Pages

Friday, 6 November 2020

வெற்றியிலிருந்து பெற வேண்டிய பாடமும்… படிப்பினையும்…

 வெற்றியிலிருந்து பெற வேண்டிய பாடமும்… படிப்பினையும்…


ஸைப்ரஸ் இது சிரியாவின் மேற்கே அமைந்திருந்த ஓர் அழகிய தீவு. ஆனால், இப்போது இஸ்லாமியர்களுக்கெதிரான அபாயகரமான தீவாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.


ஆம்! ரோமர்கள் முஸ்லிம்களுடன் தோற்றுப் போய் ஓடி ஒளிந்து அங்கு தான் தஞ்சம் புகுந்திருந்தனர். இப்போதோ அவர்கள் பெருமளவில் ஆயுதங்களைத் திரட்டி வலுவான கப்பற்படையை உருவாக்கி முன்னர் அடைந்த தோல்விக்கு பலி வாங்கும் முகமாக தயாராகி முஸ்லிம்களை அழிக்க நாள் குறித்துக் கொண்டிருந்தனர்.


இந்த தீவின் மீது படையெடுத்து அங்கேயும் ரோமர்களை வெற்றி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் முஆவியா (ரலி) அவர்களுக்கு இருந்தது. ஆயினும், உமர் (ரலி) அவர்கள் அதற்குள் ஷஹாதா வீரமரணம் அடைந்து விட்டார்கள்.


இதே கருத்தை உஸ்மான் (ரலி) அவர்களிடம் முஆவியா (ரலி) அவர்கள் தெரிவித்த போது உஸ்மான் (ரலி) அவர்கள் அதற்கு ஒப்புதல் தந்தார்கள்.


இதற்கு முன்னர் நடந்த போர்கள் அனைத்தும் நிலங்களிலும், பாலைவனங்களிலும் நடைபெற்றது. ஆனால், இது முற்றிலும் வேறுபட்டு கடல் மார்க்கமாக நடைபெறும் போராகும். ஆகவே, எந்த ஒரு முஸ்லிமையும் நிர்பந்திக்காமல், வற்புறுத்தாமல் படை வீரர்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையோடு சைப்ரஸ் மீது போர் தொடுக்க அனுமதி வழங்கினார்கள்.


அல்லாஹ்வின் மார்க்கத்தை மேலோங்கச் செய்ய அல்லவா போர் நடத்தப் படுகின்றது. ஆர்வமாக பலர் வந்து இணைந்து கொள்கின்றார்கள். அந்தப் படையில் அபூதர் அல் ஃகிஃபாரீ (ரலி), ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரலி) உப்பாதா இப்னு ஸாமித் (ரலி) அவரின் மனைவி உம்மு ஹராம் பிந்த் மில்ஹான் (ரலி), அபூதர்தா (ரலி) ஆகிய மூத்த நபித்தோழர்களும் தங்களை இணைத்துக் கொண்டனர்.


அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) அவர்களின் தலைமையில் படை கடல் மார்க்கமாக புறப்பட்டுச் சென்றது.


அல்லாஹ் அந்தப் போரை வெற்றிகரமாக முடித்து வைத்தான். இந்தப் போர் ஹிஜ்ரி 28 மற்றும் 29 –இல் நடைபெற்றது.


ஏராளமான பொருட்செல்வங்கள் ஃகனீமத்தாக வந்து சேர்ந்தன. அந்தச் செல்வங்களை எல்லாம் முஸ்லிம் வீரர்கள் பெருமிதத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.


كانت الدنيا كلها في عين أبي الدرداء مجرّد عارية..

عندما فتحت قبرص وحملت غنائم الحرب الى المدينة رأى الناس أبا الدرداء يبكي... واقتربوا دهشين يسألونه، وتولى توجيه السؤال اليه:" جبير بن نفير":

قال له:

" يا أبا الدرداء، ما يبكيك في يوم أعز الله فيه الاسلام وأهله"..؟؟

فأجاب أبو الدرداء في حكمة بالغة وفهم عميق:

ويحك يا جبير..

ما أهون الخلق على الله اذا هم تركوا أمره..

بينما هي أمة، ظاهرة، قاهرة، لها الملك، تركت أمر الله، فصارت الى ما ترى"..!

أجل..


அதையெல்லாம் கண்ட அபூதர்தா (ரலி) அவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள். அருகில் இருந்த ஜுபைர் இப்னு நஃபீர் (ரலி) அவர்கள் “அபூதர்தா அவர்களே! அல்லாஹ் சத்திய சன்மார்க்கத்திற்கு வலுவையும், வெற்றியையும் தந்திருக்கும் இந்த தருணத்தை மகிழ்ச்சியோடும், ஆனந்தத்தோடும் வரவேற்காமல் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கின்றீர்களே?” ஏன் என்ன காரணத்திற்காக அழுகின்றீர்கள்?”.


அபூதர்தா (ரலி) அவர்கள் வினா தொடுத்த ஜுபைரை நோக்கி “ஜுபைரே! அல்லாஹ்வோ வெற்றிக்கு மேல் வெற்றியாக வழங்கிக்கொண்டிருக்கின்றான். வெற்றியும் ஆட்சியும், நிலப்பரப்பும் விரிவடைந்து, அதனால் கிடைக்கும் வெகுமதியில் மனம் மயங்கி, இறைவனுக்குரிய வணக்க வழிபாடுகள் விஷயத்தில் முஸ்லிம்கள் பொடுபோக்காக இருந்து விட்டால் எத்தகைய கேவலமானவர்களாக அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் காட்சி தருவார்கள்?”


