Pages

Sunday, 3 November 2013

குழந்தைகளுக்குக் கைவைத்தியம்...

  குழந்தைகளிடையே தோன்றும் மன ரீதியான சிக்கல் பற்றி?

வளரும் குழந்தைகளிடையே மனரீதியான அழுத்தம் அதிகரித்துக் கொண்டே இருப்பது உண்மை. அதிக அளவு, அதிக நேரம் அவர்கள் பாடங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. போட்டிகளும் அதிகம். அதுமட்டுமல்ல பெற்றோரின் ஆசை குழந்தைகள்மேல் திணிக்கப்படுகிறது. படிப்பில் தன் பிள்ளை முதலாவதாக வரவேண்டும் என்றே ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கிறார்கள். பள்ளிகளில் சரியாகப் படிக்க முடியாத பிள்ளைகள், பின் நாளில் பெரிய அறிஞர் ஆனதை நாம் பார்த்துள்ளோம். எனக்கு கணக்கே வராது. அதனால் மருத்துவம் எடுத்தேன். என்னால் அதில் ஜெயிக்க முடிந்தது. குழந்தைகளுக்கு எது விருப்பமோ அதில் ஊக்கப்படுத்தினால் மனரீதியான பிரச்னை குறையலாம்.

குழந்தைகள் முதல் பெற்றோர் வரை உங்களை விரும்பித் தேடி வர நீங்கள் செய்யும் மாஜிக் என்ன?

நான் எப்போதும் நின்று கொண்டே வைத்தியம் பார்ப்பேன். விளையாட்டாக பேனாவைத் தூக்கிப் போட்டுப் பிடிப்பேன். ரஜினி ஸ்டைல் என்பேன்! எப்போ டோஸேஜ் கொடுக்கணும் என்று கேட்டால் "கோலங்கள்" முடிந்தவுடன் கொடுங்கள் என்பேன்! இது எல்லாம் நோயின் பயத்தைப் போக்குவதற்கு. வருபவர்களை என்னுடன் இயல்பாகப் பழக வைப்பதற்கு. குழந்தைகளின் வியாதியை அறிவது கடினமான ஒன்று. அவர்களால் சொல்லமுடியாது. உணர்ந்துதான் கண்டுபிடிக்க வேண்டும். அதனால் அவர்கள் என்னுடன் ஒத்துழைக்க அப்படி நடப்பது உண்டு.

உடல் பருமனாவது ஒரு பிரச்னை. இது குழந்தைகளை எப்படி பாதிக்கிறது?

அளவுக்கு அதிகமான சதைப்பற்றோடு இருப்பது தான் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் என்பது தவறான கருத்து. குழந்தைகள் இப்படி ஆகக் காரணம், அவர்கள் ஓடியாடி விளையாடும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது. வீட்டினுள்ளே கம்ப்யூட்டர் கேம்ஸ், டி.வி. முன்னால் பலமணி நேரம் கழிப்பது போன்றவைதான். பெற்றோர் இருவரும் பணிக்குச் செல்லும் வீடுகளில் அவர்களுக்கே ஒரு குற்ற உணர்வு! பிள்ளையைச் சரியாக கவனிக்கவில்லையோ என இரவு நேரத்தில் அதிகமாக நெய்விட்டு சாதத்தைப் பிசைந்து ஊட்டுகிறார்கள். நிறையப் பச்சைக் காய்கறிகளைச் சேர்த்துக் கொண்டால் ஓரளவு பருமனைத் தடுக்கலாம்.

இப்போது குழந்தைகளைத் தாக்கி வரும் நோய்கள் பற்றி?

தற்சமயம் மழைக்காலம். தேங்கிக் கிடக்கும் நீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் பலவிதமான நோய்கள் வருகின்றன. கொசுக்கள்கூட ஸ்பெஷலைஸ்டாக இருக்கிறது. சுத்தமான நீரிலும் உற்பத்தியாகிறது. சிக்கன்குன்யா, டெங்கு காய்ச்சலைப் பரப்பக்கூடிய கொசுக்கள் காலை நேரத்தில் அதிகமாக உள்ளது. குழந்தைகள் காலைநேரத்தைப் பள்ளிகளில் கழிப்பதால், பள்ளிச் சீருடை உடலை முழுவதும் மறைக்கும்படி இருந்தால் நல்லது. அதாவது ஃபுல் ஸ்லீவ், ஃபுல் பான்ட் போன்றவை. இந்த மாதிரி காய்ச்சல் குறிப்பாக செப்டம்பரிலிருந்து ஜனவரிக்குள் தான் வருகிறது. அதிக வெப்பமில்லாத காலம். எப்போதும் சுத்தமான நீரை, காய்ச்சிக் குடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு அதிகமாமன வெளி உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

மருத்துவத் துறையில் உங்களை பாதித்த சம்பவம்?

