாரணமாகக் கருதி செய்ய ஆரம்பித்து விட்டால் அவர்களின் மீது சோதனைகளும் வேதனைகளும் இறங்கிவிடும்” என நபி {ஸல்} அவர்கள் கூறியபோது…


அல்லாஹ்வின் தூதரே! அவைகள் என்ன? என்று நபித்தோழர்கள் வினவ, அப்போது நபி {ஸல்} அவர்கள் 


“ஃகனீமத் சொந்தப்பொருளாகவும், அமானிதம் ஃகனீமத் பொருளாகவும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டால்,


 ஜகாத்தை கடன் சுமை போன்று கருத ஆரம்பித்து விட்டால்,

 கணவன் மனைவிக்கு அடிபணிபவனாக ஆகிவிட்டால், 

தன் தாய்க்கு நோவினை கொடுத்து, 

தன் நண்பனுக்கு முன்னுரிமை அளித்து, தந்தைக்கு அநீதம் இழைத்தால்,

 ஒரு மனிதனுக்கு அவனுடைய தீங்கை நினைத்து கண்ணியம் கொடுக்கப்பட்டால்,

 சமுதாயத் தலைவர்கள் கீழ்த்தரமானவர்களாக மாறி விட்டால்,

 மஸ்ஜித்களில் உலகப்பேச்சு பெருகி விட்டால், 

மது பகிரங்கமாக அருந்தப்பட்டால், பட்டாடைகள் அணியப்பட்டால், பாடகிகளையும், இசைக் கருவிகளையும் பிரதானமாகக் கருத ஆரம்பித்தால், 

இந்த உம்மத்தின் மேன்மக்களான முன்னோர்கள் பின்னோர்களால் தூற்றப்பட்டால்”  

நீங்கள் கொடுங்காற்றையும், பூமியில் புதையுண்டு போவதையும், உருமாற்றம் செய்யப்படுவதையும் எதிர் பாருங்கள்” என நவின்றார்கள்.                                      


(நூல்: திர்மிதீ )


ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் நபித்தோழர்களோடு அமர்ந்திருக்கும் ஓர் சபையில் நில நடுக்கத்தின் பிரதிபலிப்பை மக்களோடு அண்ணலாரும் உணர்ந்த போது தோழர்களை நோக்கிய நபிகளார் “மக்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு தண்டனை கொடுக்க நாடுகின்றான். எனவே, நீங்கள் அவனிடம் பாவமன்னிப்புக் கோரி தண்டனையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.                                   

( நூல்: இப்னு அபீ ஷைபா )


எனவே, நம்மைச் சுற்றி அன்றாடம் நடக்கிற நிகழ்வுகளில் இருந்தும், எப்போதாவது, என்றைக்காவது நடக்கிற நிகழ்வுகளில் இருந்தும் தீர்க்கமான பாடத்தையும், தெளிவான படிப்பினையையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.


அதிலும் குறிப்பாக இரத்தத்தை உறைய வைக்கிற, உள்ளத்தை பதற வைக்கிற கோரமான பேரிடர்களில் இருந்து நிறைவான பாடத்தைப் பெற வேண்டும்.


அப்போது தான் இந்த உலக வாழ்க்கை மன நிறைவாகவும், மறு உலக வாழ்க்கை சோபனம் நிறைந்ததாகவும் ஆகும்.


அல்லாஹ் நம் அனைவர்களையும் அவன் ஆற்றலை விளங்கி, முழுக்க முழுக்க அவனை அஞ்சி, வணங்கி வழிபட்டு வாழும் பாக்கியத்தைத் தந்தருள் புரிவானாக! ஆமீன்!! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!

No comments:

Post a Comment