ஜுபைரே! இதோ, நம் கண் முன்னே வீழ்ந்து கிடப்பவர்களும், கைதியாய் நிற்பவர்களும் யார் தெரியுமா? நேற்று வரை இந்தப் பூமியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள். ஆனால், எல்லாம் வல்ல அல்லாஹ்வை மறந்து, அகங்காரத்தோடும், ஆணவத்தோடும் இருந்ததால், இன்று நம்மிடம் தோற்றுப் போய் இருக்கின்றார்கள்.


இதைப் போன்ற ஓர் மனோநிலை இந்த பொருட்செல்வங்களையும், வெகுமதிகளையும் கண்டு பிரமித்து நிற்கிற முஸ்லிம்களுக்கு ஏற்படுமானால், இன்றைய இந்த வெற்றி நாளை என்னவாகும்?” இவர்களுக்கு ஏற்பட்ட கதி நாளை நமக்கும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லையே?” என்று நினைத்து தான் நான் அழுகின்றேன்” என்றார்கள் அபூதர்தா (ரலி) அவர்கள்.


மனிதன் உலக வாழ்வில் பெறுகின்ற வெற்றியில் இருந்தும், முன்னேற்றத்தில் இருந்தும் எத்தகைய உயரிய படிப்பினையையும், பாடத்தையும் பெற வேண்டும் என்பதை அபூதர்தா (ரலி) அவர்கள் நமக்கு உணர்த்துகின்றார்கள்.

وروى جبير بن نفير، عن عوف بن مالك أَنه رأَى في المنام قبة من أَدَم في مرج أَخضر، وحول القبة غَنَم رَبوض تجتر وتَبعر العجوة، قال: قلت: لمن هذه القبة ؟ قيل: هذه لعبد الرحمن بن عوف. فانتظرناه حتى خرج فقال: يا ابن عوف، هذا الذي أَعطى الله عز وجل بالقرآن، ولو أَشرفت على هذه الثنيه لرأَيت بها ما لم تر عينك، ولم تسمع أذنك، ولم يخطر على قلبك مثله، أَعد. الله لأَبي الدرداء إِنه كان يدفع الدنيا بالراحتين والصدر.


அவ்ஃப் இப்னு மாலிக் அல் அஷ்ஜயீ (ரலி) எனும் சீரிய நபித்தோழர். ஃபத்ஹ் மக்காவின் போது அஷ்ஜயீ கோத்திரத்தாரின் அணியை தலைமையேற்று வழி நடாத்தி தமது கோத்திரத்தாரின் கொடியை நபிகளாரின் ஆணைக்கிணங்க பிடித்தபடி மக்காவில் நுழையும் பாக்கியத்தைப் பெற்றவர்கள்.


ஒரு நாள் கனவொன்று கண்டார்கள். அந்தக் கனவில் பரந்து விரிந்த ஓர் சோலைவனம். நிழல் படர்ந்த அடர்த்தியான மரங்கள். அதன் நடுவே உயர்ந்த மாடங்கள் கொண்ட ஓர் அழகிய கூடாரம். முழுக்க தோலினால் ஆன அழகிய கூடாரம் அது. தம் வாழ்நாளில் அதுவரை கண்டிராத கூட்டம் கூட்டமாக செம்மறி ஆட்டின் மந்தை!


இவ்வளவு உயர்ந்த இந்த பூஞ்சோலை யாருக்குரியது?” என வினவினாராம் அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள். தூரத்தில் இருந்து “இது அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களுக்குரியது” என்று அசரீரி வந்தது.


அசரீரியைக் கேட்டுக் கொண்டே முன்னெறிய போது கூடாரத்தின் உள்ளிருந்து வெளியேறிய அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், அவ்ஃப் இப்னு மாலிக்கிடம் சொன்னார்களாம்: “அவ்ஃபே! இது அல்லாஹ் நமக்கு தருவதாக குர்ஆனில் வாக்களித்திருந்தவைகளாகும்.


அதோ தெரிகிறதே அந்த மேடான பகுதிக்குச் சென்றால் அங்கே நீர் கற்பனைக்கு எட்டாதவைகளை எல்லாம் காண்பீர்” என்றார்கள்.


அப்போது அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் “அது யாருக்கு உரியது அபூ முஹம்மத் அவர்களே?” என்று வினவ, வல்ல ரஹ்மான் தோழர் அபூதர்தா (ரலி) அவர்களுக்காக ஆயத்தப்படுத்தி வைத்துள்ளான்.


ஏனெனில், அவர் உலகில் வாழும் போது தமது முழு ஆற்றலையும் பயன் படுத்தி உலக வளங்களை விட்டும், சுக போக வாழ்வை விட்டும் ஒதுங்கி வாழ்ந்தார். ஆதாலால் இன்று மிகப்பெரிய செல்வந்தனாக மாறிப்போனார்” என்று அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் பதில் கூறினார்களாம்.


இதை ஜுபைர் இப்னு நஃபீர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


  ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}…., உஸ்துல் காபா )


உலக வாழ்வின் பல பகுதிகளில் இருந்தும் தேவையான பாடங்களையும், படிப்பினைகளையும் பெறுகின்றவர்களால் மட்டுமே இது போன்ற உன்னதமான அந்தஸ்தைப் பெற இயலும் என்பதை மேற்கூரிய நிகழ்வு நமக்கு உணர்த்துகின்றது.

No comments:

Post a Comment