Pages

Wednesday, 4 December 2019

நபிஇப்றாஹீம்(அலை)அவர்கள் ஓர் அழகிய முன்மாதிரி


நபிஇப்றாஹீம்(அலை)அவர்கள் ஓர் அழகிய முன்மாதிரி


அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கிற பாக்கியங்களில் மிகவும் அற்புதமானது நமக்கு வழங்கியுள்ள வாழ்க்கை தான்.
அந்த வாழ்க்கையில் தாய், தந்தை, கணவன், மனைவி, சகோதரன், சகோதரி, பிள்ளைகள் என பெருங்கொண்ட இணைப்புகளை ஏற்படுத்தி குடும்பம் என்கிற அமைப்போடு வாழ வைத்திருக்கின்றான்.
நாம் வாழ்கிற சொற்பமான இந்த வாழ்க்கையை இஸ்லாமிய அடிப்படையில் அர்த்தமுள்ள வாழ்க்கையாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக அமைய வேண்டுமானால் அங்கே சில அற்புதமான பங்களிப்பை நாம் தந்தாக வேண்டும்.
அல்லாஹ் தந்திருக்கிற வாழ்க்கையை அவன் வடிவமைத்துத் தந்திருக்கிற குடும்ப அமைப்பை இஸ்லாமிய வாழ்வுக்காக தயார் படுத்தி சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்துகிற போது வாழும் போதும் நாம் மதிக்கப்படுவோம். வாழ்க்கைக்குப் பிறகும் நாம் கௌரவப் படுத்தப் படுவோம்.
அப்படியானதொரு வாழ்க்கையை வாழ்ந்து சென்றிருக்கிற அல்லாஹ்வின் நேசர் இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார்களின் உயரிய ஓர் பங்களிப்பை நினைவு கூறும் முகமாக தியாகத் திருநாள் எனும் இந்நன்நாளில் நம்மை எல்லாம் நினைவு கூற வைத்திருக்கின்றான் வல்ல ரஹ்மான்.
இப்ராஹீம் நபியின் வாழ்க்கைத் தருகிற மகத்தான பாடங்களில் ஒன்று ஒரு குடும்பமாக எவ்வாறு அல்லாஹ்விற்காக வாழ வேண்டும் என்பது தான்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் வாழ்க்கைக்குப் பிறகு முன் மாதிரியான வாழ்க்கை அமைப்பைக் கொண்டவர்களாக இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்க்கையைத் தான் குறிப்பிடுகின்றான்.
قَدْ كَانَتْ لَكُمْ أُسْوَةٌ حَسَنَةٌ فِي إِبْرَاهِيمَ وَالَّذِينَ مَعَهُ
“உங்களுக்கு இப்ராஹீமிடத்திலும் அவருடைய தோழர்களிடத்திலும் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கின்றது”.                       ( அல்குர்ஆன்: 60:4 )
மேலும், அல்லாஹ் உலக மக்களில் அவரின் குடும்பத்தாரை சிறந்தோர்களாக ஆக்கியதாகவும் பறை சாற்றுகின்றான்.
إِنَّ اللَّهَ اصْطَفَى آدَمَ وَنُوحًا وَآلَ إِبْرَاهِيمَ وَآلَ عِمْرَانَ عَلَى الْعَالَمِينَ
”திண்ணமாக, அல்லாஹ் அகிலத்தார்களில் ஆதத்தையும், நூஹையும், இப்ராஹீமின் குடும்பத்தாரையும், இம்ரானின் குடும்பத்தாரையும் சிறந்தோர்களாக தேர்ந்தெடுத்துக் கொண்டான்”.                                  ( அல்குர்ஆன்: 3:33 )
நம் உயிரினும் மேலான பெருமாளார் (ஸல்) அவர்களைப் புகழ வேண்டும், அவர்களின் குடும்பத்தார்களுக்கு துஆ செய்ய வேண்டும் என்றால்..
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، فِي الْعَالَمِينَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
இறைவா! நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள்  மீதும், நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார்களுக்கும் எவ்வாறு அருள்புரிந்தாயோ அது போன்று அருள்புரிவாயாக! நீயே! புகழுக்குரியோனும், மதிப்புமிக்கவனும் ஆவாய்!
