Pages

Tuesday, 30 July 2013

* மருந்துகளை வாங்கும் போது அவசரம் வேண்டாம்

தகவல்

பொதுவாக நாம் ஏதேனும் உடல்நிலை பாதிப்பு ஏற்படும் போதுதான் மருத்துவமனைக்குச் செல்கிறோம். உடல்நிலை பாதிக்கப்பட்டதும், நமது மனதில் ஒரு வித படபடப்பு ஏற்பட்டுவிடும். அதனால் அந்த சமயத்தில் நமது சிந்தனைத் திறன் சற்றுக் குறைந்துதான் காணப்படும். எனவே, மருத்துவமனைக்குச் செல்லும் போதும், மருந்துகள் வாங்கி அதனை பயன்படுத்தும் போதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.முதலில் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரை சந்திக்கும் போது அவர் எழுதித் தரும் மாத்திரைகள் எந்தெந்த மாத்திரைகள் எந்தெந்த நோய்காக போட வேண்டும் என்பதை கேட்டறிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் அவர் அளிக்கும் மாத்திரைகளைப் பற்றி உங்களால் தெரிந்து கொள்ள முடியும்.

பிறகு மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் மருந்தகத்தில் அந்த சீட்டினைக் காண்பித்து மருந்துகளை வாங்கிக் கொள்வோம். இது சாதாரண நோய்களுக்கு என்றால் பரவாயில்லை. இதே ஏதேனும் சிக்கலோ, விபத்தில் காயமோ ஏற்பட்டு மருத்துவமனைக்குச் செல்லும் போது அவர்கள் கொடுக்கும் மருந்துகளின் விலைகள் தாறுமாறாக இருக்கும். அப்போது ஒன்றுக்கு இரண்டு மருந்தகங்களில் விசாரித்து ஒரு மருந்தினை வாங்குவது நன்மை அளிக்கும். ஒரே மருந்து பல மருந்து நிறுவனங்களால் தயார் செய்யப்படுகிறது. அதிலும் சில மருந்து நிறுவனங்கள் அதிக  விலை வைத்து விற்கின்றன.

அதிக விலை வைத்தால் எவ்வாறு விற்பனை  செய்ய முடியும் என்று நினைக்காதீர்கள். தற்போது மருத்துவ உலகத்தில் சில மோசமான ஏமாற்று வழிகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதாவது, தங்களது நிறுவன மருந்துகளை எழுதிக் கொடுக்குமாறு மருத்துவர்களிடம் பரிந்துரை செய்வதோடு ஒரு மருந்து பரிந்துரையாளரின் பணி முடிவடைந்துவிடவில்லை. அந்த மருந்தினை அவர் எழுதிக் கொடுக்க மருத்துவருக்கோ, மருத்துவமனை நிர்வாகத்துக்கோ குறிப்பிட்ட தொகையும், அந்த மருந்தை அருகில் உள்ள மருந்தகங்களில் வாங்கி வைக்க குறிப்பிட்ட தொகையும் (இதை வாங்கி வைக்க ஏன் பணம் என்று கேட்டால்.. வேறு விலை குறைந்த மருந்து கம்பெனிகளின் மருந்துகளை வாங்கி வைக்காமல், அதிக விலையுள்ள இந்த மருந்தினை மட்டும் வாங்கி வைக்கத்தான் பணம் என்கிறது உண்மை நிலவரம்) அளிக்கப்படுகிறது.

இது யாரோ செய்த ஆய்வில் வெளியான தகவல்கள் இல்லை. முன்னாள் மருந்து பரிந்துரையாளர்கள் தொலைக்காட்சி ஒன்றில் நேரடியாகத் தோன்றி அளித்த வாக்குமூலம்தான். இதற்கு என்ன காரணம் என்று அவர்களிடம் கேட்டதற்கு, மருந்துத் துறையில் செலுத்தப்படும் அதிகப்படியான முதலீடும், அதன் காரணமாக ஏற்படும் போட்டிகளுமே என்கின்றனர்.

அவசரத்துக்கு மருந்தகங்களுக்குச் சென்று பல ஆயிரங்கள் கொடுத்து வாங்கும் சில மருந்துகள், மிகக் குறைவான விலையில் வேறு சில இடங்களில் விற்பனையாகும் விஷயம் தெரியும் போது நமது மனது மிகவும் வருத்தப்படும். இது ஏதோ நமக்கு தெரியாமல் நடந்த தவறு என்றுதான் பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால், அதற்குப் பின் மருத்துவ உலகின் மிகப்பெரிய ஏமாற்று வேலை இருப்பதை பலரும் அறிவதில்லை.

சில திரைப்படங்களில் மருத்துவ உலகம் செய்யும் மோசடிகளை படம்பிடித்து காட்டினாலும், அப்பாவி மக்கள் பலரும் தினம் தினம் இதுபோன்ற மோசடிகளால் ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

ஒரு சில மருத்துவர்கள் நோயாளிகளின் நோயைத் தீர்க்கும் மருந்துகளை மட்டுமே அளிக்கின்றனர். நோயைத் தீர்ப்பதே தங்களது கடமை என்று வாழும் மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒரு சில மருத்துவமனைகளிலேயே இருக்கும் மருந்தகங்கள் அவ்வப்போது ஒரு கணக்கெடுப்பை நடத்துகின்றன. அதாவது, அந்த மருந்தகத்தில் உள்ள ஒரு சில மாதங்களில் முடிந்து போகும் மாத்திரைகளின் பட்டியலை தயாரித்து, அம்மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களிடம் அந்த பட்டியலின் நகல் அளிக்கப்படுகிறது. அதில் உள்ள சத்து மாத்திரைகள் போன்றவற்றை அவர்களிடம் வரும் நோயாளிகளுக்கு 10, 20 என எழுதிக் கொடுத்து அந்த மாதத்துக்குள் அதனை விற்பனை செய்து முடித்துவிட வேண்டும். மேலும், உடலில் நோயும், மனதில் வலியுடனும் மருந்தகங்களுக்கு வரும் நோயாளிகள் ஒருவேளை கையில் காசில்லாமல், மருந்துகளை குறைந்த எண்ணிக்கையில் கேட்டால், இதுபோன்ற மாத்திரைகள் வேறு எங்கும் கிடைக்காது, மிகவும் அரிதானது. இருக்கும் போதே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரை செய்ய மருந்தக ஊழியர்களுக்கும் குறிப்பு அனுப்பப்படுகிறது.

இவை எல்லாம் இதுவரை வெளிச்சத்துக்கு வந்த ஒரு சில மோசடி விஷயங்கள். இன்னும் வெளிச்சத்துக்கு வராத பல இருட்டடிப்புகள் தினம் தினம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

நோய்க்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், இப்படி பல வழிகளில் ஏமாற்றப்பட்டு ஏமாளிகளாகவும் ஆக்கப்படுகின்றனர். எனவே, இனி மருந்து, மாத்திரைகளை வாங்கும் போது ஓரிரு கடைகளிலாவது விசாரித்து உங்களுக்கு ஏற்ற மருந்தினை வாங்கிப் பயன்பெறுங்கள்.

No comments:

Post a Comment