பாதித்த சம்பவம் என்றால் - ஒன்று சொல்ல விரும்புகிறேன். பெற்றோர் 13-14வயது பெண் குழந்தைகளை அழைத்து வருகிறார்கள். அவர்களுக்கு என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடிவதில்லை. கடைசியாக ஸ்கேன் டெஸ்ட் செய்தால் அந்தப் பெண் குழந்தை கர்ப்பமாக இருப்பது தெரிகிறது. அதிர்ச்சியாக உள்ளது. அவர்கள் மேலைநாட்டுக் கலாசாரத்தைப் பின்பற்றுவதன் விளைவு. பெற்றோர் குழந்தைகளைக் கண்டிப்புடன் வளர்க்க வேண்டும். தேவையான அறிவுரைகளைத் தேவையான பருவத்தில் பக்குவமாக போதிக்க வேண்டும்.

பெண் குழந்தைகளின் பிரச்சனைகள் பற்றிச் சொன்னீங்க. ஆண் குழந்தைகள்! அவர்களும் பலவிதமான பாதிப்புக்கு ஆளாகிறார்களே!

உண்மைதான்! அறியாத பருவம் தெரியாமல் செய்யும் தவறுகள் பல. காரணம் பெற்றோர் தான்! குழந்தைகள் முன் சண்டை போடுவது அவர்களின் மனநிலையைப் பெரிதும் பாதிக்கிறது. சில சமயம் வன்முறையைத் தூண்டுவதாக அமைகிறது. போதைப் பொருளுக்கு அடிமையாகக் கூடிய நிலை ஏற்படுகிறது. அவர்கள் யாருடன் பழகுகிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும். அவர்கள் மனம்விட்டு பேசக்கூடிய நிலையில், நல்ல நண்பர்களாகப் பெற்றோர் இருக்க வேண்டும்.

படிப்பறிவு இல்லாத தாய்மார்கள், குழந்தை வளர்ப்பு முறையில் எதை கவனிக்க வேண்டும்?

சுத்தம் தான் முக்கியம். என் க்ளினிக்கில் எப்போதும் நான் எழுதி வைக்கும் வாசகம். "சுத்தம் சோறு போடும், அசுத்தம் ஆஸ்ப்பத்திரியில் சேர்க்கும்!" குழந்தைகளின் பால் புட்டியை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். மது பாட்டில், மருந்து பாட்டில் போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும். "குடி குடியைக் கெடுக்கும். பாட்டில் குழந்தையை கெடுக்கும்." சங்கு அல்லது ஸ்பூனில் பால் புகட்டுவது நல்லது. இவற்றைச் சுத்தமாக வைத்துக்கொள்வது எளிதுதானே!

சிலர் குழந்தைகளுக்கும் கைவைத்தியம் செய்கிறார்களே, சரிதானா?

இதில் நன்மை தீமை இரண்டும் உண்டு. உடலுக்கு ஊறு விளைவிக்காத வன்முறை இல்லாத கை வைத்தியத்தை நான் ஆமோதிக்கிறேன். உதாரணத்திற்கு, சளி இருமலுக்கு துளசிச்சாறு அல்லது சித்தரத்தை கஷாயம் என்று ஹெர்பல் மருந்து கொடுத்தால் தவறில்லை. இவை நன்மை செய்யாவிட்டாலும், தீமை ஏற்படாது. ஆனால் முறத்தில் போட்டு உரம் எடுப்பது, மெஷினுக்கு விடுவதுபோல் கிடைத்த ஓட்டைகளில் எல்லாம் எண்ணெய் விடுவது போன்ற கைவைத்தியம் ஒரு நாளும் செய்யக்கூடாது!

No comments:

Post a Comment