இறைவா! நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார்கள்  மீதும், நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார்களுக்கும் எவ்வாறு கருணைபுரிந்தாயோ அது போன்று கருணைபுரிவாயாக! நீயே! புகழுக்குரியோனும், மதிப்புமிக்கவனும் ஆவாய்!” என்று இப்ராஹீம் (அலை) அவர்களையும், அவர்களின் குடும்பத்தார்களையும் இணைத்துக் கூறிதான் கேட்க வேண்டும் என மார்க்கம் நமக்கு வழிகாட்டுகின்றது.
இது இந்த யுக முடிவு நாள்  வரையிலும் இன்றளவும், ஏன்? தனியாகவோ, கூட்டாகவோ, கடமையான தொழுகையிலோ, ஜனாஸா தொழுகையிலோ, மேற்கூறியவாறு தான் ஓத முடியும். இன்னும் சொல்லப் போனால் இது தான் நாம் நபி (ஸல்) அவர்களின் மீது ஓதகிற ஸலவாத்தில் மிகச் சிறந்ததும், உயர்வானதும் ஆகும்.
, இப்ராஹீம் (அலை) அவர்கள் “மகனே! கனவில் உம்மை அறுப்பது போல் கண்டேன். அது குறித்து உமது அபிப்பிராயம் தான் என்ன என்பதைச் சொல்!” என்றார்கள்.
அதற்கு, இஸ்மாயீல் (அலை) அவர்கள் “என் தந்தையே! உங்களுக்கு என்ன கட்டளையிடப்பட்டுள்ளதோ அதைச் செய்து விடுங்கள்! அல்லாஹ் நாடினால், என்னைப் பொறுமையாளர்களில் ஒருவராகக் காண்பீர்கள்”
இந்த நிகழ்வில் தோற்றம் தருவது இப்ராஹீம் (அலை) என்கிற தனியொரு மனிதரின் தியாகம் அல்ல. மாறாக, மூன்று நல்ல உள்ளங்களில் இருந்து வெளிப்பட்ட தியாகங்களின் சங்கமம். அம்மூவரின் தியாகத்தில் எந்த தியாகம் சிறந்தது? யாருடைய தியாகம் உயர்ந்தது? என விடை காண முடியாத புதிராகும்.
ஆம்! தள்ளாத வயதிலும் ஆசையோடு வளர்த்தெடுத்து, அன்பு காட்டிய குழந்தையை இழக்க முன்வருகிற தந்தையின் தியாகமா?
இல்லை, தன் எதிர்கால வாழ்வை நோக்காது தன்னை முழுவதுமாய் அர்ப்பணம் செய்ய முன்வந்த சின்னஞ்சிறு பாலகனின் தியாகமா?
தன் வாழ்நாளின் கடைசியில் தமக்கு ஆதரவாய், அரவணைப்பாய் இருக்க வேண்டிய ஒப்பற்ற ஓர் உறுதுணையை இழக்க முன்வந்த தாயின் தியாகமா?
                 எந்தத் தியாகம் உயர்ந்தது!!!?”
அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாரின் ஒட்டு மொத்த தியாகத்தைக் கண்டு வியந்து போனான்.
إِنَّ هَذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ (106)
“திண்ணமாக, இது மகத்தான சோதனை தான்”    ( அல்குர்ஆன்: 37:106 )
அவர்களின் தியாக உணர்வை ஏற்றுக் கொள்ளும் பொருட்டு, இஸ்மாயீல் (அலை) அவர்களுக்குப் பகரமாக ஓர் ஆட்டை சுவனத்திலிருந்து இறக்கியருளி அதைப் பலியிடுமாறு அல்லாஹ் ஆணையிட்டான்.
அவர்களின் தியாகத்தைப் போற்றும் பொருட்டு நமக்கும் குர்பானி கொடுப்பதை சுன்னா எனும் நபிவழியாக ஆக்கியிருக்கின்றான்.
உலகில் எல்லாமும் மாறிக் கொண்டிருக்கையில் 1400 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு மாற்றத்தையும் காணாமல், பழமை மாறாமல் அதே உணர்வுடன், வழிபாடு என்கிற எண்ணத்துடன் கோடான கோடி முஸ்லிம்களால் இன்றளவும் பின்பற்றப் படுகிற ஓர் வணக்கமாக அல்லாஹ் ஆக்கியிருக்கின்றான்.
எனவே, நாம் நம்முடைய குடும்ப அமைப்பை அல்லாஹ்விற்காக வாழ்பவர்களாக மாற்றியமைக்க முன் வரவேண்டும்.

No comments:

Post a Comment