Pages

Friday, 10 April 2015

தர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்

தர்மம் வழங்குவதன் சிறப்புகளையும் அதற்குக் கிடைக்கும் நன்மைகளையும் கடந்த இதழ்களில் பார்த்தோம். தர்மம் வழங்காதவர்கள் அடையும் தண்டனைகளைப் பற்றி குர்ஆனும் ஹதீசும் என்ன சொல்கின்றது என்பதை இப்போது பார்ப்போம். 
வள்ளலுக்கும் கஞ்சனுக்கும் உதாரணம் 
"கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்து வரை இரும்பாலான அங்கிகள் அணிந்த இரு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர் தர்மம் செய்யும் போதெல்லாம் அவருடைய அங்கி விரிந்து விரல்களை மறைத்துக் கால்களை மூடி, தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக் கூடாது என்று எண்ணும் போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும் அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அஹுரைரா (ரலி), 
நூல்: புகாரி 1443, 1444, 5797 
ஜகாத் கொடுக்காதவரின் தண்டனை
உலகில் ஒட்டகம் வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்றவில்லையாயின் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து, தனது கால்களால் அவனை மிதிக்கும். மேலும் அது போலவே உலகில் ஆடு வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்றவில்லை என்றால் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து தனது குளம்புகளால் அவனை மிதித்துத் தனது கொம்புகளால் அவனை முட்டும். மேலும் உங்களில் யாரும் கியாமத் நாளில் கத்திக் கொண்டிருக்கும் ஆட்டைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து, (அபயம் தேடிய வண்ணம்) முஹம்மதே என்று கூற, நான் "அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரம் இல்லை'' என்று கூறும் படியான நிலை ஏற்பட வேண்டாம். நிச்சயமாக நான் அறிவித்து விட்டேன். மேலும் யாரும் (கியாமத் நாளில்) குரலெழுப்பிக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து, முஹம்மதே என்று கூற, நான் "அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரம் இல்லை'' என்று கூறும் படியான நிலை ஏற்பட வேண்டாம். நிச்சயமாக நான் அறிவித்து விட்டேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அஹுரைரா (ரலி), 
நூல்: புகாரி 1402 
நிதி சேகரிப்பு! நெருப்பில் சஞ்சரிப்பு!
அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டப்படுவார்கள். அந்நாளின் வேதனைக்கு ஈடாக தன் மகன்களையும், தனது மனைவியையும், தனது சகோதரனையும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான். அவ்வாறில்லை! அது பெரும் நெருப்பாகும். அது தோலை உரிக்கும். பின்வாங்கிப் புறக்கணித்தவனையும், (செல்வத்தை) சேர்த்துப் பாதுகாத்தவனையும் அது அழைக்கும். (அல்குர்ஆன் 70:11-18)
குறை கூறி புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான். அவன் செல்வத்தைத் திரட்டி அதைக் கணக்கிடுகிறான். தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று எண்ணுகிறான். அவ்வாறில்லை! ஹுதமாவில் அவன் எறியப்படுவான். ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு. அது உள்ளங்களைச் சென்றடையும். நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும்.
(அல்குர்ஆன் 104:1-9) 
செலவிடாதவர்கள் நஷ்டவாளிகள் 
நான் நபி (ஸல்) அவர்களிடம் போய்ச் சேர்ந்தேன். அப்போது அவர்கள் கஅபாவின் நிழலில் இருந்தவாறு, "கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக அவர்கள் நஷ்டவாளிகள். கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக அவர்கள் நஷ்டவாளிகள்'' என்று சொல்லத் தொடங்கினார்கள். நான், "என் நிலை என்ன? என் தொடர்பாக அவர்களுக்கு ஏதேனும் காட்டப்படுகின்றதா? என் நிலை என்னாவது?'' என்று சொல்லிக் கொண்டே அவர்கள் அருகில் அமர்ந்தேன். அப்போது நபியவர்கள், "என்னால் பேசமாலிருக்க இயலவில்லை. அல்லாஹ் நாடிய ஏதோ ஒன்று என்னைச் சூழ்ந்து கொண்டது'' என்று கூறினார்கள். உடனே நான், "என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "அதிகச் செல்வம் படைத்தவர்கள். ஆனால் (நல்வழியில் செலவிட்ட) சிலரைத் தவிர'' என்று கூறியவாறு இவ்வாறு இவ்வாறு இவ்வாறு கைகளால் சைகை செய்தார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி), 
நூல்: புகாரி 6638 
சேர்த்து வைப்போருக்குப் போடப்படும் சூடு 
நம்பிக்கை கொண்டோரே! மதகுருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர். "அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்று எச்சரிப்பீராக! அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். "இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்!'' (என்று கூறப்படும்)
அல்குர்ஆன் 9:34,35) 
இன்றைய பணமழை நாளைய பாம்பு மாலை 
அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனது கழுத்தில் சுற்றிக் கொண்டு தனது இரு விஷப்பற்களால் அவனது தாடையைக் கொத்திக் கொண்டே, "நான் தான் உனது செல்வம், நான் தான் உனது புதையல்'' என்று கூறும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர், அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத் தனம் செய்வோர், "அது தங்களுக்குச் சிறந்தது' என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் என்ற (அல்குர்ஆன் 3:180) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), 
நூல்: புகாரி 1403 
ஏழைக்கு வழங்காத பொருள் எரிந்து போகும்
அந்தத் தோட்டத்துக்குரியோரைச் சோதித்தது போல் இவர்களையும் நாம் சோதித்தோம். "காலையில் அதை அறுவடை செய்வோம்'' என்று அவர்கள் சத்தியம் செய்து கூறினர். இறைவன் நாடினால் (அறுவடை செய்வோம்) என்று அவர்கள் கூறவில்லை. எனவே அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது உமது இறைவனிட மிருந்து சுற்றி வளைக்கக் கூடியது அ(த்தோட்டத்)தைச் சுற்றி வளைத்தது. அது காரிருள் போல் ஆனது. 
"நீங்கள் அறுவடை செய்வதாக இருந்தால் உங்கள் விளை நிலத்துக்குச் செல்லுங்கள்! இன்று உங்களிடம் எந்த ஏழையும் நுழைந்து விட வேண்டாம்'' என்று அவர்கள் குறைந்த சப்தத்தில் பேசிக் கொண்டே காலையில் ஒருவரையொருவர் அழைக்கலானார்கள். தடுக்க ஆற்றலுடையோராகவே அவர்கள் சென்றார்கள். அழிக்கப்பட்ட அ(த்தோட்டத்)தைக் கண்ட போது, "நாம் வழி மாறி (வேறு இடம்) வந்து விட்டோம்'' என்றனர். இல்லை! நாம் (அனைத்தையும்) இழந்து விட்டோம். 
அவர்களில் நடுநிலையாக நடந்து கொண்டவர், "நீங்கள் இறைவனைத் துதித்திருக்க வேண்டும்'' என்று நான் உங்களிடம் கூறவில்லையா? என்று கேட்டார். "எங்கள் இறைவன் தூயவன். நாங்கள் அநீதி இழைத்து விட்டோம்'' என்றனர். அவர்களில் ஒருவர் மற்றவரிடம் குறை கூறியோராக முன்னோக்கினார்கள். "எங்களுக்குக் கேடு ஏற்பட்டு விட்டதே! நாங்கள் வரம்பு மீறிவிட்டோமே!'' என்றனர். "இதை விடச் சிறந்ததை எங்கள் இறைவன் எங்களுக்குப் பகரமாக்கித் தரக் கூடும். நாங்கள் எங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைப்பவர்கள்'' (என்றும் கூறினர்) இப்படித் தான் (நமது) வேதனை இருக்கும். மறுமையின் வேதனை மிகப் பெரியது. அவர்கள் அறிய வேண்டாமா?
(அல்குர்ஆன் 68:17-33) 
பூகம்பத்தில் புதைந்த பொருளாதாரம் 
காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமை மிக்க கூட்டத்தினருக்குச் சிரமமாக இருக்கும். "மமதை கொள்ளாதே! மமதை கொள்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்'' என்று அவனிடம் அவனது சமுதாயத்தினர் கூறியதை நினைவூட்டுவீராக! அல்லாஹ் உனக்குத் தந்தவற்றில் மறுமை வாழ்வைத் தேடு! இவ்வுலகில் உன் கடமையை மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்தது போல் நீயும் நல்லுதவி செய்! பூமியில் குழப்பத்தைத் தேடாதே! குழப்பம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் (என்றும் கூறினர்). "என்னிடம் உள்ள அறிவின் காரணமாகவே இது எனக்குத் தரப்பட்டுள்ளது'' என்று அவன் கூறினான். இவனை விட அதிக வலிமையும், ஆள் பலமும் கொண்ட பல தலைமுறையினரை இவனுக்கு முன்பு அல்லாஹ் அழித்திருக்கிறான் என்பதை இவன் அறியவில்லையா? அவர்களின் பாவங்கள் பற்றி இக்குற்றவாளிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள். தனது அலங்காரத்துடன் அவன் தனது சமுதாயத்திடம் சென்றான். "காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா? அவன் பெரும் பாக்கியமுடையவனாக இருக்கிறான்'' என்று இவ்வுலக வாழ்க்கையை விரும்புவோர் கூறினர். "உங்களுக்குக் கேடு தான். நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவருக்கு அல்லாஹ்வின் கூலி தான் சிறந்தது. பொறுமையாளர்கள் தவிர மற்றவர்களுக்கு அது வழங்கப்படாது'' என்று கல்வி வழங்கப்பட்டோர் கூறினர். அவனை அவனது வீட்டோடு சேர்த்து பூமிக்குள் புதையச் செய்தோம். அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யும் ஒரு கூட்டத்தினரும் இருக்கவில்லை. அவன் உதவி பெறுபவனாகவும் இல்லை.
(அல்குர்ஆன்28:76-81)

No comments:

Post a Comment